Jan 11, 2011

நான்காவது கனவு - யுவன் சந்திரசேகர்

யோசித்துப் பார்க்கும்போது அமானுஷ்யம் என்னும் ஒன்றே கிடையாதோ எனத் தோன்றுகிறது. சென்னையின் புறநகர்த் தெருவில் நடந்தவாறு, காதோரம் உள்ளங்கையில் எதையோ வைத்துக்கொண்டு, சற்றே சித்தம் பிறழ்ந்தவன்போலத் தனக்குத்தானே உரத்துப் பேசிக்கொண்டு போகும் தன் பேரன் வாஸ்தவத்தில் அமெரிக்காவிலுள்ள அவனுடைய பேரனுடன் yuvanஉரையாடுகிறான் என்று அறுபதுகளின் கடைசியில் அமரராகிவிட்ட என் தாத்தா இப்போது பார்த்தால் நம்புவாரா?

அல்லது, என் அத்தையை எடுத்துக்கொள்ளுங்கள். அவள் பெயர் வனஜாட்சி. இளம் வயதிலேயே  கணவரை இழந்தவள். ஒரே மகன் பட்டாளத்தில் இருந்தான். இன்னும் மணமாகாதவன். 71 பாகிஸ்தான் யுத்தத்தின்போது அத்தை எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள் - என்னுடைய தாத்தா திவசத்துக்கு ஆசாரச் சமையலில் உதவ. அவள் வந்த மறுநாள் வெள்ளிக்கிழமைக் காலை எங்கள் வீட்டுச்சுவரில் தொங்கிய முகம் பார்க்கும் கண்ணாடி தவறி விழுந்து நொறுங்கியது. என்னுடைய அம்மா கண்ணாடிச் சில்லுகளை ஒற்றியெடுக்கச் சாணி உருண்டை தேடிப் போனாள். நியாயமாக அந்த வேலையைச் செய்ய விரைபவள் அத்தையாகத் தான் இருக்கும்-அவளோ நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

உத்தரத்தைப் பார்த்து நிலைகுத்தின விழிகளிலிருந்து கரகரகரவென்று கண்ணீர் ஊற்றியது. என்னுடைய அப்பா அவளருகில் சென்று தோளைத் தொட்டு, என்னாச்சு வனஜீ என்று கேட்க முனைந்தார்.

'போயிட்டாண்டா, என் ஒத்தெப் பிள்ள போயிட்டாண்டா. என்னை ஒத்தெ மரமா நிக்கவிட்டுட்டுப் போயிட்டாண்டா' என்று குமுறி அழுதாள் அத்தை. நீண்ட நெடுங்காலமாகக் கைம்பெண்ணாய் இருந்துவரும் அவளுக்கு ஏதோ காரணத்தால் திடீரென்று மரை கழண்டுவிட்டதுபோலிருக்கிறதே என்று நாங்களெல்லாம் கவலைப்பட்டோம்.

ஆனால் சரியாக மறுநாளைக்கு மறுநாள் மிலிட்டரியிலிருந்து தந்தி வந்து சேர்ந்தது. கிழக்குப் பாகிஸ்தானில் வைத்து லட்சுமணன் - அதுதான் வனஜா அத்தையின் மகன் - எதிரியின் பீரங்கி வெடியில் அகப்பட்டுச் சிதறிவிட்டான் என்று சொன்னது. தேச சேவைக்கு மகனை அர்ப்பணித்த தாய்க்குத் தன் மரியாதையையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தது இந்திய அரசாங்கம்.

எங்களுக்கானால் ஆச்சரியம் தாங்கவில்லை. அது என்ன மாதிரியான தொலைத்தொடர்பு என்று புரியவும் இல்லை... எதற்கு இவ்வளவும் சொன்னேன் என்றால், ஒரு தலைமுறைக்கு அமானுஷ்யமாகத் தெரிவது இன்னொரு தலைமுறைக்கு நடைமுறையான விஷயமாக இருக்கிறது என்பதற்காகத்தான்.

நான் யார் என்றே சொல்லாமல் என் யோசனைகளை மட்டுமே சொல்லிக்கொண்டு போகிறேன், இல்லையா? அதன் காரணமாக, திடும்மென்று ஆரம்பித்து நான் சொல்லிவரும் விஷயங்களில் லேசாகப் புகைமூட்டம் படர்கிறது, இல்லையா? என்னைப் பற்றிய தகவல்களைச் சொல்லிய பிறகும், நான் சொல்லப்போகிற விஷயத்தை விஸ்தாரமாகச் சொல்லி முடித்த பிறகும் தற்போது நிலவும் இதே குழப்பம் தொடர்வதற்கான வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது.

இத்தனை வருஷம் கழித்து எனக்கே சற்றுக் குழப்பமாகத்தானே இருக்கிறது.

நான் சுந்தரேசன். தற்போது வயது அறுபத்தொன்று. விற்பனைப் பிரதிநிதியாகத் தொடங்கி, அகில இந்திய நிறுவனமொன்றின் நிர்வாக இயக்குநர் பதவிவரை உயர்ந்தவன். சென்ற வருடம்தான் ஓய்வுபெற்றேன். முதன்முதலில் கர்நாடகத்தில் உள்ள ஒரு மதுவடிப்பு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு சர்வதேச மென்பான நிறுவனம். அதன் பிறகு சிகரெட் நிறுவனம். கடைசியாக வேலை பார்த்த நிறுவனம் போதைப் பாக்குக்குப் பெயர் பெற்றது. இன்றைக்கு இந்தியா முழுவதும் இளைஞர்கள் சதா மென்றுகொண்டும் துப்பிக்கொண்டும் இருக்கிறார்கள் என்றால் அதில் என்னுடைய பங்களிப்பு கணிசமானது.

வாழ்நாள் முழுவதும் லாகிரி வஸ்துக்களை விற்றுவந்திருக்கிறேனே தவிர, அவற்றில் எதையும் நான் ருசிபார்த்ததுகூடக் கிடையாது.

எங்க சுந்தரம் மாதிரி ஒருத்தனைப் பார்க்க முடியாது. பாக்குத் துண்டு பல்லுலெ படாதே என் தங்கத்துக்கு. என்று இருபத்தைந்து வருடத்துக்கு முன் காலமாகிவிட்ட என் அம்மா அடிக்கடி சொல்வாள். பிதுர்லோகத்திலிருந்து பார்க்கும்போதும் அவள் என்னை எண்ணிப் பெருமைப்படத் தான் செய்வாள் என்று நம்புகிறேன். இந்த மாதிரி நம்பிக்கைகளுக்கும் நான் 'மிஸ்ட்டர் டீட்டோட்டல' ராக (அப்படித்தான் என் கடைசி நிறுவனத்தின் உபதலைவர் ஏ.கே. ஸின்ஹா என்னை அழைப்பார்) இருப்பதற்கும் நேரடித் தொடர்பு ஏதாவது இருக்கிறதோ என்னவோ?

ஆனால் எனக்குப் பிடித்தமான லாகிரி வேறு ஒன்று இருந்தது. தொழில் சார்ந்து ஊர் ஊராக அலையத் தொடங்கியவன் நான். பதவி உயர்ந்தபோது மாநிலம் மாநிலமாகத் திரிந்தவன். ஏழெட்டு முறை வெளிநாடு கூடச் சென்று வந்திருக்கிறேன், ஸிலோன், மாலத் தீவு, சிங்கப்பூர், பங்களாதேஷ், நேபாளம் என்கிற மாதிரி. அந்த நாட்களில், போகிற இடமெல்லாம் பரிச்சயமாகிற மனிதர்கள் விதவிதமான சம்பவங்களைக் கதைபோலச் சொல்வதைக் கேட்பதில் அலாதியான போதை எனக்கு.

சொன்னால் வியப்பீர்கள், யாருக்குமே சொல்வதற்கு ஒரு பேய்க்கதையோ பாம்புக்கதையோ இருக்கிறது அல்லது பரம்பரைப் பெருமைக் கதை. மேற்சொன்ன எதுவும் இல்லையா, ஒரு ராஜாராணிக் கதை நிச்சயம் உண்டு. வேற்றுமொழி பேசும் அயல் பிரதேசத்தில், எந்த நேரமும் ஏதோவொரு அவமானம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. அதற்குத் தன்னை சதா ஆயத்தப்படுத்திக்கொண்டு இருக்கும் மனத்தில் சன்னமான பீதி நிரந்தரமாக இருக்கும். மேற்படிக் கதைகளைக் கேட்பது என்னை நடைமுறை அன்றாடத்திலிருந்து விலக்கிக் காப்பதோடு, கதைசொல்லியின் மனத்தில் என் சம்பந்தமாக ஒரு நம்பிக்கையையும் இதத்தையும் உருவாக்கிவிடும்.

நான் கேட்ட கதைகள் யாவற்றையும் விடாமல் என் நாட்குறிப்பில் பதிவுசெய்து வந்திருக்கிறேன். சமீபத்தில் என் சிநேகிதன் ஒருவனிடம் அதைக் காண்பித்தபோது, அவன் வெகுவாக ஆச்சரியப்பட்டான். கதைகளில் குவிமையம், செய்தியென்றெல்லாம் எதுவும் இல்லாவிட்டாலும் சுவாரசியத்திற்குக் குறைவில்லையென்றும், நான் கேட்டவிதமாக மட்டும் கதைகளை எழுதாமல் சொந்தச் சரக்காகச் சில வர்ணனைகள், சில வாக்கியங்களைச் சேர்த்திருப்பதால் இவற்றுக்கு ஒரு தனித் தன்மையும் சமச்சீர்மையும் உருவாகியிருப்பதாகவும், இளம் வயதில் எழுதியவை என்பதால் மொழியில் ஒரு முறுக்கும் விறுவிறுப்பும் இருப்பதாகவும் தமிழில் தற்சமயம் எழுத்தாளர்களின் எண்ணிக்கையை விடப் பதிப்பகங்களின் எண்ணிக்கை அதிகமாய் இருக்கிறபடியால் என் குறிப்புகளை ஒரு புத்தகமாகப் போடுவது எளிது என்றும் சொன்னான்.

அவனுடைய ஏற்பாட்டின்படி, மேற்படிக் கதைகளை மாநிலவாரியாகப் பிரித்துப் புத்தகமாகப் போட ஒரு பிரசுர நிறுவனம் முன்வந்திருக்கிறது. நான் காலவரிசையில் அடுக்கலாம் என்றிருக்கிறேன் - அதாவது நான் அவற்றைக் கேட்ட கால வரிசையில்.

ஆரம்பித்த இடத்திலிருந்து வெகுதூரம் தள்ளிப்போய்விட்டது என்று நினைத்துவிட வேண்டாம், நான் கூறிய முதல் பத்தியின் பின்னணியில் இன்னொரு விஷயம் மிக முக்கியமானது. சமீபத்தில் பொழுதுபோகாமல் என் நாட்குறிப்பை வரிவிடாமல் வாசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தபோது தான் நானே இதைக் கண்டுபிடித்தேன்.

அதாவது, இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் கொலைகள் நடைபெற்ற நாட்களிலெல்லாம் நான் வேறு மாநிலங்களில் இருந்திருக்கிறேன் என்பதை.

ரயில்வே அமைச்சராக இருந்த லலித் நாராயண் மிஸ்ரா சமஷ்டிபூரில் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்டபோது நான் பீகாரிலேயே இருந்தேன். ஜர்னெய்ல் சிங் பிந்தரன்வாலேயைக் கொல்ல ராணுவம் பொற்கோயிலுக்குள் நுழைந்தபோது மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் இருந்தேன். தமது பாதுகாவலர்களால் திருமதி. காந்தி கொல்லப்பட்ட தினத்தில் வங்காளத்தின் 24 பர்கானாஸ் மாவட்டத்தில். அவருடைய மகன் சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்த நாளில் மேகாலயாவில். ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட மறுநாள் ஆந்திரத்தின் கடப்பைக்கு அருகே ஒரு கிராமத்து ரயில் நிலையத்துக்கு வெளியே நாள் முழுவதும் தடுத்துவைக்கப்பட்ட ரயிலில் இருந்தேன். இப்படி ஒரு விசித்திரமான பிரயாணத் திட்டத்தை எனக்கு வகுத்துத் தந்த கரம் மானுடக் கரமாக இருக்கச் சாத்தியமே இல்லை.

நாட்குறிப்பைப் படித்துவந்த போது, கடப்பையில்-உண்மையில் கடப்பை தாண்டி, எர்ரகுண்ட்லாவும் தாண்டி, பிறகு வந்த சிறு நிலையத்தையும் கடந்தபிறகு வந்த கிராமத்தின் வெளிவிளிம்பில் - சந்தித்த அல்லூரி வெங்கடேச ராவ் சொன்ன கதை அழுத்தமாக நெஞ்சில் வந்து அமர்ந்தது. அதைத்தான் இப்போது சொல்லப்போகிறேன்.

அன்று அதிகாலையில் கடப்பையைத் தாண்டிக் கொஞ்சநேரம் ஊர்ந்த ரயில் திடீரென்று வேர் பிடித்த மாதிரி நின்றது. ஓட்டுநரும் கார்டும் ரயில் இப்போதைக்கு நகராது என்ற தகவலையும் அதற்கான காரணத்தையும் பெட்டிபெட்டியாக அறிவித்துக்கொண்டு சென்றார்கள். நாள் முழுவதும் நகராதிருக்கும் ரயில் பெட்டிக்குள் சும்மா உட்கார்ந்திருப்பது சாதாரண விஷயமில்லை. மே மாத வெய்யில் கனக்கத் தொடங்கும் போது, ரயில்பெட்டி கொதிக்கும் இட்லிக் கொப்பரையின் உட்புறம் போல வெம்மைகொள்ளும். முந்தின இரவு நமக்கு நண்பராகிய அயல் மாநிலத்துக்காரரை மறுநாள் காலையில் விரோதியாக்குகிற அம்சங்கள் பெருகத் தொடங்கும்.

போக்கிடம் இல்லாமல் நின்றுகொண்டிருக்கும் ரயிலுக்குள் சிறையிருக்கும் பயணிகளுக்குச் சாப்பாடு முதல் எல்லாமே பிரச்சினையாகி விடும் அல்லவா? அக்கம்பக்கத்து ஜனங்கள் திடீர் வியாபாரிகளாவார்கள். அவசரத் தயாரிப்பின் அவல ருசியும் அளவுப் பற்றாக்குறையும் எச்சில்தொட்டி நாய்கள்போல அடித்துக்கொள்ள வேண்டிவருவதும் ரயில் பயணிகளுக்குள் தீராத குரோதத்தை விளைவிக்கும். தவிர, வேறு வழியேயில்லாமல் நாற்பது ஐம்பது முகங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருக்கும் போது அந்தரங்கமான, விதவிதமான, கொலைவெறிகள் கூடிவிடும். தண்ணீர் காலியாகிவிட்ட கழிவறை சொந்த உடல்மீதே அசாத்தியமான வெறுப்பை உண்டாக்கும். குழந்தைகள் சலிக்காமல் அழும் ஒலி சதா கேட்டவாறிருக்கும்.

ரயிலைவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினேன்.

பொதுவாகவே, கல் விளையும் பூமி அது. விதவிதமான அளவுகளில் தகடுகளாக வெட்டியெடுக்கும்போது விளிம்புகளில் சேதமுற்ற கல்பலகைக் கற்கள் சிதறிக்கிடந்தன. கண்ணுக்கெட்டியவரை ஆகாயத்தில் செருகிக்கிடக்கும் புகைபோக்கிகள் கொண்ட சிமெண்ட்டுத் தொழிற்சாலைகள் மண்டிய பிரதேசம். காலடியில் நிரநிரக்கும் மண்ணில் சாம்பல் நிறம் பூத்திருந்தது.

பாறைகள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்ட பெரும் பள்ளங்கள். கிணறுகள்போல ஆழம் கொண்ட அவற்றின் படுகையில் பாசிபடர்ந்த மழைத் தண்ணீர்மீது மேலும் தூசிகள் சென்று அடர்வது வெறும் கண்ணுக்கே தெரிந்தது. தரையையொட்டிக் கிடந்த அழுக்குத் தண்ணீரைக் குடிக்க இறங்கிச் சென்றிருந்த மைனா ஒருமுறை தலை நிமிர்த்தி என்னைப் பார்த்தது. கணவனும் மனைவியும்போலத் தென்பட்ட சக பயணிகள் இருவர் என்னை விரைந்து கடந்தார்கள். அந்தப் பெண் ஒரு புதருக்குப் பின் அவசரமாக ஒதுங்கினாள். அவன் அசட்டுப் பார்வையுடன் காவலுக்கு நின்றான்.

ரயிலின் சாந்தத்தில் ஏதாவது சலனம் இருக்கிறதா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்துசென்றேன். மெல்ல வேகம் எடுத்த காற்றில் வறட்சியும் வெம்மையும் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்தன. சிறிய தோட்ட வீடு போன்ற ஒன்று கண்ணில் தட்டுப்பட்டது. ஆலமரம்போல அகலித்து வளர்ந்த பிரம்மாண்டமான வேப்ப மரத்தின் நிழலில் சாவகாசமாக நின்றிருந்த வீடு.

அங்கேதான் வெங்கடேச ராவைச் சந்தித்தேன்.

கடப்பைக் கல் கழிவுகளைச் செங்கற்கள்போல உபயோகித்துக் கட்டப்பட்ட குடில் அது. வாசலில் சிறு கீற்றுக்கொட்டகை போடப்பட்டிருந்தது. அதற்குள் இரண்டு மர பெஞ்சுகள். வெளியில், மெருகேற்றப்பட்ட ஏகப்பட்ட கல்பலகைகள் சாத்திக் கிடந்தன. அவற்றில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் பிடிமானமேயற்று அந்தரத்தில் தொங்கின. நேர்கோடுகளே இல்லாத லிபிகொண்டது தெலுங்கு மொழி என்று ஒரு அபிப்பிராயம் தோன்றியது.

எனக்குத் தெலுங்கு வாசிக்கத் தெரியாது. ஆனால் மிகச் சரளமாகப் பேசவும் புரிந்துகொள்ளவும் முடியும். மெல்லின ஓசைகள் நிறைந்ததும், பல சந்தர்ப்பங்களில் மூக்கால் பேசுகிறார்களோ என்று தோன்றவைக்கிறதுமான மொழியைச் சங்கீதத்துக்கான சிறப்பு மொழி என்று காலங் காலமாகச் சொல்லிவருகிறார்களே, இதற்கெல்லாம் என்ன அடிப்படை என்று ஒரு சந்தேகம் உண்டு எனக்கு. வெங்கடேச ராவ் பேசுவதைக் கேட்டபிறகு, இந்த மாதிரியான மூத்தோர் கூற்றுகளில் சட்டென்று புலப்படாத ஒருவகை ஞானம் ஒளிந்திருப்பது தெரியவந்தது.

தொழில் காரணமாக ஆந்திரா முழுவதும் மூன்று வருடங்கள் சுற்றியலைந்திருக்கிறேன். கர்நூல் என்னுடைய தலைமையிடமாக இருந்தது அப்போது. தவிர, மார்க்கெட்டிங் துறையில் என்னுடைய அபார வளர்ச்சிக்கு புதிய பாஷைகளை விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறமையும் ஒரு காரணம் என்று என் முன்னாள் உபதலைவர் ஸின்ஹா பாராட்டுவார். ரூபாய் நோட்டில் போட்டிருக்கும் மொழிகள் பலவற்றிலும் என்னால் சரளமாகப் பேச முடியும். சொன்னால் நம்பமாட்டீர்கள், உத்தரப் பிரதேசத்தின் ஒரு பகுதியில் மைதிலி என்ற பாஷை பேசுவார்கள். அதில்கூட என்னால் சகஜமாக உரையாட முடியும்.

கொட்டகைத் தூணாக நின்ற மூங்கில் கழிகளில் சாத்தியும் தரையிலும் கிடந்த பலகைகள் பலவும் பெயர்ப் பலகைகள். எழுத்துகள் பிசிறில்லாமல் பொறிக்கப்பட்டிருந்தன என்பதுபோக, அவற்றின் அமைப்பில் ஒரு நேர்த்தியும் சுற்றிலுமிருந்த அலங்கார வேலையில் நூதனமான வடிவங்களும் இருந்தன. இவ்வளவு தேர்ந்த கைவேலைக்காரன் இப்படி ஒரு அத்துவான வெளியில் வந்து குடியிருக்கிறானே, வாடிக்கையாளர்கள் எங்கிருந்து வருவார்கள் என்று ஆச்சரியமும் ஆதங்கமும் ஒரே சமயத்தில் தோன்றின. குடிலின் பின்புறம் இருந்த கிணற்றின் உறைச் சுவரையொட்டிக் கிளம்பிய வண்டிப் பாதையின் தடம் முடியும் இடத்தில் உயர்ந்திருந்த நாலைந்து காரைக் கட்டடங்கள் சிறுநகரொன்று அண்மையில் இருப்பதற்கான தடயம் அறிவித்தன. என் முதுகுப்புறம் யாரோ செருமும் ஒலி கேட்டது.

என்ன வேண்டும்?

சற்றுக் கிறீச்சிட்ட குரல்தான். வயதான மனிதர். பல நாட்களாக மழிக்கப்படாத முகத்தில் முள்முள்ளாகப் படர்ந்திருந்த வெண்முடிகள். பஞ்சு வெண்மையில் அடர்த்தியாக இருந்த தலைமுடி. மீசை கிடையாது. தாடைவரை இறங்கியிருந்த வெண் கிருதா. ஆனாலும் முகச் சருமத்திலும் முன்னங்கைகளிலும்கூடச் சுருக்கங்கள் எதுவும் இல்லை. சாம்பல் நிற விழிகள் பார்வையை அகற்றவொட்டாமல் ஈர்த்தன.

சும்மாதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். வியாபார விஷயமாக வரவில்லை.

அதுதான் தெரிகிறதே. அந்த ரயிலிலிருந்து இறங்கி வந்தவர் தானே....?

அசட்டுத்தனமாகச் சிரித்து வைத்தேன்.

... அதனால்தான் கேட்டேன். சாப்பாடா தண்ணீரா, என்ன வேண்டுமென்று!

கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்.

பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் சீசாக்கள் புழக்கத்துக்கு வராத காலகட்டம் அது. பெரியவர் வாய் அகண்ட ஒரு தாமிரப் போணியில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். ரயிலில் கிடைத்த தண்ணீர் போல இல்லை அது. புத்துணர்ச்சியும் மென்மையும் நிரம்பிய குளிர்நீர். என் ஆச்சரியத்தைக் கவனித்தவர் போல, 'மண்பானைத் தண்ணீர்' என்று புன்னகைத்தபடி குடிலின் உட்புறம் கையைக் காட்டினார். தண்ணீரில் ஏதோ வேர் போட்டிருப்பதாகச் சொன்னார். தெலுங்கு வேர். சரியாகப் புரியவில்லை.

குடிலின் வாசலைப் பார்த்தபோது இரண்டாவது ஆச்சரியம் தொற்றியது. அதன் உள் ஷரத்தாக, இத்தனை நேரம் இதை எப்படிக் கவனிக்காமல் விட்டேன் என்று ஒரு உப ஆச்சரியமும் கிளர்ந்தது.

நிமிர்ந்து நின்றிருந்த ஆளுயரச் சிலை ஒன்று. வெண் பளிங்கால் ஆன சிலை. இந்தப் பிரதேசத்தில் கிடைக்கும் கற்கள் படிவக் கற்கள் அல்லவா? முதிராத பாறைகள், சிற்பம் செய்ய லாயக்கற்றவை என்றல்லவா சொல்வார்கள்? எனக்கு சிற்பத்துக்கும் சிலைக்கும் வித்தியாசம் தெரியாது அல்லது இரண்டும் ஒன்றுதானா என்பதுகூடத் தெரியாது. என்றாலும், அசந்தர்ப்பமாக அந்த இடத்தில் நின்றுகொண்டிருக்கும் சிலையை அருகில் சென்று பார்க்கத் தோன்றியது. பெரியவரிடம் அனுமதி கேட்டேன்.

'தாராளமாய்' என்றார் அவர்.

முழுமையாக விளைந்த ஒரு ஆணுடம்பின் சிற்பம் அது. பொதுவாகக் கோவில் சிற்பங்களில் உள்ள திருத்தமும் நேர்த்தியும் சமகால நபர்களை வடித்த சிலைகளில் இருக்காதல்லவா? அசல் நபரின் தொலைதூர நகல் மாதிரிக்கூட இல்லாத பஞ்சுமிட்டாய் நிறங்களில் வர்ணம் பூசப்பட்ட, சிமெண்ட் பொம்மைகளை எத்தனை கிராமங்களில் பார்த்திருக்கிறேன். அவற்றின் காரணமாக உருவாகும் அரசியல் தகராறுகளையும் வெட்டுக் குத்துகளையும் சாமான்யர்கள் உயிரிழப்பதையும் எத்தனை செய்திகளில் படித்திருக்கிறேன். இந்தச் சிற்பம் அப்படிப்பட்டதல்ல. அதன் வடிவத்திலும் திருத்தத்திலும் ஒரு புராணிகத் தன்மை இருந்தது. இந்த நாள் ஆச்சரியங்களின் தினம் போல என்று ஒரு கணம் தோன்றியது. அந்த வாலிபன் தன் வலது கையில் ஒரு சுத்தியலையும் இடது கையில் உளியும் வைத்திருந்ததுகூடப் பெரிய ஆச்சரியம் அல்ல, அவனுடைய கண்கள் உயிருள்ள கண்கள் போலவே என்னைப் பார்த்தன என்பதுதான் பேராச்சரியம். விலகி நின்று வேறு கோணத்தில் பார்த்தபோதும் அவனுடைய கண்களின் வெண்ணிறக் கருவிழிகள் என்னைப் பார்த்தன. விழிகளில் சலனமெதுவும் இருக்கிறதோ என்று ஒரு சந்தேகம் உதித்தது. மின் அதிர்ச்சிபோல அச்சம் என் முதுகுத் தண்டில் தாக்குவதை உணர்ந்தேன். தவறான இடத்தில் வந்து வேண்டாத வேலையில் இறங்கிவிட்டேனோ?

"பரவாயில்லையே. ஒரு பார்வையில் கண்டுபிடித்துவிட்டீர்களே?" முதுகுப்புறம் கிறீச்சிட்ட குரல் மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது. திரும்பிப் பார்த்தேன். நான் என்ன கண்டுபிடித்தேன் என்று இவர் கண்டுபிடித்தார்?

"இந்தச் சிற்பத்தின் சிறப்பே அதுதான். எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் அது நம்மைப் பார்க்கிற மாதிரி இருக்கும். ஏன் தயங்கி நிற்கிறீர்கள்? இன்னும் கிட்டச் சென்று பார்க்கலாம். அது சிற்பம்தான். ஒன்றும் செய்துவிடாது..." குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.

இன்னும் அருகில் சென்றேன். நெருங்கிப் பார்த்தபோது இன்னமும் தீர்க்கமாக ஆகியது சிற்பம். மார்பின் குறுக்கே ஓடிய பூணூலின் புரிகள் துலக்கமாகத் தெரிந்தன. சிங்கத்தின் பிடரி போன்று தோளில் படர்ந்திருந்த கேசத்தின் ஒவ்வொரு இழையும் துல்லியமாய்த் தெரிந்தது. ராஜஸ்தானிய பாணி உருமாலில் துணி மடிப்புகளும் சுருக்கங்களும் குச்சத்தின் நுனிப் பிசிறுகளும் தத்ரூபமாய் இருந்தன. கண் இமைகளின் முடிகள் ஒவ்வொன்றும் தனித் தனியாக நீட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்தபோது எனக்கு மூச்சுத் திணறியது. பளிங்கின் நிறமில்லாமல் இயல்பான நிறங்கள் மட்டும் இருந்திருந்தால் உயிருள்ள ஆள் உறைந்து நிற்கிறான் என்றே நம்பியிருப்பேன்.... பெரியவரிடம் கேட்டேன்.

யார் செதுக்கிய சிற்பம் இது?

செதுக்கியதா? என்று கேட்டார்.

ஆழமாக இழுத்து ஒரு பெருமூச்சுவிட்டார். ஏதோ ஞாபகம் வந்த மாதிரி உதட்டோரம் சிறு முறுவல் உதித்தது.

நான் ஒன்றும் தவறாகக் கேட்டுவிடவில்லையே?

அட. அதெல்லாம் இல்லை. இந்தச் சிற்பத்தின் கதை பெரியதாயிற்றே. . .

தொலைவில் மரவட்டையின் பிரேதம்போல நின்றிருந்த ரயிலை ஒருமுறை பார்த்தார்.

.... அது இப்போதைக்குக் கிளம்பாது. உட்காருங்கள். சாவகாசமாகச் சொல்கிறேன். என்றவாறு குடிலின் உள்ளே சென்று திரும்பினார்.

ஒரு கையில் பருத்த சுரைக் குடுக்கையும் மறுகையில் ஒருவர் மட்டும் அமர்கிற மாதிரி சதுரமான கோரைத் தடுக்கும் கொண்டுவந்தார். தரையில் உட்கார்ந்து கொட்டகையின் தூணாக நின்ற கழியில் சாய்ந்துகொண்டார். தமக்கெதிரில் தடுக்கைப் போட்டு என்னை அமரும்படி சைகைகாட்டினார்.

குடுக்கையின் தக்கையைத் திறந்தவுடன் உறைந்து பல நாட்களாய்க் காடியேறிய ஊளைமோரின் புளிப்பு மணம் கொட்டகை முழுவதும் நிரம்பியது.

'கொஞ்சம் கள் சாப்பிடுகிறீர்களா?' - என்று என்னை நோக்கி நீட்டினார்.

'பழக்கமில்லை...' என்று தலையசைத்த மாத்திரத்தில், அவர் மனம் புண்பட்டுவிடக் கூடாதே என்று அவசரமாய்ச் சொன்னேன்.

"வாசலில் உள்ள பலகைகள் நீங்கள் பொறித்ததா? பிரமாதமாக இருக்கின்றன."

அவர் பெருமிதமாகச் சிரித்துக்கொண்டார்.

"சும்மாவா? நான் பிறந்த வம்சத்தின் பெருமை அல்லவா அது? இதோ நிற்கிறாரே, இவர் யார் தெரியுமா?..." - மூலையில் நின்ற சிற்பத்தை மோவாயால் சுட்டிக்காட்டினார். இதற்குள் நாலைந்து மிடறுகள் அருந்தவும் செய்திருந்தார். பேசுவதற்காக வாய்திறந்தபோது இன்னும் விசையுடன் புளிப்பு பீறியது.

கர்நாடகத்தில் ஒரு ராஜாவின் ஆஸ்தான சிற்பியாக இருந்தவர். எனக்கு இருபது தலைமுறைக்கு முந்தியவர்.

ஏயப்பா. பல நூறு வருஷம் ஆகியிருக்குமே. அவருடைய சிலைதானா இது?

அவசரப்படாதீர்கள். அதை நிதானமாகச் சொல்ல வேண்டும் என்றுதானே இதை எடுத்துவந்திருக்கிறேன்.

குடுக்கையைச் செல்லமாகத் தட்டினார். மெல்ல மெல்ல அவர் கண்கள் சிவந்து வந்தன. கொஞ்சமும் தடுமாறாத மொழியில், ஏற்கனவே பலதடவை சொல்லி ஒத்திகை பார்த்துக்கொண்டது போன்ற நிதானத்தில், தான் காண்கிற கனவைக் காணும்போதே அடுத்தவருக்குச் சொல்கிற மாதிரிக் கிறக்கத்தில் சொல்லிக் கொண்டே போனார். இதுபோல ஆழ்ந்து கதை சொன்ன பலபேர் என் முகத்தைத் திரைபோலப் பாவித்து அதில் தெரியும் காட்சிகளை எனக்கே எடுத்துச் சொல்கிறவிதமாக என்னை உற்றுப் பார்ப்பதை ரசித்து அனுபவித்திருக்கிறேன். இவர் கதை சொல்லும்போது என் முகத்தை ஊடுருவிப் பார்த்தபடி சொன்னார். எனக்குப் பின்புறம் வேறெங்கோ தற்சமயம் நடந்துகொண்டிருக்கும் உண்மைக் கதைபோலும் அது.

.... கர்நாடகத்தில் ஒரு ராஜா என்று சொன்னேனே, அது எந்த ராஜா, எந்தக் காலகட்டம் என்று சொல்வதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. எங்கள் வம்சம் வெகு கறாராகக் கடைப்பிடித்துவரும் ரகசியம் அது. ஊரையும் பேரையும் சொன்னால் தீராத சாபம் பிடித்துவிடும். தெற்குக் கர்நாடகத்தில் ஒரு பிரம்மாண்டமான சிவன் கோயிலைக் கட்ட ஆரம்பித்தார் அந்த ராஜா.

என் மூதாதை - அதுதான் இங்கே சிலையாக நிற்கிறாரே, அவர் - அந்தச் சமயத்தில்தான் கர்நாடகம் வந்து சேர்ந்தார். அவருடைய பூர்வீகம் ராஜஸ்தானம். கல் தச்சர்கள் பரம்பரை. குடும்பத்தவரோடு ஏதோ பிணக்கு ஏற்பட்டு வெளியேறிவிட்டார். அப்போது இருபத்தோரு வயது அவருக்கு. தனியராகவும் கைவசம் சாமான் மூட்டை எதுவுமின்றியும் தம் முன்னால் வந்து நின்ற வாலிபனைப் பலவாறாகக் கேள்விகள் கேட்டு இவர் ஒரு சிற்பி என்று அறிந்துகொண்டார் ராஜா. கோவில் பணியில் சில சில்லறை வேலைகளைக் கொடுத்தார். இவருடைய வேகமும் திறமையும் ஒரே வாரத்தில் வெளிப்பட்டுவிட்டதாம். உடனடியாகப் பெரிய வேலைகளை இவர்வசம் ஒப்படைத்தார்.

குறிப்பாக, கோவிலில் விழா மண்டபத்தின் முகப்பில் நிறுத்துவதற்கான பெண் சிலை. பொதுவாக, அந்தக் காலகட்டத்தில் கருங்கல் அல்லது மாக்கல்லில்தான் சிற்பங்களைச் செதுக்கிவந்தார்கள். நமது சிற்பி ராஜஸ்தானத்தைச் சேர்ந்தவரல்லவா? வெண்பளிங்கில் வடிக்க முடிவெடுத்தார். ஆனால், கல்லைத் தேர்ந்தெடுக்கத் தம் பூர்வீக ராஜ்யத்துக்குப் போக மறுத்துவிட்டார்.

ராஜாவின் ஏற்பாட்டில் ராஜஸ்தானத்திலிருந்து தரமான கற்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவருவதற்கு நாற்பத்தியிரண்டு சிற்பிகள் கொண்ட ஒரு குழு ராஜஸ்தானம் புறப்பட்டுச் சென்றது. அவர்களுக்குப் பதினைந்து நாள் பாடம் சொல்லிக் கொடுத்தாராம் நமது சிற்பி. அறுபது யானைகள் சுமந்துவந்த பளிங்குக் கற்கள் கர்நாடகம் வந்து சேர்வதற்கு மூன்று மாதங்கள் பிடித்தன. அதுவரை ஓய்வெடுத்துக்கொண்டிருந்த சிற்பி, கற்களைப் பொறுப்பெடுத்துக்கொண்ட மாத்திரத்தில் பிசாசுபோல இயங்க ஆரம்பித்தார்.

உசிதமான கல்லைத் தேர்ந்தெடுக்க மட்டுமே ஒரு மாதம் ஆகிவிட்டதாம். தினசரியும் காலையில் கற்கள் குவிக்கப்பட்டிருக்கும் திடலில் வந்து ஒவ்வொரு கல்லையும் அங்குலம் அங்குலமாகத் தட்டி அதன் நாதத்தைக் கேட்டுக்கொண்டிருப்பாராம். முடிவாக ஒரு கல்லைத் தேர்ந்தெடுத்தார். அன்றாடம் நீராடிவிட்டு வந்து அதன் முன்னால் உட்கார்ந்து தியானத்தில் ஆழ்ந்துவிடுவாராம். சரியான முகூர்த்த நாள் ஒன்று பார்த்து, அன்று சிற்பப் பணி ஆரம்பித்தது.

ராப்பகலாக வேலை. அவருக்குத் தாம்பூலம் தரிக்கும் வழக்கம் உண்டு. பிரம்மச்சாரி என்பதால் சுயம்பாகமாகச் சமைத்துச் சாப்பிடுபவர். பல நாட்கள் வேலை மும்முரத்தில் தாம்பூலம் தவிர வேறெதுவும் சாப்பிடாமலே பொழுது கழிந்துவிடுமாம். சுபாவமாகவே பிறருடன் அதிகம் உரையாடல் எதுவும் வைத்துக்கொள்ளாத தனிமை விரும்பி. இந்த வேலையை ஏற்றுக்கொண்டதன் பிறகு பேச்சு இன்னமும் குறைந்துவிட்டது.

இவருக்குத் தனியாக ஒரு விஸ்தாரமான குடில் அமைத்துத் தரச் செய்தார் ராஜா. தாமே சமைத்துச் சாப்பிடுகிறார் என்று கேள்விப்பட்டு இனி அது தேவையில்லை, தினமும் அரண்மனையிலிருந்தே ஆசாரமான சாப்பாடு வந்து சேரும் என்று ஏற்படுத்தினார். இரவில் இவர் உறங்கும்போது விசிறுவதற்காக இரண்டு பணிப்பெண்களை அமர்த்தித் தந்தார். ஓரிரு நாட்கள் கழித்து இந்தப் பெண்கள் வர வேண்டியதில்லை என்று சிற்பி கூறிவிட்டாராம். யாராவது பார்த்துக்கொண்டிருக்கும்போது உறக்கம் தன்னியல்பாக வந்து கவிய மறுக்கிறது என்று காரணம் சொல்லியிருக்கிறார்.

கற்கள் வந்து சேர்ந்த நாட்களிலேயே, ராஜாவின் ஒரே மகளான ராஜகுமாரி தினசரி வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். ஒருமுறை ராஜகுமாரி சிற்பியிடம் கேட்டாள்.

சிற்பம் செதுக்குவதற்கான கல்லை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

அது ரொம்ப சுலபம் அம்மா. எந்தக் கல்லுக்குள் நாம் தேடும் சிற்பம் ஒளிந்திருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டால் போதும்.

சிற்பியின் பதில் கொஞ்சமும் புரியவில்லை அவளுக்கு. ஆனால் அவருடைய கண்களைவிட்டுப் பார்வையை விலக்கிக்கொள்ளவும் முடியவில்லை.

ஓ... வேலை தொடங்குவதற்கு முன்னால் நாட்கணக்காகத் தியானத்தில் அமர்ந்தது எதற்காக?

சுற்றிப் போர்த்தியிருக்கும் பாறைத் திப்பிகளைத் தட்டி உதிர்ப்பதற்கு சிற்பத்தின் அனுமதியை வேண்டித்தான்.

இந்தவிதமாக அவ்வப்போது உரையாடிக்கொண்டு, சேடியர் கொண்டுவந்த அலங்கார நாற்காலியில் அசையாமல் அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பாள். அவள் வேடிக்கை பார்த்தது சிற்பத்தையா சிற்பியையா என்பது பெரும்பெரும் சர்ச்சையையும் தர்க்கத்தையும் விவாதத்தையும் ராஜ்யம் முழுவதும் ஏற்படுத்தியதாம்...

புதிதாக வந்த ஒருவனுக்கு இவ்வளவு சௌகரியமும் அங்கீகாரமும் கௌரவமும் கிடைப்பது சக சிற்பிகளுக்குள் பொறாமையை ஏற்படுத்தத்தானே செய்யும்? தலைமைச் சிற்பியாய் இருந்த கிழவர் இதை ஒரு விநோதமான வழியில் தீர்த்துக்கொள்ள முடிவெடுத்தார். ராஜஸ்தானத்திலிருந்து வந்த கற்களில் நமது சிற்பி வேண்டாம் என்று ஒதுக்கிய ஒன்றை எடுத்துத் தாம் ஒரு சிலை செய்யத் தொடங்கினார்.

அவர் செதுக்கிய சிலை வேறெதுவுமல்ல, நமது சிற்பியின் உருவம்தான். பெண் சிற்பம் உருவாகி முடியும் நாளில், தாம் வடிக்கும் சிலையையும் முடித்துவிடும் திட்டத்துடன் வேகமாக வேலை பார்த்து வந்தார். ஆனால் இந்த வேலை மிக ரகசியமாக நடந்துவந்தது. நமது சிற்பியின் வேலைபோலப் பகிரங்கமாக அல்ல.

ஆரோக்கியமான தாய் வயிற்றில் வளரும் சிசுவைப் போலப் பெண் சிற்பம் நன்கு வளர்ந்து வந்தது. ராஜகுமாரி அரண்மனை திரும்பும் நேரமும் தாமதமாகிவந்தது. ஓரிரு இரவுகள் குடிலிலேயே தங்கவும் செய்தாள்.

ஒரே சிற்பத்தை எவ்வளவு நேரம் அம்மா பார்த்துக்கொண்டிருப்பாய்?

என்று ராஜாகூட மகளைச் சற்றுக் கோபமாகக் கேட்டாராம்.

ஒரே ராஜ்யத்தை எவ்வளவு காலமாக ஆண்டுகொண்டிருக்கிறீர்கள்? என்று பதிலுக்குக் கேட்டாளாம் மகள்.

அவள் இப்படியெல்லாம் கேட்கக் கூடியவளே அல்ல. சிற்பியின் சகவாசம்தான் காரணமோ என்று மனம் புழுங்கியிருக்கிறார் மன்னர்...

ஆயிற்று, சிலைக்கு நாளைக் காலை கண்திறக்க வேண்டியதுதான் பாக்கி.

முந்தின நாள் இரவில் சில உற்பாதங்கள் தோன்றின. வெகுநாட்களாக ஆகாயத்தில் உலவிவந்த வால்நட்சத்திரம் சடாரென்று உதிர்ந்தது. பார்வையற்ற காக்கை ஒன்று குடிலின் வாசலில் ஓயாமல் பிலாக்கணம் வைத்தது. அதை விரட்டியடிக்கும் விதமாக நாலைந்து கோட்டான்கள் விடாமல் அலறின. இரவு முழுவதும் மார்கழி மாதத்துக்குச் சம்பந்தமேயற்ற வெக்கை நிலவியது. குடிலின் மூலையில் இருந்த எண்ணெய் விளக்கின் அருகே கொடியில் காய்ந்த வஸ்திரமொன்று காற்றுக்கு அசைந்து தீப்பற்றியது. இரவுச் சாப்பாட்டுக்காக அரண்மனையிலிருந்து வந்திருந்த அன்னத்தில் பல்லி விழுந்து இறந்துகிடந்தது. குடிலின் உத்தரத்தில் புதிதாகக் குடிவந்திருந்த மரப் பல்லி இரவு முழுவதும் துர்ச்சொல் உதிர்த்தவண்ணமிருந்தது. சிற்பி கை மறதியாய் வெற்றிலையில் தடவிய சுண்ணாம்பு அபரிமிதமாக அளவு கூடி வாய் வெந்துபோயிற்று.

ஆகாயத்தில் பரவிவிட்ட இரவையும் அதன் இருள் அடர்த்தியையும் தன் தனிமையையும் வெறித்துக் கொண்டு உறக்கம் பிடிக்காமல் உட்கார்ந்திருந்தார் சிற்பி. வெக்கை முற்றியபோது ஆயாசம் தாங்காமல் கண்கள் தாமே மூடிக்கொண்டன. உறக்கத்தினுள் வழுக்கினார்.

முதல் ஜாமம்

முதலாம் ஜாமம் ஆரம்பித்து ஒரு நாழிகை சென்றபின் ஒரு கனவு வந்தது. வழக்கமாகக் கனவுகளில் நிலவுவதுபோன்ற சாம்பல் நிற வெளிச்சம் இல்லை. கோடை நாளின் உச்சிப்பொழுது போன்ற ஒளி. கண்களை முழுக்கத் திறந்து பார்க்க இயலாதபடி பார்வை கூசியது.

தன் எதிரில் நிற்பது சிற்பம் அல்ல, உயிருள்ள தேவதை என்று கண்டு சிற்பி அதிர்ந்தார். முந்தைய கணத்தில் உளியும் சுத்தியும் திறந்துவைத்த கண்களை முழுசாக மலர்த்திச் சிரித்தாள் அந்த மந்திரக் கன்னி. நேற்றுவரை உறைந்திருந்த சிரிப்பில் இல்லாத ஒரு கபடம் தற்போதைய சிரிப்பில் கூடியிருப்பதைக் கவனித்தார் சிற்பி. கண்களும்கூடத் தான் திறந்துவைத்த விதமாக இல்லாமல், அகலம் அதிகரித்திருப்பதைக் கண்டார். அவை அவ்வப்போது இமைக்கவும் செய்தன.

வெக்கையின் ஊடாகத் திடீரென்று ஒரு குளிர்ந்த காற்றலை ஊடுருவிச் சென்றது. திகைப்பின் காரணமாக மூடிய சிற்பியின் கண்கள் மீண்டும் திறந்தபோது சிலை பீடத்தைவிட்டுக் கீழே இறங்கி வந்திருந்தது.

அது நின்ற நிலையும் அதன் கன்னச் சதையின் துடிப்பும் நீட்டிய கைகளில் இருந்த பரபரப்பும் அதன் நோக்கத்தை வெளிப்படையாகத் தெரிவித்தன. தன் மார்பின் குறுக்காக இரண்டு கைகளையும் கோத்துக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து பார்த்தார் சிற்பி.

என்னம்மா வேண்டும் உனக்கு?

நீர்தான்.

தயக்கமில்லாமல் பதிலளித்தாள் சிற்பக் கன்னி. தீவிரமான யோசனை போல மௌனத்தில் அமிழ்ந்தார் சிற்பி. கண்களை மறுபடியும் மூடிக்கொண்டார். கண்களின் உட்புறம் எதையோ நிகழ்த்திப் பார்க்கிறவர் மாதிரி இமைகளுக்கடியில் விழிகள் உருண்டன. சில நிமிடங்கள் கழித்து கனிவான குரலில் பதிலிறுத்தார்.

அது முறையல்ல அம்மா.

ஏன்?

கல்லிலிருந்து உன்னைப் பிறப்பித்தவன் நான்தான். ஆகவே, உனக்குத் தகப்பன் ஸ்தானம். உன்னை என் மகளாகத்தான் பார்க்கிறேனே தவிர, பெண் உடம்பாகப் பார்க்க முடியாது.

உளறுகிறீர். கல்லிலிருந்து என் வடிவத்தைத்தான் உருவாக்கினீர். கல்லை நீர் உருவாக்கவில்லை. தவிர, என் உடம்பு பற்றிச் சொன்னீரே...

ம்.

மிக அருகிலிருந்து உம்முடைய உடம்பை அன்றாடம் பார்த்து வந்திருக்கிறேன் அல்லவா...

இன்று காலைதானே உன் கண்களைத் திறந்துவிட்டேன்?

... கண்ணை மூடிப் படுத்திருக்கும்போது உம் அருகில் யாராவது வந்தால் உம்மால் உணர முடியாதா?

வாஸ்தவம்தான்.

உம்மீது கிளர்ந்த மோகத்தின் கிறக்கம் தாளாமல்தான் இறங்கி வந்திருக்கிறேன். நான் பார்த்துப் பார்த்து மோகித்த அந்த உடம்பை ஒருமுறை தழுவி இன்புற்றாக வேண்டும் எனக்கு.

தொடர்ந்து உரையாடல் போய்க்கொண்டேயிருந்தது. சிற்பியின் சுண்டுவிரல் நகம்கூடச் சிற்பக் கன்னியின்மீது படவில்லை. விவாதத்தின் உச்சத்தில் அவர் முடிவாகச் சொன்னார்.

பாறையுடன் சம்போகம் செய்யும் திராணி எனக்கு இல்லை அம்மா - என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.

அவள் அடிவயிற்றிலிருந்து சாபமிட்டாள்.

என்னைச் சிலை என்றுதானே பரிகசிக்கிறீர். அடுத்த பிறவியில் நீரும் சிலையாக இருக்கக் கடவீர். அப்போதுதான் புரியும் என் தகிப்பு.

மீண்டும் சிற்பமாக உறைந்தாள் அவள்...

உடல் விதிர்த்து விழித்துக்கொண்டார் சிற்பி. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தார். யதேச்சையாக வந்த குட்டிமேகத்துக்குப் பின்னால் மறைந்துகொண்டாலும் நிலாவின் வெளிச்சம் அது இருந்த இடத்தைச் சுற்றிலும் வெகுதூரத்துக்கு ஆதிக்கம் செலுத்தியிருந்தது. இருளின் ரகசியத்துடன் ஓயாமல் கண்சிமிட்டிப் பேசிக்கொண்டிருந்த நட்சத்திரங்கள் விநோதமான ஏக்கத்தைக் கிளர்த்தின. வெற்றிலைப் பையை எடுத்துத் திறந்தார். தாம்பூலம் தந்த கிறுகிறுப்பு தனிமைக்கு மிக இதமான துணையாக இருந்தது. எழுந்து சென்று சக்கையைத் துப்பிவிட்டுத் திரும்புகிறார், சிலை தம்மையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்தார். முதுகில் பூரான் ஓடுகிற மாதிரி ஒரு குறுகுறுப்பு. மேகத்தைவிட்டு வெளியே வந்திருந்த நிலா பளிரிட்டது. சிற்பம் கேட்டதைக் கொடுத்திருக்கலாமோ? என்று ஒரு கணம் சிந்தை தயங்கியது.

வாசலில் இருந்த மூங்கில் படலை யாரோ திறக்கிற மாதிரி சப்தம் கேட்டது. பாத சரங்கள் ஒலிப்பது போலவும், அவற்றின் ஒலி மிகவும் பரிச்சயமானது போலவும் தோன்றியது. இந்த நேரத்தில் யார் வரப் போகிறார்கள், பிரமையேதான் இது என்று சமாதானம் கொண்டு கண் கிறங்கினார்.

இரண்டாம் ஜாமம்

விட்ட இடத்திலிருந்து தொடர்வதுபோல, அதே கனவு மீண்டும் வந்தது. இந்தமுறை மிகப் பெரிய வித்தியாசம் ஒன்று நேர்ந்துவிட்டிருந்தது...

கண் திறந்த சிலையின் முகம் ராஜகுமாரியின் முகம்போலவே இருந்தது.

சிற்பம் முந்தைய கனவில்போல வேண்டுகோளெல்லாம் விடுக்கவில்லை. தன்னியல்பாக நெருங்கி வந்து அணைத்துக்கொண்டது. தனது பொருளைத் தான் எடுத்துக்கொள்ளும் சுவாதீனத்துடனும் வெகு நாளாகக் காணாமல்போயிருந்த பொருள் யதேச்சையாகக் கிடைத்து விட்ட ஆவேசத்துடனும் இன்னும் கொஞ்ச நேரம்தான், பிறகு அது நிரந்தரமாகக் காணாமல் போய்விடும் என்பது போன்ற பதற்றத்துடனும் பலநாள் திட்டத்தின் விளைவாகச் செயல்படுவது போன்ற சிரத்தையும் கச்சிதமும் கொண்டு சேர்க்கையின் பல்வேறு அடுக்குகளுக்கு இட்டுச்சென்றது.

தேர்ந்த சிற்பி ஆட்டுரல் கொத்துவதுபோல எளிமையாகவும் வாகாகவும் தன் உடம்பு கையாளப்படுவதை உணர்ந்தார் சிற்பி.

கனவில் நிகழ்ந்த முத்தங்களின் ஒலியும் மென்சதையின் ஸ்பரிசமும் மறைவிடங்களின் மணமும் எச்சிலின் ருசியும் அலையலையாக முன்னெழுந்த சதையின் திரட்சியும் என எதுவுமே கனவில்போல இல்லை. நிஜம்போலவே அவ்வளவு அண்மையில், அவ்வளவு நேரடியாக, அவ்வளவு கிளர்ச்சி தருவதாக இருந்தன.

உச்சத்தின் விளிம்பில் சட்டென்று தான் பிடுங்கி வீசப்படுகிற மாதிரி உணர்ந்தார் சிற்பி.

விழிப்புத் தட்டியது.

குடிலுக்கு வெளியில் குதிரைக் குளம்படிபோல ஒலிகள் கேட்டன. தழைந்த பேச்சுக் குரல்களும் இணைந்துகொண்டன. வெகு தத்ரூபமான ஒலிகள். இருளைத் தவிர வேறு மர்மங்களும் இரவின் நிசப்தத்தின் திரைக்குப் பின்னால் ஏதோ பயங்கரங்கள் ஒளிந்திருப்பது போல, பிரமை தட்டியது.

உடம்பு கடுமையாக வியர்த்திருந்தது. படுக்கை விரிப்பில் அகலமாக ஈரத்தடம் பதிந்திருந்ததைப் பார்க்க விகாரமாக இருந்தது.. வெளியில் வெக்கை இன்னும் அதிகரித்துவிட்ட மாதிரித் தோன்றியது. வெக்கை நிஜமாக இருப்பது எங்கே, சூழ்நிலையில்தான் நிலவுகிறதா அல்லது தனக்குள்ளிருந்து ஊறுகிறதா என்று தீர்மானிக்க முடியாமல் திகைத்தார். கைகள் அனிச்சையாகத் தாம்பூலப் பையை எடுத்தன.

குடிலுக்கு வெளியே குளம்படித் தடங்கள் இருக்கின்றனவா என்று பார்த்துவிட்டால் கைகளின் நடுக்கம் சற்றுக் குறையக்கூடும் என்று தோன்றியது. விரும்பத்தகாத ஏதாவது உறுதியாகிவிடுமோ என்று கவலையாகவும் இருந்தது.

கனத்த மனத்துடன் பஞ்சணையில் சரிந்தார்.

ஆறுதலாகத் தொற்றியது உறக்கம்.

மூன்றாம் ஜாமம்

இந்தமுறை வந்த கனவு அதிக நேரம் நீடிக்கவில்லை. அதிகபட்சம் ஏழு அல்லது எட்டு விநாடிகள் இருக்கலாம். அவ்வளவுதான். அதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டன.

முந்தைய இரண்டுமுறைகள் போலவே இப்போதும் சிற்பம் உயிர் கொண்டது. ஆனால் பெண்ணுக்குரிய அம்சங்கள் யாவற்றையும் துறந்துவிட்டு ஒரு பயில்வானைப் போன்று உடல்வாகை உருமாற்றிக் கொண்டது. முந்தைய ஜாமத்தில் உடலெங்கும் பொங்கித் தீர்ந்த பரபரப்பையும் உச்சத்தில் தொற்றிய கிளுகிளுப்பையும் மீண்டும் நிகழ்த்திக்கொள்ளும் ஆவலுடன் விரித்த கைகளுடன் நெருங்கிய சிற்பியின் நெஞ்சில் கைவைத்து நிறுத்தியது.

தனது வலது புஜத்தில் முளைத்துப் பெரிதாகப் புடைத்திருந்த மருவைச் செதுக்கியெறியும்படி சைகை காட்டியது. குடிலின் உள்ளே சென்று உளியும் சுத்தியலும் எடுத்துவந்தார் சிற்பி.

கண்ணிமைக்கும் நேரத்தில் அவரைச் செந்தூக்காய்த் தூக்கியது சிற்பம். முந்தைய ஜாமத்தின் மிருதுத் தன்மையும் காதலும் அறவே நீங்கியிருந்த ஸ்பரிசம். போர்வீரன்போல மாறியிருந்தது ராஜகுமாரியின் முகச் சாயல். சிற்பியைப் பீடத்தில் நிறுத்தியது.

தன் பாதங்களின் அடிப்புறம் நூல் சரங்கள்போல வேர் முளைத்துப் பீடத்துக்குள் ஊன்றிக்கொள்வதையும் தலைப்பகுதியிலிருந்து மரத்துக் கொண்டே வருவதையும் உணர்ந்த சிற்பி, ஏதோ ஒரு விபரீதச் சுழியின் மையத்தில் தான் சிக்கிக்கொண்டதை அறிந்து தப்பிக்க முனைந்த மாத்திரத்தில் அந்த உருவம் குடிலை விட்டு வெகுவேகமாக வெளியேறுவதைக் கண்டார். குதிரைக் குளம்படியோசை எழுந்து நகர்ந்து மெல்லத் தேய்ந்து மறைந்தது. நகரத் திராணியின்றி நின்றிருந்தார் சிற்பி.

நாலாம் ஜாமம்

வயலை நோக்கிக் கலப்பைகளுடனும் மண்வெட்டிகளுடனும் பிரம்புக் கூடைகளுடனும் சென்றுகொண்டிருந்த ஆண்களும் பெண்களும் ஆச்சரியத்துடன் பார்த்தார்களாம் - நேற்றுவரை ஒரு பெண் சிலை நின்றிருந்த இடத்தில் இப்போது ஆண் சிலை நிற்கிறதே என்று...

இதுவரைதான் என்னுடைய நாட்குறிப்பில் இருக்கிறது. அதன் பிறகும் பலதடவை கடப்பை வழியாகச் சென்று வந்திருக்கிறேன். ஒருமுறைகூட அந்தக் குடிலுக்கு மறுபடியும் போக வாய்க்கவில்லை. வாழ்க்கை என்னை உந்திச் சென்ற பாதைகள் அப்படி. கொஞ்சம்கூட அவகாசம் தராதவை.

எனக்குக் கதைசொன்ன பெரியவர் தற்போது உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பும் மிகக் குறைவுதான் என்று தோன்றுகிறது. நான் சந்தித்தபோதே அவருக்கு வயது எழுபதுக்கு அருகில் இருக்கலாம். அந்தச் சிற்பம் யார்வசத்தில் இருக்கும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. ஆனால் என் ஞாபகத்தில் வெகு அழுத்தமாக ஏதோ முந்தாநாள்தான் பார்த்த வஸ்துவின் பிம்பம்போல அவ்வளவு திருத்தமாக அது வீற்றிருக்கிறது.

தொடர்ந்து பல வருடங்கள் அந்தச் சிற்பியின் கதையை அசைபோட்டு வந்தபோது இயல்பாகச் சில சந்தேகங்களும் எழுந்து வந்தன.

1. ராஜஸ்தானியரான சிற்பியின் இருபத்தோராம் தலைமுறை வாரிசு, ஆந்திரத்தின் ராவ் ஆனது எவ்விதம்?

2. பிரம்மச்சாரியாக வந்து சேர்ந்து பிரம்மச்சாரியாகவே வாழ்வு முடிந்த சிற்பிக்கு வாரிசுகளும் வம்சமும் தோன்றியது எப்படி?

3. இவருக்குப் போட்டியாக தலைமைச் சிற்பி செய்த சிலை பிறகு என்னாயிற்று? எங்கே போயிற்று?

4. ராஜகுமாரிக்குச் சிற்பியின் மீது ஒரு அந்தரங்கமான இச்சை உருவான செய்தியும் கதையில் வந்ததே, அவள் என்னவானாள்?

5. தன்னந்தனியாக வாழ்ந்து மறைந்தவராயிற்றே சிற்பி? அவருடைய மறைவுக்கு முந்திய துர்ச்சகுனங்களின் பட்டியலை யார் கவனித்துக் கோத்தார்கள்? நிகழப்போகும் அசம்பாவிதத்தின் முன்குறிகள் அவை என்று யாருக்குத் தோன்றியது?

ஓய்வுபெறுவதற்குச் சிலமாதங்கள் முன்பு, உத்தியோகரீதியாக மஹாராஷ்ட்ரம் செல்ல வேண்டி வந்தது. கடைசியாக அதுதான் நான் கடப்பையைத் தாண்டிச் சென்றது. அந்தமுறை இன்னொரு விசித்திரமான சந்தேகம் தோன்றியது.

அந்தக் கனவுகள் மூன்றையும் கண்ட மனிதன்தான் சிலையாகிவிட்டானே, நான் பார்த்த பெரியவர் வரை கர்ணபரம்பரையாக அவை எவ்விதம் வந்து சேர்ந்தன?

அப்புறம் சமாதானம் செய்துகொண்டேன்... போகட்டும், உயிருள்ள மனிதன் சிலையாக மாற முடியும் என்றால், ஒருவருடைய கனவை இன்னொருவர் காண்பதும் நடக்கக்கூடிய விஷயம் தானே!

******

நன்றி: காலச்சுவடு

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

4 கருத்துகள்:

மாரிமுத்து on January 11, 2011 at 11:27 PM said...

கர்ணபரம்பரை கனவு நேர்த்தியான எழுத்தில்!

மதி on January 12, 2011 at 1:44 AM said...

yuvan chandrasekar continues to amaze me by his depiction of surreal subjects. one of my favourite contemporaries and a good story of his..

புல்லாங்குழல் on July 25, 2011 at 12:11 PM said...

வித்தியாசமான கதை. வர்த்தைகளை சிற்பமாய் செதுக்கியது போல அற்புதமான நடை.

saru.manivillan on March 27, 2017 at 7:04 PM said...

யுவன் சிறந்த கதைசொல்லி என்பதற்கு சான்றன கதைகளில் இதுவும் ஒன்றாக உள்ளது .

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்