Aug 9, 2010

நிலை - வண்ணதாசன்

‘தேர் எங்கே ஆச்சி வருது?’
‘வீட்டைப் பார்த்துக்கோ.’ என்று சொல்லிவிட்டு எல்லோரும் புறப்பட்டு போகும்போது கோமு கேட்டாள்.
’வாகையடி முக்குத் திரும்பிட்டுதாம். பார்த்திட்டு வந்திருதோம். நீ எங்கியும் விளையாட்டுப் போக்கில் வெளியே போயிராத, என்ன?’
kalyanji அழிக்கதவைச் சாத்திவிட்டு எல்லோரும் வெளியே போனபோது கோமு அவர்களைப் பார்த்துக் கொண்டு உள்ளேயே நின்றாள். கம்பிக் கதவிற்கு வெளியே ஒவ்வொருவராக நகர்ந்து நகர்ந்து, தெருப்பக்கமாகப் போய்க்கொண்டிருந்தார்கள். முடுக்கு வழியாக, இங்கிருந்து தெருவைப் பார்க்க முடியாது. தெருவைப் பார்க்கவே இன்றைக்கு ரொம்ப நன்றாக இருக்கும். நிறைய ஆட்கள் இந்தத் தெரு வழியாகப் போவார்கள். பெரிய தெரு, மேலத்தெரு, கம்பா ரேழி, பேட்டை ஆட்களெல்லாம் இப்படிக்கூடிப் போவார்கள். பலூன்காரன், தேங்காய்ப்பூ, சவ்வு மிட்டாய்க்காரன், ஐஸ்காரன் எல்லாம் போவான். இன்றைக்கு ராத்திரிகூட ஐஸ் விற்பான். பாம்பே மிட்டாய்க்காரன் வருவான். விறகுக்கடையில் வண்டியை நிறுத்திவிட்டு அப்பாகூட இந்தத் தெரு வழியாக ஒருவேளை போகலாம். வருமானம் இல்லாத சிலநாட்களில் கோமு இருக்காளா?’ என்று வீட்டு வாசலில் வந்து ஓரமாக நின்று கேட்பது மாதிரி, இன்றைக்கும் வந்தால் நன்றாக இருக்கும். கோமுவுக்கு ஒரு பன்னிரண்டு வயசுப் பிள்ளை சாப்பிடுவதற்கும் கூடுதலாகவே இங்கு சோறு போடுவார்கள். அந்தத் தட்டை மூடியிருக்கிற ஈயச்சட்டியை நிமிர்த்திவிட்டு அப்பாவிடம் கொடுப்பாள். சாப்பிட்டுவிட்டு அப்பா போயிட்டு வருகிறேன் என்று சொல்லாமலே போய்விடுகிறது உண்டு. இன்றைக்கு அப்பா வந்தால் சந்தோஷமாக இருக்கும்.
வாசல் அமைதியாக இருந்தது. எதிர்த்த வீடு இரண்டிலும் கூடத் தேர்ப் பார்க்கப் போயிருந்தார்கள். எதிர்த்த வீட்டுத் தார்சாவில் ஒரே வெட்டுத்துணியாகக் கிடந்தது. தையற்காரர் கைமிஷினில் தைத்துக் கொடுத்துவிட்டுப் போயிருந்தார். தையற்காரர் உட்கார விரித்த சமுக்காளம்கூட அப்படியே வெள்ளையும் பச்சையுமாக வெட்டுத்துணி சிதறிக் கிடக்கக் கிடந்தது. எதிர்த்த வீட்டுப் பாப்பா ஸ்கூலுக்குப் போகிறது. இங்கே இல்லை, பாளையங்கோட்டைக்கு. இவளுக்கிருக்கிற பாவாடையின் கிழிசலை நாளைக்குத் தைக்க வேண்டும். வீட்டு ஆச்சி கொடுத்த கிழிந்த உள்பாவாடையையும் தைக்க வேண்டும். இந்த டெய்லர் கிழிசலைத் தைப்பாரோ என்னவோ? அழிக்கதவைத் திறந்து அந்தப் பச்சை வெட்டுத்துணியை எடுத்து வரலாம். பச்சை என்றால் திக்குப் பச்சையில்லை; லேஸ் பச்சை. புல் முளைத்த மாதிரி. வேப்பங்காய் மாதிரி. ஈர விறகுக்குத் தொலி உரித்த மாதிரி.
கதவைத் திறந்து கொண்டு போகலாம் என்றால்ம் கதவு சத்தம் போடும். பெரிய கதவைவிட இந்த அழிக்கதவு டங்டங்கென்று குதித்துக் கொண்டே போகும் சத்தத்தில் கட்டிலில் சீக்காய்ப் படுத்திருக்கிற பெரிய ஆச்சி முழித்துவிடக் கூடாது. அந்த ஆச்சி முழித்தால் பெரிய தொந்தரவாகப் போகும். பேச்சு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ‘தண்ணி எடுத்துட்டியா? கொடியில் கிடந்த துணியை உள்ளே எடுத்துப் போட்டியா? இன்றைக்கு விளக்குப்பூசைக்குப் பூக்காரன் சரம் கொண்டு வந்து வைத்தானா? அம்மாகுட்டி சாணி தட்ட வரக்காணுமே, ஏன்? தோசைக்கு எவ்வளவு அரைக்கப் போட்டிருக்கிறது? பௌர்ணமி என்ன தேதியில் வருகிறது? எதிர்த்த வீட்டில் ஆள் நடமாடுகிற மாதிரிச் சத்தம் கேட்கிறதே, யார் வந்திருக்கா?’ ஆச்சியின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல ஆரம்பித்தால் விடிந்து போகும். மேலும் கோமுவுக்கு ஆச்சி கேட்கிற எல்லாக் கேள்விகளுக்கும் எப்படிப் பதில் சொல்லத் தெரியும்?
கோமு அழிக்கதவைத் திறக்கவில்லை. அவளுக்கு ஒரு கோட்டை வேலை கிடக்கிறது. ஆற்றுத் தண்ணீர் பிடிக்க வேண்டும். அதற்கு முன் தொழுவில் நிற்கிற கன்றுக்குட்டியைப் பிடித்துக் கட்ட வேண்டும்.
கோமு தொழுவத்துக்குப் போகிற நடையில் வந்து உட்கார்ந்து கொண்டு பார்த்தாள். முன்னால் வேலை பார்த்த டாக்டர் வீடு மாதிரி இல்லை இது. அங்கே புதிது புதிதாக எல்லாத் தரையுமே வழுவழுவென்று இருக்கும். இப்படிக் கல்நடையெல்லாம் கிடையாது. இங்கே கட்டுக்குக் கட்டு கல்நடை இருக்கிறது. இந்தத் தோட்டத்துக் கல்நடை மற்ற எல்லாவற்றையும் விடக்குழி குழியாக இருக்கிறது. கழுவி விட்டால் இடம் உடனே காயாது. இந்தச் சின்னச் சின்ன அம்மி கொத்தினதுமாதிரிக் குழிகளுக்குள் கொஞ்ச நேரம் ஈரம் இருக்கும். குளிர்ந்து கிடக்கும்.
கோமுவுக்கு வீட்டை விடவும் இந்தத் தோட்டம் பிடித்திருந்தது. ஒடுக்கமான இந்த இடத்துக்குள்ளேயே சின்னச் சின்னதாக ஒரு கருவேப்பிலை மரம், முருங்கை மரம், தங்க அரளிமரம் மூன்றும் இருந்தது. பெரிதாக வளராமல், ஆள் உயரத்துக்கு மேலே போகாமல், வளர்கிற பிள்ளைகள் மாதிரி அவை இருந்தன. அசலூரில் இருந்து விருந்தாட்கள் வந்தபோது, கோமுவும் வந்திருந்த சிறு பிள்ளைகளும் தங்கரளிப் பூவையும் கருவேப்பிலைப் பழத்தையும் கொண்டுதான் வீடு வைத்து விளையாடினார்கள்.
கோமு இங்கே வேலைக்கு வரும்போது கன்றுக்குட்டி ரொம்பச் சிறுசாக இருந்தது. பால் குடித்து விட்டு அது ஆளில்லாத தோட்டத்தில் காலை உதறி உதறித் துள்ளிகொண்டு ஓடுவதையும், மறுபடியும் அம்மா ஞாபகம் வந்துபோல், தொழுவுக்கு ஓடிவந்து மடுவைச் சுவைப்பதையும் அடுத்த நிமிஷம் வாலைத் தூக்கிக் கொண்டு ஓடுவதையும் பார்க்கப் பார்க்க ஆசையாக இருக்கும். அப்போது இருந்த செவலை நிறம் போய் ரோமம் எல்லாம் உதிர்ந்து ஜாடை, குணம் எல்லாம் இப்போது மாறிவிட்டது. நிறையக் கள்ளத்தனமும் வந்து விட்டது. ஆள் வருகிற சத்தம் கேட்டால் பசுவுக்கு அந்தப்புறம்போய் அழிப்பக்கம் நின்றுகொள்கிறது. இழுத்துக் கட்ட முடியவில்லை. செக்கு மாதிரி அசையாமல் நிற்கிறது. என்றைக்கு அது கயிறை அத்துக் கொண்டு போய்ப் பாலைக் குடித்து, கோமுவுக்கு ஏச்சு வாங்கிக் கொடுக்கப் போகிறதோ, தெரியவில்லை.
கோமு, காலை மிதித்து விடுமோ என்கிற பயத்துடன், கயிறை நீளமாகத் தள்ளிப் பிடித்து இழுத்துக் கொண்டு தொழுவில் இன்னொரு பக்கத்தில் கட்டினதும், அது முட்டவருவது போல் அவள் பக்கம் வந்து முழங்கைப் பக்கம் நக்கிக் கொடுக்க ஆரம்பித்தது. கருநீலமான அந்த வழுவழுப்பான நாக்கு படப்படக் கோமுவின் கையில் கூச்சமெடுத்தது. அது இன்றைக்கு அவளிடம் ரொம்பப் பிரியமாக நடந்து கொண்டது போல் இருந்தது. கொம்பு முளைக்கப் போவது போல் புடைத்த தலையைச் சொறிந்தபடி, இன்னொரு கையைக் கழுத்தில் போட்டு ‘லட்சுமீய்’ என்று அவளே செல்லமாக ஒரு பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டு கட்டிக் கொண்டாள். கன்றுக்குட்டி சட்டென்று தலையை உலுக்கிப் பிடுங்கிக் கொண்டபோது ஒன்று இரண்டு மூன்று என்று தொடர்ந்து வேட்டுச்சத்தம் கேட்டது.
தேர் பக்கத்தில் வந்திருந்தால்தான் இப்படி உஸ்ஸென்று சீறிக்கொண்டு வேட்டு வெடிப்பது கூடக் கேட்கும். எங்கேயிருந்து பார்த்தாலும், இப்படி வேட்டு வானத்தில் புகைந்து கொண்டு போய் வெடிப்பது தெரியும். ஏரோப்ளேன் பார்க்க ஓடி வருகிற மாதிரி, இதையும் வீட்டுக்குள்ளேயிருந்து ஓடிவந்து எல்லோரும் அண்ணாந்து பார்க்கலாம்.
கோமு ஓட்டுச்சாய்ப்புக்கு வெளியே வந்து வானத்தைப் பார்த்தபடியே நின்றாள். நீலமும் வெள்ளையுமாகக் கிடந்த வானத்தில் ஒரு கொத்து போல நாலைந்து பெரிய கலர் பலூன்கள் மாத்திரம் அலைந்து கொண்டிருந்தன. எத்தனை பலூன், எத்தனை ஜவுளிக் கடை நோட்டீஸ், பொருட்காட்சி நோட்டீஸ் எல்லாம் இன்றைக்குப் பறக்கும். மேலே வீசப்படுகிற அந்தப் பச்சை சிவப்பு மஞ்சள் நோட்டீஸ்கள் மடங்கி மடங்கிக் கோலாட்டு அடிப்பதுமாதிரி எவ்வளவு அழகாகக் கீழே வரும். கோமு அந்த நோட்டீஸைப் பொறுக்க எவ்வளவு பிரயாசைப் பட்டிருக்கிறாள். புத்தம் புதிய நோட்டீஸின் ஒரு பாகம் மாத்திரம் காலில் மிதிபட்டு மணலும் சரளும் முள்ளுமுள்ளாகக் குத்திக் கிடக்கும்போது எவ்வளவு கஷ்டமாக இருக்கும். அதை எடுத்துப் பார்க்கும்போது இப்போது அந்தப் பலூன் கூட விலகி நகர்ந்துவிட்டது. வானம் மட்டும்தான் மேலே, கடல் மாதிரி, குளம் பெருகினது மாதிரி.
O O O
தேரோட்டத்திற்காகத் தண்ணீர் திறந்து விட்டிருக்கிறானோ என்னவோ! இன்றைக்குக் குழாயில் எடுக்க எடுக்கத் தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. கொப்பரை, தொட்டி, மண்பானை, எவர்சில்வர் குடம் எல்லாவற்றிலும் தண்ணீர் எடுத்து ஊற்றின பிறகு கூடக் குடம் நிரம்பிச் சரசரவென்று பெருகிக் கொண்டிருந்தது. என்ன செய்கிறது என்று தெரியவில்லை. கோமு குழாய்ப்பக்கம் நின்றுகொண்டே இருந்தாள். குடத்திலிருந்து பாதத்தில் தண்ணீர் வழிந்து, காலுக்கடியில் குளிர்ந்து பெருகிக் கொண்டிருக்கும்போது-
‘நீ ஒத்தையிலயா வீட்டில இருக்க, தேர்ப் பாக்கப் போகலையா?’ என்று யாரோ கேட்டார்கள். சத்தம் மேலே இருந்து வந்தது.
‘மேலே பாரு - இங்க இங்க!’ பின்னால் இந்த வீட்டுச் சுவரை ஒட்டி இருக்கிற இன்னொரு வீட்டு மச்சில் இருந்து அந்த வீட்டு அக்கா சத்தம் கொடுத்தாள். அந்த அக்காவும் இன்னும் ரெண்டு மூணு பேரும் மச்சுத் தட்டோட்டியில் நின்று தேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மச்சும் இருந்து, சமைந்து பெரிய மனுஷியான அக்காக்களும் இருக்கிற நிறைய வீடுகளில், அவள் இதைப் பார்த்திருக்கிறாள். கோமுகூட ஒரு தடவை அப்படி மச்சுத்தட்டோட்டியில் நின்று தேர் பார்த்திருக்கிறாள். அவள் பார்த்த சமயத்தில் அந்த மச்சில் இருந்து தேர் முழுவதும் தெரியவில்லை. இருக்கிற ஆட்கள் தெரியவில்லை. வடம் கண்ணில் தட்டுப் படவில்லை. தேரின் மேலே உள்ள தட்டு அலங்காரமும், உச்சியிலுள்ள கும்பமும், சிவப்புக் கொடியும், முக்குத் திரும்பும்போது தேரின் விலாவும் வாழைமரமும் தெரிந்தது. அதுவும் நன்றாகத்தான் இருந்தது. எங்கே பார்த்தாலும் நம்மைச் சுற்றி மச்சுத் தட்டோட்டியும், புகைக் கூண்டும், ஓட்டுக் கூரையும், இடையில் சில இடங்களில் வேப்பமரமும், வேப்பமரத்துக்கு அந்தப்புறம் இன்னொரு ஓட்டுச்சிவப்பும், இதுக்கு மத்தியில் ஒளிந்து கொண்டு தலையை மாத்திரம் தூக்கிப் பார்ப்பது போலத் தேர் வருவதும் நன்றாகத் தான் இருக்கும். இந்த வீட்டு மச்சில் போய்ப் பார்க்கலாம் என்றுகூடத் தோன்றியது. அந்த வீட்டிற்கு வழி இந்தப் பக்கம் இல்லை. தெருவைச் சுற்றி முன்பக்கமாகப் போக வேண்டும். வீட்டைப் போட்டுவிட்டு அப்படிப் போக முடியாது. குடம், வாளி எல்லாவற்றையும் தூக்கி உள்ளே வைத்துவிட்டு எல்லோரும் வரும் வரை பேசாமல் நடையில் உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்.
O O O
கோமு நடையில் உட்கார்ந்திருக்கும் போதே பையப் பைய இருட்டி விட்டது. எப்படி இருட்டு வந்தது என்றே தெரியவில்லை. தேரோட்டமும் இன்றைக்குத்தான். பௌர்ணமியும் இன்றைக்குத்தான். நல்லவேளை, இரண்டும் ஒரே நாளில் வந்தது. இல்லாவிட்டால் இரண்டு நாளுக்கு முந்தின ராத்திரியும் வீடு மெழுக வேண்டும். அடுப்படி கழுவ வேண்டும். எல்லார் சாப்பாடும் முடிந்து அடுப்படி கழுவுவதற்குள், தூக்கம் தூக்கமாய் வரும். குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால் பைப்பில் வேறு தண்ணீர் அடிக்க வேண்டும்.
இந்த வீட்டு நடையில் கோமு இப்படித் தனியாக வாசலில் உட்கார்ந்ததே இல்லை. இன்னும் ஏழு மணி ஆகாத இருட்டுக்குள் உட்கார்ந்திருப்பது கூடப் பயமாக இருந்தது. நிலாவெளிச்சம் இருக்கிறது என்றாலும் இப்படி யார் ஒத்தையில் இருக்க முடியும்? இவள் உட்கார்ந்திருந்த நடையை ஒட்டி இவள் ஆவிச் சேர்த்துக் கட்டுவதற்குக் கஷ்டப்படுகிற மாதிரி வழுவழு என்று ரெண்டு மரத்தூண் இருந்தன. அந்த ரெண்டின் நிழலும் வாசல் பக்கம் ரெண்டு பள்ளம் தோண்டிக் கோமுவை நடுவில் உட்கார்த்தினது போல விழுந்திருந்தன. எதிர்த்தவீட்டிலும் நான்கு கல்தூண்கள் ஊதாவாகக் கலர் அடிக்கப்பட்டு நின்றன. இப்படி உயரம் உயரமாக இருட்டுக்குள் அவளைச் சுற்றி இருக்கிற தூண்கள் ஒரு பயங்கரமான பிராணி பின்னங்கால்களை ஊன்றி நடந்து வருவது மாதிரி நிற்கிறதாகப் பட்டது. அந்த இடத்தைவிட்டுக் கொஞ்சம் அசைந்தால்கூட எல்லாம் சேர்ந்து ஒரே கவ்வாகக் கவ்வி அவளைப் பிடித்துக் கொள்ளும் என்று தோன்றியது. உள்ளே கட்டிலில் சீக்காகப் படுத்திருக்கிற பெரிய ஆச்சியுடன் பேசுவது ஒன்றுதான் வழி.
‘கூப்பிட்டேளா ஆச்சி?’ கோமுவைக் கூப்பிடாவிட்டாலும், ஆச்சி படுத்திருக்கிற கட்டில் பக்கம் தானாகப் போய், ஸ்விட்சைப் போட்டாள். ஒரு குதி குதித்துப் போட்ட பிறகுதான் ஸ்விட்ச் எட்டியது. எலக்ட்ரிக் லைட் வெளிச்சத்தின் கூச்சத்தில் கண்ணை இடுக்கிக் கொண்டு ‘யாரது?’ என்று ஆச்சி எழுந்திருந்து உட்கார்ந்தாள்.
வாசலில் இருந்த பயம் இப்பொழுது முழுசாகக் குறைந்துபோய், கோமு பெரிய ஆச்சியுடன் பேச ஆரம்பித்தாள். எல்லோரும் வெளியே தேர்ப் பார்க்கப் போயிருக்கிற விபரத்தைச் சொன்னாள். அப்போதே போய்விட்டார்கள் என்றும் இது வருகிற நேரமென்றும் சொன்னாள். ‘கூட்டம் ஜாஸ்தியா?’ என்று ஆச்சி கேட்டதற்கு, ‘எக்கச்சக்கம் கூட்டம். தெரு அடைச்சுக் கோடிச்சனம் போய்ட்டு வருது’ என்று சொன்னாள். ‘நீ தேர்ப் பார்க்கலையா?’ என்று ஆச்சி கேட்டதும் கோமுவுக்கு ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. ‘பார்க்கணும்.’ என்றும், ‘எல்லோரும் வந்த பிறகு போகணும்’ என்றும் ‘ஜோலி இதுவரை சரியாக இருந்தது’ என்றும் சொன்னாள். ‘ஐயோ பாவம். நீயும் பச்சைப் பிள்ளைதானே. போகணும் வரணும்னு தோணத்தானே செய்யும். போயிட்டு வா, போய்ப் பார்த்துட்டுவா, அவங்க வரட்டும்’ என்று சொல்லிவிட்டு மறுபடியும் படுத்துக் கொண்டாள்.
கோமுவுக்கு ஆச்சியின் வார்த்தைகள் மேற்கொண்டும் சந்தோஷம் கொடுத்தன. ‘ஆச்சி, குடிக்கறதுக்கு வென்னிகின்னி வேணுமா?’ என்று கேட்டாள். ‘இப்போ ஒண்ணும் வேண்டாம்!’ என்று ஆச்சி சொல்லியும் கோமுவுக்குச் சமாதானம் ஆகவில்லை. ‘போய்ட்டு வா, போய்ப் பார்த்துட்டு வா’ என்று உத்தரவு மாதிரி ஆச்சி திரும்பத் திரும்பச் சொன்னது கோமுவுக்குப் புல்லரித்தது. ஆச்சி பேச்சு கொடுக்காமல் படுத்துக் கொண்டது கோமுவுக்குச் சங்கடமாக இருந்தது. கோமு மெலிந்து நீண்டிருக்கிற பெரிய ஆச்சியின் கால்களை மெதுவாக ஒத்தடம் கொடுக்கிறது மாதிரிப் பிடித்துவிட ஆரம்பித்தாள்.
வாசலில் கிருகிரு மிட்டாய்க்காரன் சத்தம் கேட்டது. இன்றைக்கும் கூட அவன் அதே நேரத்துக்குத்தான் வந்திருக்கிறான். கோமு இந்த வீட்டுக்கு வேலைக்கு வந்த நாளில் இருந்து, அநேகமாகத் தினசரி ஒவ்வொரு ராத்திரியும், கிட்டத்தட்டத் தோசைக்கு அரைக்கிற நேரத்தில், அவன் இப்படி மிட்டாய் விற்றுக் கொண்டு போவதைப் பார்க்கிறாள். இந்தத் தெருவில் சரியாக வெளிச்சம் கூடக் கிடையாது. இந்த வெளிச்சம் குறைவிற்குள் அவன் வெறுமனே கிருகிருவென்று கையில் உள்ளதைச் சுற்றிக் கொண்டு, இன்னொரு கயிற்றில் கையிலிருந்து தராசு மாதிரித் தொங்குகிற வட்டச் சுளவுத் தட்டில் கத்தரிக்காய் மிட்டாய், சீனிக்குச்சி, தேங்காய்ப்பூ, சம்மாளிக்கொட்டை எல்லாம் இருக்க போகிறான். நடுவில் சிமினியில்லாமல் எரிகிற பாட்டில் விளக்கு ஒன்றின் வெளிச்சம் புரண்டு புரண்டு நடுங்கி, தட்டில் மிட்டாய்க்கு மத்தியில் கொஞ்சம் சில்லறை கிடப்பதைக் காட்டும். கோமுவின் அப்பா மாதிரித்தான் இவனும் பார்ப்பதற்கு இருக்கிறான். இரண்டு பேரும் வேட்டிதான் கட்டியிருப்பார்கள். சட்டை கிடையாது. தலைப்பாகை உண்டு. அதற்குப் பதிலாக யாரும் கூப்பிடாமலே வீடு வீடாக உள்ளே வந்து, ஒவ்வொரு வளவிலும் கொஞ்சநேரம் நின்று கிருகிருவெனச் சுற்றுவான். யாராவது வாங்கினால் உண்டு.
இந்த வீட்டு வாசலில் முடுக்குப் பக்கம் இருக்கிற கல்லை ஒட்டித்தான் எப்போதும் அவன் நிற்பான். அழிக்கதவு வழியாக முகத்தைப் புதைத்துக் கோமு பார்த்தபோது, அவன் அங்கேதான் நின்றிருந்தான். யாருமே இல்லாத வாசலில் இன்னும் அந்தத் தூண்கள் கால்கள் தூக்கிப் பயம் காட்ட, தாயக்கட்டத்தில் மலை ஏறின காய் மாதிரி அவன் மிட்டாய்த்தட்டும் விளக்கு வெளிச்சமுமாக நின்றான். கோமுவுக்கு ரோஸ் ரோஸான கம்மாளிக்கொட்டை வாங்கலாமா என்றிருந்தது. அவளுக்கு நாலணா திருவிழாத்துட்டுக் கொடுத்திருக்கிறார்கள். ‘செலவழிச்சிராதே, அவ்வளவுத்தையும்!’ என்று எச்சரிக்கை பண்ணியே கொடுத்திருக்கிறார்கள். ஐந்து பைசாவுக்கு வாங்கினால் கூட ஐந்து கொட்டை கொடுப்பான். ‘வாங்கிச் சாப்பிடலாமா?’ கோமுவுக்கு என்ன செய்வது என்று ஓடவில்லை. உள்ளே தொட்டிக்கட்டு மாடக்குழிக்குப் போய், அந்த முழு நாலணாவை மனசே இல்லாமல் எடுத்துக் கொண்டு வந்தபோது அவனை வாசலில் காணோம். முடுக்கு வழியே சத்தம் மாத்திரம் கிருகிருவென்று தெருவைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தது. போனதுகூட நல்லதுக்குத்தான். இல்லாவிட்டால் எல்லாம் செலவழிந்திருக்கும். சில்லரை மாற்றிவிட்டால் கையில் துட்டுத் தங்காது.
எல்லோரும் ரொம்பச் சந்தோஷமாக வந்தார்கள். கூட்டத்துக்குள் ஒருத்தருக்கொருத்தர் பேசுவதற்காகச் சத்தமாகப் பேச ஆரம்பித்து, அப்படியே வீட்டுக்கு வந்த பிறகும் பேசிக்கொண்டும் வந்தார்கள். தனித்தனியாய்ப் போன எதிர்த்த வீட்டுக்காரர்கள்கூட இருட்டுக்குள் ஒருத்தருக்கு ஒருத்தர் துணை என்று சேர்ந்து வந்தார்கள். எல்லோர் வீட்டிலும் ஒரே சமயத்தில் லைட் போட்டுக் கொண்டதால் வாசலே வெளிச்சமாகி விட்டது. பலூன் மொரமொரப்பு, ஊதல் சத்தம் எல்லாம் கோமுவைத் தாண்டிப் போயின.
தேர் ஒரே நாளில் இந்த வருசம் நிலைக்கு (நிலையத்துக்கு) வந்துவிட்டதாம். இப்படித் தேர் ஒரே நாளில் ஓடி நிலைக்கு நின்று ஒன்பது வருஷம் ஆயிற்றாம். கூட்டமானால் சொல்லி முடியாதாம். பள்ளும் பறையுமாகக் கீழ்ச்சாதிச் சனக்கூட்டம் இந்தத் தடவை ஜாஸ்தியாம். நகரக்கூட ‘இங்க அங்க’ இடமில்லையாம். லாலா-சத்திரமுக்கில் இருந்து ராயல் டாக்கீஸ் முக்கு வரை தேர் பச்சைப்பிள்ளை மாதிரி குடுகுடுவென்று ஒரே ஓட்டமாக ஓடியதாம். தெப்பக் குளத்தெரு அம்பி மாமா வீட்டுத்தட்டோட்டியில் நின்று பார்த்தார்களாம். தேர் அசைந்து வர்ர மாதிரி என்கிறது சரியாகத் தான் இருக்கிறதாம். அவ்வளவு அழகாம் அது.
கோமு எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே நின்றாள்.
வீட்டுக்குள் நுழைவதற்கு முன் தேர் பார்த்தவர்களில் ஒருத்தருக்கு ஒருத்தரே மாறி மாறி இவ்வளவையும் பேசிவிட்டு நடை ஏறினார்கள். நடை ஏறும் சமயம் கோமு சிரித்துக் கொண்டே கைப்பிள்ளையை வாங்கின பொழுது -
’என்னடி பண்ணிக்கிட்டு இருந்தே இவ்வளவு நேரம், ஆற்றுத் தண்ணீர் பிடிச்சு வச்சியா இல்லையா?’ என்று தெய்வு ஆச்சி கேட்டாள்.
‘பிடிச்சாச்சு’ என்று கோமு சொன்னதைக் கேட்காமலேயே எல்லோரும் உள்ளே போனார்கள். கோமு மறுபடியும் வாசலிலேயே உட்கார்ந்தாள்.
‘துவையலுக்குப் பொரிகடலை வேணும், தேங்காய் கூடக்  காணாது. பிள்ளையைக் கொடுத்துட்டுக் கடைக்குப் போயிட்டு வா’- உள்ளேயிருந்து சத்தம் வந்தது.
O O O
கோமு பொரிகடலையும் தேங்காயும் வாங்கின கையுடன் தேரையே பார்த்து கொண்டு நின்றாள். தேர் நிலைக்கு வந்து நின்றிருந்தது. ரோட்டில் கார், பஸ் ஒன்றுமில்லாமல் அகலமாக இருந்தது. தேரின் வடம் ஒவ்வொன்றும் நீளம் நீளமாக அம்மன் சன்னதி வரைக்கும் பாம்பு மாதிரி வளைந்து வளைந்து கிடந்தது. தேர் சகல அலங்காரங்களுடனும் தோரணங்களுடனும் வாழைமரத்துடனும் நிலவுவெளிச்சத்தில் மௌனமாகப் பேசாமல் நின்றது. கோமுவோடு கோபித்துக் கொண்டு சண்டை போட்டது போல் தோன்றியது. தேருக்குக் கீழே காஸ்லைட் வைத்துக்கொண்டு, இரண்டு மூன்று போலீஸ்காரர்கள் வடத்துக்குமேல் உட்கார்ந்திருந்தார்கள். வடத்துக்கு மேல் இப்படி குந்த வைத்து உட்கார்கிறதே பாவம். அதோடு அவர்கள் பீடியும் குடித்துக் கொண்டிருந்தார்கள். கோமுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. தேர்ப்பக்கத்தில் போய்ப் பார்க்கவும் பயமாக இருந்தது. தேர்ப்பக்கத்தில் போக வேண்டும். ஒரு மாதிரி எண்ணெய் மக்கு அடிக்கும் தேரில். அது நன்றாக இருக்கும். போலீஸ்காரர்கள் பிடித்துக் கொண்டால் என்ன பண்ண?
கோமு மறுபடியும் பையைத் தொங்கப் போட்டுக் கொண்டு தள்ளிப்போய்ப் பார்த்தாள். புதிதாக கலர் அடித்த நாலு குதிரையும் பாய்கிற மாதிரிக் காலைத் தூக்கிக் கொண்டிருந்தது. அவளுக்கு வெள்ளைக்குதிரைதான் பிடித்திருந்தது. அந்த வெள்ளைக் குதிரையில் ஏறிக் கொண்டால் மானம்வரை பறந்து போகலாம். ஏரோப்ளேன் மாதிரி போகலாம். கோமு சிரித்துக்கொண்டே தள்ளித் தள்ளிப் பின்னால் போய்க்கொண்டிருந்தாள். தென்னை ஓலையைத் தரையில் தடவித் துழாவுகிற குட்டியானை தும்பிக்கை மாதிரி வடம் கிடக்கிற இடத்துக்கு வந்ததும் கோமுவுக்குத் தேர் இழுக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. தோளில் பையை நன்றாகக் கக்கத்துக்குள் கொருத்துப் போட்டுக்கொண்டு, குனிந்து சவுரி சவுரியாக நுனியில் பிய்த்திருந்த வடத்தைத் தூக்கிப் பார்த்தாள். முடியவில்லை. தொட்டுக் கும்பிட்டுக் கொண்டு கோமு நிமிர்ந்து பார்த்தாள்.
தேர் நிலையத்துக்குள் இருந்து கோமுவையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தது.
- சுவடு

தட்டச்சு : சென்ஷி
flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

9 கருத்துகள்:

Jegadeesh Kumar on August 9, 2010 at 2:14 PM said...

அற்புதமான கதை. சுஜாதா தனக்குப் பிடித்த கதைகளில் ஒன்றாக இதைச் சொல்லி இருக்கிறார்.
பகிர்வுக்கு நன்றி.

ராம்ஜி_யாஹூ on August 9, 2010 at 5:07 PM said...

அற்புதமான கதை, எவ்வளவு ஆண்டுகள் எத்தனை தடவை திருப்பி திருப்பி படித்தாலும் எனக்கு அலுக்காத கதை.
பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

முடிந்தால் பிணம் தூக்கி கதையும் பகிருங்கள்.

ராம்ஜி_யாஹூ on August 9, 2010 at 5:09 PM said...

இன்றுதான் உங்கள் வலைப்பக்கத்தின் தலைப்பை பார்த்தேன்- அணையா சுடர்கள் அல்லது அழியா சித்திரங்கள், அழியா எழுத்துக்கள் என்று அல்லவா இருக்க வேண்டும்

Ramprasath on August 10, 2010 at 8:59 AM said...

@ராம்ஜி
மௌனியிடம்தான் கேட்கவேண்டும் :)

Aishwarya Govindarajan on March 31, 2011 at 2:59 AM said...

சுஜாதாவின் பேவரைட்களில் ஒன்று :-).ஏதோ அழகாய் வரைந்து வைத்து அதன் வழி கதை சொன்னது போன்ற உணர்வு,அன்றாடம் நிகழும்,நம் பார்வையிலிருந்து தப்பிப் போகும் சிறிய நிகழ்வுகள் கூட அழகாக.அதனால்தான் வண்ணதாசனோ?! :-)

Srikanth Ravi on September 14, 2015 at 9:28 PM said...

கோவில்களும் அவைகளை சுற்றிய நாகரிகமும் எப்படிப் பட்டன, தேர் என்பது எப்படி மனிதர்களின் கற்பனைகளுக்கு தீனி போடுகிறது என்பதெல்லாம் மிக அழகாக வடிவாக்கப் பட்டிருக்கிறது. உயர்ந்த ரசனை உயர்ந்த எழுத்து.....

Unknown on May 9, 2018 at 5:24 PM said...

எங்கள் ஊர் தேர்த்திருவிழாவும் வைகாசி பௌர்ணமி
நாளில் தான் நடைபெரும் மேலும் இத்தேர்திருவிழாவிற்காக காத்திருத்தல் கூட சுகமே ஏனெனில் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பே உறவினர்கள் எல்லாம் வந்து விடுவார்கள் பால்யத்தில் உறவினர்களின் வருகையை எண்ணி உவகை கொண்டவன் உறவுகளை சந்திப்பதை தவிர்க்கவே இப்போது திருவிழாவை தவிர்க்கிறேன் Then this story play my nervous

rajkumar on January 3, 2022 at 7:22 PM said...

மூன்றாம் பிறை படத்தில் நாயகன் தொலைந்துபோன தன் 'பிள்ளை'யைத் தேடி ஊரே சுற்றி அலைவான். இனி தேட இடம் ஏதும் இல்லை என்ற நிலையில் வீடு திரும்ப, வீட்டில் அவள் இருப்பாள். அழுகையும் சந்தோஷமும் அலைமோத அப்படியே உறைந்து நிற்பான். தேரும் அப்படித்தான், தன் தெய்வத்தைக் கண்டே நிலைகொண்டது!
நெஞ்சில் நிலைகொண்ட கதை.

ஜனார்த்தனம் க on March 25, 2022 at 11:47 AM said...

அருமையான கதை.நினைவுகளை செதுக்கி வார்த்தைகளாக வடித்த அற்புதத்தை என்னென்பது.தேர் நிலைக்கு வந்தாலும் நினைவுகள் நிலை கொள்ளாது ஓடிக்கொண்டே இருக்கிறதே.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்