Jan 29, 2012

தாயாரின் திருப்தி-கு.ப.ரா

பங்குனி மாஸத்து வெய்யில் சுள்ளென்று அடித்தது. தலை வெடித்துப்போகும் போன்ற தாபம். உச்சி கால வேட்கை மிகுதியால் உலகமே மயங்கியிருந்தது. காக்கை கூட வாயைத்திறந்துகொண்டு மௌனமாக உட்கார்ந்திருந்தன. நாய்கள் மட்டும் எச்சில் இலைகளுக்காக பிரமாதமாக ரகளை செய்துகொண்டிருந்தன. பிராமணர்கள் துடித்துக்கொண்டு நடந்துவந்து சோ்ந்தார்கள்

புரோஹிதர் கண்ணை மூடிக்கொண்டு மந்திரங்களை அர்த்தமில்லாமல் ஓட்டினார். “பிராசீநவிதி“kupara4 “பவித்ரம் த்ருத்வா“ என்பவைகளையும் மந்திரத்துடன் சேர்த்து ஒரு ராகத்தில் பாடிக்கொண்டே போனார். பிராமணர்களுக்கு வஸ்திரம் கும்பம் தட்சிணை இவைகள் கொடுக்கப்பட்டு சாப்பிட உட்கார்ந்தார்கள்.

சுந்ரரேசய்யரின் தாயாருக்கு அன்று சிரார்த்தம். அவர் நாஸ்திகருமல்ல ஆஸ்திரகருமல்ல. தென்னிந்திய ஆங்கிலம் படித்த பிராமணர்களின் திரிசங்கு கூட்டத்தைச் சேர்ந்தவர்.ஸ்நான சந்தியா வந்தருதிகள் விதிப்படி நடக்கவில்லை. ஆனால் தர்ப்பணமும் ஸ்ரார்தமும் மட்டும் தவறாமல் நடைபெறும்.அந்த தினங்களில் மட்டும் விபூதி பஞ்சகச்சம் இவைகள் பவித்திரத்தை சந்திக்கும். சுந்தரேசய்யரின் பஜனை ஒன்றும் விளங்கும். அவர் அதில் அசாத்திய மோகம் கொண்டவர். ராம சங்கீர்த்தனத்தில் உருகிக் கண்ணீர் விடுவார்.அதற்காக ஊரில் அவரை கொஞ்சம் கேலி கூடசெய்கிறதுண்டு. ஆனால் ஆடிமாத்தத்தில் வெகு சாதுவான பிரகிருதி. பிச்சைக்கராரனென்றாலும் ஏதாவது கொடுக்காமல் அனுப்ப மாட்டார்ஃ அதிலும் கூன் குருடென்றார் அரை, கால் என்று கொடுத்து விடுவார். இதற்காக அவரைப் பற்றி ஊரில் உலகம் தெரியாதவரென்றும் கொஞ்சம் “கிறுக்கு“ மநுஷ்யனென்றும் பேசிக்கொள்வதுண்டு.

பிராமணர்கள் சாப்பாடு முடிந்து பிண்டப்பிரதானமும் ஆய்விட்டது. பிராமணர்கள் ”திருப்தி” சொல்ல வேண்டிய கட்டம். சுந்தரேசய்யர் மூன்று வயதுக் குழந்தை வாசலில் விளையாடிக்கொண்டிருந்தவன் உள்ளே ஓடி வந்து ”அப்பா வாசல்லே பாட்டி வந்திருக்கா. சாதம் வேணுமாம்” என்றான்.

”பாட்டி வந்திருக்காளா? அதார்ரா?” என்று கேட்டுக்கொண்டே சுந்தரேசய்யர் வாசலில் போய்ப் பார்த்தார்.

வாசற்படியில் கையில் தடியும் தரகரக் குவளையுமுள்ள ஒரு குறக்கிழவி சாய்ந்து கொண்டிருந்தாள்.

அந்தத் தவிப்பைப் பார்த்த சுந்தரேசய்யர் மனதில் திடீரென்று ஏதோ ஓர் எண்ணம் ஏற்பட்டது. ஜாதியாசாரம் என்று சொல்லப்படும் மூடபக்தியை மனிதனின் ஸ்வபாவ குணமான இரக்கம் ஒரேயடியில் வென்றுவிட்டது. ஒரு நிமிஷத்தில் என்ன செய்ய வேண்டுமென்பதையும் தீர்மானித்து. அதற்கு மதநம்பிக்கைக்கு ஏற்ற சமாதானத்தையும் கொண்டார்.

சட்டென்று உள்ளே சென்று ஒரு பிண்டத்தையும் தன் தீர்த்த கலசத்தையும் எடுத்துககொண்டு வாசலில் வந்து உருண்டையைக் கரைத்துக் கிழவியின் குவளையில் ”பிடி” என்று ஊற்றினார். அதை மடமடவென்று குடித்துவிட்டு கிழவி ”அப்பாடா. உசிர் வந்திச்சு! மகாராசா நீ நல்லா இருக்கணும். உன்னைப் பெத்த வயிறு என் வயிரைப் போலே குளிரணும்” என்று சொல்லி சிரமம் மேலிட்டு படியில் சாய்ந்துவிட்டாள்.

”என்ன..என்ன!” என்று ஓடி வந்த பிராமணர்கள் இதைப் பார்த்துத் திகைத்துப் போய் ”அடாடாடா..என்ன அபசாரம்! சிரார்த்தம நஷ்டமாய் விட்டதே! என்ன அக்ரமம்! யார் இப்படி சிரார்த்தம் செய்யச் சொன்னார்கள்!” என்றார்கள்.

”ஏன்?” என்றார் சுந்தரேசய்யர்.

”வாயசத்துக்குக் கூட இன்னும பிண்டம் வைக்கவில்லை. பித்ருக்கள் காக்கையாக வந்து காத்திருப்பார்களே! ”

”மனித ரூபத்துடன் வந்து என் தாயார் இதோ திருப்தியடைந்து விட்டாளே! காக்கையைக் காட்டிலும் மனித ஜன்மம் மேலல்லவா?”

”உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. உம். இனிமேல் இங்கே ஜலபானம் செய்யக்கூடாது. ஓய் சாஸ்திரிகளே தாம்பூலத்தை இங்கேயே எறிந்து விடும்” என்று சொல்லி பிராமணர்கள் வஸ்திரம் கும்பம் தட்சிணைகளை கைபடாமல் எடுத்துக்கொண்டு கீழே கால்வைத்துக்கூட நடக்காமல் சென்றார்கள்.

”ஐயோ. இதென்ன இப்படிச் செய்து விட்டீர்களே!” என்று கவலையோடு மனைவி வெளியே வந்தாள்.

”என்னடி அசடு! வாசலில் பார் அம்மா உருவெடுத்து வந்திருப்பதை!”

***

குபரா முத்திரைக் கதைகள் -  செல்லப்பா பதிப்பகம் முதற்பதிப்பு டிசம்பர் 2003

தட்டச்சு உதவி: ரமேஷ் கல்யாண்

ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதிமணியன்.

ருசியான கறி சாப்பிட வேண்டுமென்றால் முஸ்லீம்களை சிநேகிதர்களாய் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்பான் பக்தவச்சலம். அவனுக்கென்று பெயர்சொல்லக்கூடிய அளவில் ரகீம், மெகபூப் இருந்தார்கள். பக்தவச்சலம் வீட்டில் யாரும் கறி சாப்பிடுவது இல்லையென்றாலும் அவன் கிடைக்கிற பக்கம் சாப்பிடுவான், நான் கூட ரொம்ப நாளாய் பக்தவச்சலத்தை அய்யர் என்றுதான் நினைத்திருந்தேன், சிவப்பாய் நாமம் போட்ட முகத்தோடு அவனின் விதவை அம்மாsubrabharathimanian (2) வும், அவனின் அண்ணனின் பூணூல் உடம்பும், செத்துப் போய் படத்தில் இருந்த அப்பாவின் நாமம் போட்ட போட்டோவும் திரும்பத் திரும்ப அவனின் ஜாதியைப் பற்றி நினைக்கிறபோதெல்லாம் ஞாபகம் வரும்.

ஒருநாள் வீட்டில் கறி சமைத்திருந்தோம். பாதி சாப்பாட்டில் முகம் வியர்த்து கறியை ருசித்துக் கொண்டிருந்தபோது பக்தவச்சலம் வந்தான். அம்மா "கொஞ்சம் சாதம் சாப்பிடுப்பா" என்றாள். "ஐயோ ..அவங்கெல்லா கறி சாப்புடமாட்டாங்கம்மா..அய்யரு அவங்க " என்றேன். "நாங்க அய்யரில்லீங்க..:சைவ செட்டியார் " ரொம்ப நாளாக உறுத்திக் கொண்டிருந்த விஷயத்திற்குப் பதில் கிடைத்தது. "எங்க ஊட்ல சாப்பிடமாட்டங்க; நா அப்பப்போ வெளியே சாப்புடுவேன்". அம்மா இன்னொரு தட்டை அவன் முன் வைத்தாள். அப்போதுதான் கறியை முதல் முதலில் மெகபூப் வீட்டில் சாப்பிட்டதைப் பற்றிச் சொன்னான் "சொல்லி வெச்சாப்புலே நாலே துண்டுதா; ஆனா ஒவ்வொன்னும் தனி ருசி". பீங்கான் தட்டில் கறியும் மசாலாவும் துளிகூட இல்லாமல் எச்சில் பண்ணிச் சாப்பிட்டதைச் சொன்னான்.

பின் ஒரு நாள் மாதத்தில் கடைசி சனிக்கிழமையன்று மெகபூப்பிடம் சொல்லி ஸ்கூலிற்குக் கொண்டுவரும் டிபன்பாக்சில் அதே போல் நாலு துண்டு கொண்டு வந்தான். மெகபூப் வீட்டுக்கறியைச் சாப்பிட வேண்டும் என்று பக்தவச்சலத்திடம் நான் ஒரு முறை வெட்கத்துடன் சொன்னதை எப்போதோ சொன்னானாம். நாலாம் பீரிட் நடந்து கொண்டிருந்தபோது "முஸ்லீல் வீட்டுக்கறி சாப்புடலாமா இன்னிக்கு " என்றான் பக்தவச்சலம். எச்சில் ஊறியது. "மெகபூப் கொண்ணாந்திருக்கான்" அந்த பீரிட் பூகோளப் பாடம் மனசில் பதியவில்லை. சொல்லி வைத்தமாதிரி நாலுதுண்டு மெகபூப்பிற்கு இரண்டும் எனக்கும் பக்தவச்சகலத்திற்கும் இரண்டும். நன்றாகச் சாப்பிட்டோம். அந்த வருஷத்து ரம்ஜானுக்கு என்னைக் கூப்பிடேன் என்று நான் மெகபூபிடம் சொன்னேன். ஆனால் அவன் கூப்பிடவில்லை. பக்தவசலம் மட்டும் போய்ச் சாப்பிட்டுவிட்டு வந்தான். அவன் மேல் எனக்கும் பொறாமைகூட. ஆனாலும் பக்தவச்சலம் ஒல்லியாகத்தான் இருப்பான் என்பதில் எனக்குச் சந்தோசம் உள்ளூர.

வீட்டில் கறி சமைப்பதை நினைக்கிற போதெல்லாம் சேக் மொகீதின் ஞாபகம் வருவார். அவரிடம்தான் எப்போதும் அப்பா மட்டன் வாங்குவார். மட்டன் வாங்குகிற அன்று திடீரென்று சொல்வார். அம்மா நிறைய நிறைய சின்ன வெங்காயத்தைப் பரப்பி உட்காருகிற போதே எங்களுக்குப் புரிந்துவிடும். அப்பா என்றும் சந்தோஷமாய்க் குரல் பிளக்கும். "வாடா மகனே மொகீதின் கடைக்குப் போகலாம்" என்பார். அப்பா மீறிப் போனால் அரைக் கிலோதான் எடுப்பார். அதற்குக்கூட முழுசாய்ப் பணம் கொடுப்பாரா என்பது தெரியாது. காரணம் ஒவ்வொரு முறையும் பொட்டலத்தை என்னிடம் கொடுத்தபின் மொகீதின் மீதியைச் சந்தையன்னிக்குத் தர்ரேனே என்றோ, இதையும் கணக்கிலே வச்சிக்கோ என்றோ, சரி வரட்டுமா என்றோதான் சொல்வார். அவர் அந்தக் கடனை எப்போது கொடுப்பார் என்றுதெரியாது. ஆனால் மொகீதின் அப்பாவிடம் கடன் கேட்டு வந்ததை நான் பார்த்ததில்லை.

வீட்டில் நுழைந்தால் அம்மா கண்களில் கண்ணீரோடு வெங்காயத்தை உரித்துக் கொண்டிருப்பாள். உரித்த வெங்காயத்தை வானலியில் போட்டு வதக்கி ஆட்டாங்கல்லில் போடுவதற்கு முன் எனக்கும், தம்பி பழனிவேலுக்கும் கொஞ்சம் வெந்து வதங்கின வெங்காயம் ஆட்டாங்கல் ஓரத்தில் இருக்கும்: அதை மென்றபடிதான் அம்மாவின் கைகளில் மேல் எங்கள் கைகளையும் ஓட்ட வைத்து மிளகு அரைப்போம். மிளகு இளக வேணும் என்பதற்காக அம்மா அவ்வப்போது தண்ணீர் ஊற்றிக் கல்லை உருட்டுவால்.சில சமயம் மிளகு தெறித்துக் கண்ணில் விழும். பின் எங்கள் கண்களை ஊதித்துடைத்து "வர்ராதேன்னா கேட்டியா.." என்று நகர்த்துவாள். உடனே அந்த இடத்தை விட்டுப் போயிடவேண்டும் என்று தோணாது ஆட்டாங்கல்லிற்குப் பக்கத்திலேயே இருப்போம். அம்மாவுடன் பேச்சுக்குத் துணை யாராவது இருக்கலாமே என்று தோணும். அம்மாவும் அதையே விரும்புவாள். சந்தனமாய் மிளகாய் அரைக்க வேண்டும் என்பாள். "தொட்டு நெத்தியிலே வெச்சுக்கடுமா" என்றால் "அட சீ .." என்பாள்.

கறி சமைக்க என்று புழக்கடையில் இருந்து சட்டி எடுத்து வருவாள் பின் அங்கேயே அது போய்விடும். 'மாமிசம் அதிகமா கூடாதடா’ என்பாள். மெகபூப் வீட்லே மட்டும் வாரம் நாலுதரம் ஏம்மா என்றால், அவங்க ஜாதி அப்பிடி, சூரத்தனம் என்பாள். கறி சமைக்க என்று தனியாய்ப் பாத்திரம் உபயோகிப்பதைப் பற்றி மெகபூப்பிடமோ, இரவியிடமோ கேட்க வேண்டும் என்று ரொம்ப நாளாய் மனசில்.

அப்பா அம்மாவிடம் கறி சமைக்கலாமா என்று கேட்டால் உடனே அம்மா சம்மதித்ததாய் எனக்கு நினைவில்லை. அம்மாவிற்கு கறி ஏன் பிடிக்காமற் போயிற்று என்பதற்கு ஏதாவது காரணம் இருகலாம் என்று நினைத்ததுண்டு. இதைப் பற்றி அப்பாவிடம் ஒரு முறை கேட்டேன். ‘அவளுக்கு பெரிய பாப்பா பொண்ணுனுன்னு மனசுல நெனைப்பு’ எரிச்சலாய் சப்தமிட்டுச் சொன்னார். அப்போதுதான் அய்யர்கள் கறி சாப்பிடமாட்டார்கள் என்கிற விஷயம் ஒரு தகவலாய் எனக்குத் தெரிந்தது.

அப்பாவிற்கு ஆட்டுத் தலைக்கறி பிடிக்கும். தலை வாங்கி வரும்போது சொல்லி வைத்தமாதிரி ஆட்டுக்கால்களையும் வாங்கி வருவார். தீயில் கருகினபின்பு ஆட்டுக்கால்களை கழுவி கயிற்றில் கோர்த்து சமையற்கட்டில் அப்பா தொங்கவிட்டு விடுவார். ‘அப்ப்றமா சூப்பு போட்டுக்கலா’என்பார். பின் கறி எடுக்காத ஞாயிறுகளில் சூப்பு கிடைக்கும். அப்பா தன்னிடம் காசில்லாத சமயங்களில்தான் சூப்பு போடச் சொல்வதாக நான் நினைப்பேன் அநேகமாக அது சரியாகத்தான் இருக்கும். தீயில் ஆட்டுத்தலையைக் கறுக்கும்போது வருகிற வாசமே தனி ’உம்’ என்று மூச்சிழுப்பேன். கத்தியால் மயிறை நன்றாகச் சுரண்டிச் சுத்தம் செய்துவிட்டு வெட்டிவர அப்பா அனுப்புவார். மொகீதின் கடையில் ஆட்டுத்தலையை சுத்தம் செய்து வெட்டித் தரவென்று பெரிய வீட்டு நடராஜன் இருப்பான். வெகு லாவகமாகவும் சீக்கிரமாகவும் வெட்டித் தருவான். ஆட்டு மூளை சிதைந்து விடாமல் தனி இலையில் கட்டிக் கொடுப்பான்.

சின்ன வானலியில் அரைத்த மிளகும், உப்பும் சேர்த்து மூளையைச் சமைத்து ருசிப்பதில் ஒரு தனி ருசி. பொட்டுப் பொட்டாய் நடுக் கையில் வைத்து நக்குவேன். அதைப் பங்கிடுவதில் எனக்கும் தம்பி பழனிவேலுக்கும் நிறையத் தடவை சண்டை வந்திருக்கிறது. அம்மாதான் நிவர்த்தி செய்வாள். ஆனாலும் ஒரு நாள்கூட எனக்கு கொஞ்சம் என்று அமா கை நீட்டியதில்லை. அம்மாவிற்கு மூளைக் கறி பிடிக்காது போனது அதிசயந்தான். சூடாக நாக்கில் போட்டுப் பஞ்சு மிட்டாய் மாதிரி அரைப்பது ஒரு அபூர்வமான விஷயம் பழனிவேலுவுக்கு அதெல்லாம் தெரியாது. உடனே முழுங்கிவிட்டுக் கையை நீட்டுவான். அதில் தான் எனக்கும் அவனுக்கும் நிறைய மனஸ்தாபம். அம்மா சொல்கிறாளே என்றுதான் அவனுடன் நான் அதைப் பகிர்ந்து கொள்வேன். முளை சாப்பிடுகிறபோது மடும் எனக்குத் தம்பியென்று ஒருத்தன் இல்லாமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பேன். ஒரு நாள் அம்மாவிடமும் இதைச் சொல்லிவிட்டேன் ‘அடசச்ண்டாளா, இப்படியொரு ஈனப் புத்தியா உனக்கு..’என்றாள். அப்பாவுக்கும் இது தெரிந்துவிட்டது. ‘இனி எப்ப ஆட்டுத் தலைக்கறி எடுத்தாலும் ரெண்டுதலை எடுக்கப் போறேன். ஒரு தலை மூளை உனக்கு; இன்னொன்று அவனுக்கு..மொகதீன் கடைக்குத் தலக்கறி வெட்டப் போறப்போ நீயும் போயி ஒரு பங்கு தனியே வாங்கிக்கோ’ அப்படி நடந்ததாக எனகு ஞாபகமில்லை. அப்பா ஒரு ஆட்டுத் தலைதான் எப்போதும் எடுத்து வந்திருக்கிறார்.

மெகபூப் , ரகீம் வீட்டிலெல்லாம் அப்படி இல்லை. தலைக்கறியுடன் ஏதாவதொன்றும் கூட இருக்கும். ரகீம் ஈரலுக்கென்று தனிருசி என்பான். எனக்கு அப்படியொன்றும் தோன்றியதில்லை. மூளைக்கறி தனிதான். இதைத் தவிர ரத்தப் பொறியல், குடல்கறி, ஈரல் இவையெல்லாம் அபூர்வம்தான். ரத்தப் பொறியல் சாப்பிடுகிற அன்றைக்கு வெளிக்குப் போகிறபோது அதைக் கவனிப்பேன். கறுப்பாகத் தான் இருக்கும். முதல் தடவையாக அதைக் கவனித்தபோது ஆச்சர்யமாகவும் பயமாகவும் இருந்தது. அம்மாவிடம் ஏதோ வியாதிதோ என்று கேட்டேன்.

அப்பாவுடன் கறி வாங்கப் போகிற போதெல்லாம் பக்கெட்டில் இருகும் இரத்தக்கட்டியைத் தொட்டுப் பார்ப்பேன். லேசான பூச்சுமாதிரி கையில் ஒட்டிக் கொள்ளும். பக்கெட்டினுள் அழுத்த அழுத்த மேலே பிய்ந்து வருவது பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். ஒரு நாள் யாருமே பார்க்கவில்லையென்று ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டேன். குமட்டுகிற மாதிரி இருந்தது.

இரத்தப் பொறியல் மாதிரியே கோழிக்கறியும் எங்கள் வீட்டில் அபூர்வம்தான். ஒடம்புக்கு ரொம்பவும் சூடு அது என்பார் அப்பா. அம்மாவுக்கு ஒரு முறை மஞ்சள் காமாலை வந்து விட்டதாம்.கல்யாணமான புதிதில் மஞ்சள் காமாலையே அதிக சூட்டில் வருவதுதானாம். சரியான பின்னும் அடிக்கடி கோழிகறி சாப்பிடுவது ஆகாது என்று வைத்தியர்கள்சொன்னதால் அப்பாவும் கோழி அடிப்பதை எப்போதாவது செய்வார்.

கோழிக்கறி போடுவது ஆட்டுக்கறி போடுகிற மாதிரி அல்ல விஷயம். ஒர் வாரம் முன்பே தெரிந்துவிடும் சந்தைக்குப் போய் வருகிறபோது, வீதியில் விற்றுக்கொண்டு போகிறபோதுவாங்குகிற கோழியை அப்பா வீட்டில் கட்டிப் போடுவார். நல்ல தீனியாய்ப் போடச் சொல்வார். ‘ஒரு வாரம் இருக்கணும். நல்ல தீனிதின்னு பெலமாயிட்டா கறி ருசியாஇருகும்கறதுதான் சூட்சமம்’ அரிசியில் ஊற வைத்த கேப்பையும், அபூர்வமாய் கோதுமையும் அதற்குப் போடுவதில் பழனிவேலுவிற்குத் தனி அக்கறை.

ஒரு வாரம், பத்து நாள் அதை வளர்த்து விட்டுக் கொல்லப் போகிற போது வருத்தமாக இருக்கும். அப்பா கோழியின் கால்களை ஒன்றாய் சேர்த்து வலுவான வலதுகையை நீட்டிக் கையின் இடைப்பகுதியின் அதன் தலைக்கும், உடம்பிற்கும் இடையிலான ப்குதி அடிபடுமாறு ஓங்கி அடிப்பார். அநேகமாய் கோழி தலை சாய்ந்து விடும். கூடவேகக் என்று ஒரு சத்தம் இருக்கும். அவ்வளவுதான். உடனே கத்தியால் அறுப்பார். அறுக்கிறபோது சின்ன வானலியில் ரத்தம் பிடிப்பேன். ஆட்டு மூளை மாதிரி கோழி ரத்தம்.

கோழியைப் பொசுக்குவதில் அப்பா சோம்பேறி. ஒவ்வொரு இறகாய்ப் பிய்த்தெடுப்பதில் சோர்ந்து போவார். ஆனால் எனகு அது அபூர்வமான விஷயமாக இருக்கும். இறகுகளின்வெவ்வேறு நிறங்களை இரசித்துக் கொண்டே பிய்த்தெடுப்பேன். இடைஇடையே கொத்தாய்ப் பிய்த்தெடுத்துப் பலமாகக் காற்று வீசுகிறபோது தூவி விடுவதில் சுகமுண்டு. வீதியில்போகிறவர்கள் முகத்தில் தெறிக்க ‘உங்க வீட்ல கோழிக் கறின்னா ஊர்பூரா சொல்லணுமா’ என்பாரகள். இறகுகள் பிய்த்தெடுக்கப்பட்ட கோழி உடல் கொஞ்சம் வெது வெதுப்பாகஇருக்கும். அந்தச் சூட்டை கொஞ்ச நேரம் எப்போதும் உணர்வேன்.

கோழியை அறுத்தபின் குடலை எறிந்து விடுவார் அப்பா முன்பெல்லாம். பின் ஒரு நாள் குடலைக் கழுவுவது பற்றிச் சொல்லித் தந்தார். பின் கோழியை அறுக்கிற போதெல்லாம்குடலைச் சுத்தம் செய்து அதைத் தனிச் சமையல் செய்வது என் இலாகாப் பொறுப்பாகிவிடும். நீளமான குடலின் உட்புறத்தை தென்னங்கீற்று குச்சியால் உள்புகுத்தி மலத்தைவெளியே எடுப்பேன். சர்ரென்று மேலிருந்து உருவுகிற போது மலம் வடிந்து விடும். சின்னத் துண்டுகளாய் அறுத்து நாலைந்து முறை தண்ணீரில் அலசிக் கையில் ஏந்திக்கொள்கிறபோது வழுக்கும். ‘பீன்ஸ்..பீன்ஸ் கறி’ என்பான் பழனிவேல். ஆட்டுக்கறி சாப்பிடுகிற போது சாப்பாட்டிற்கு ஒரு மணிநேரம் முன் மூளையை சாப்பிடுகிற மாதிரி கோழி விஷயத்தில்குடல். ஆனால் மூளைபோல் ருசிக்காது குடல்.

கறிக் குழம்பு கொதிக்கிற மணத்துக்காகக் காத்திருப்போம்; சமையல் அறையில் தலையை நீட்டி வரலாமா என்பேன். அம்மா டம்ளரில் இரண்டு கரண்டி குழம்பையும், நாலு துண்டுகறியையும் போட்டுக் கொடுப்பாள். சூடாக இருக்கும். ஆற்றி ஆற்றிக் குடிப்போம் மிளகுக் காரம் கண்ணீரை வரவழைத்து விடும். முழுசாய் வேகாத கறியை மெல்வதில் சிரமம்இருக்கும். முழுசாய் வேகவில்லையென்றால் என்ன மாட்டுக்கறி மாதிரி என்பார் அப்பா. அவர் அப்படிச் சொல்வதன் மூலம் மாட்டுக்கறி சாப்பிட கெட்டியாக இருக்கும் என்பதைஅறிந்து கொண்டேன். கொஞ்சம் ஜலதொஷமாய் இருந்து கோழிக்கறி சமைக்கிற அன்று அப்பா கறிக்குழம்பு இடையில் சாப்பிடுவார். மற்றபடி நாங்கள் தான்.

புரட்டாசி மாதங்களில் வீட்டில் கறியே எடுக்கமாட்டார்கள். அப்பா விரதம் இருப்பார். கடைசி சனி அன்று காரமடை தேருக்குப் போவதற்காக. எப்போது அக்கா வீட்டில் கறிசமைப்பார்கள் என்று காத்திருப்போம். அக்கா வீட்டிலேயே ஆட்கள் அதிகம் என்றாலும், அக்கா உடனே வந்து சொல்லிவிட்டுப் போய்விடுவாள். நானும் பழனிவேலும் அதற்காய்மோப்பம் பிடித்தவாறு இருப்போம். அப்பாவும், அம்மாவ்ம் தொடமாட்டார்கள். அக்கா வீட்டிலிருந்து நாங்கள் வரும்போது அம்மா குளிச்சிட்டு வந்திடுகடா என்பாள். சில சமய்ம்குளிப்போம். நிறையத் த்டவைகள் குளிச்சியாடா என்றால் ‘உம்’ என்றபடி நழுவி விடுவோம். அமாவாசை வந்து மூன்று நாள் கழித்துத்தான் கறி சமைக்க வேண்டும் என்று விதிமாதிரி ஒன்றை அம்மா எப்போதும் பின்பற்றி வந்தாள்.

கறி சமைக்கிற அன்றைக்கு நல்ல அரிசிச் சாதம் இருக்கும். வழக்கமாக இருக்கும், அரிசியைவிட நல்லதாக அப்பா வாங்கி வருவார். சுடச்சுடச் சோற்றை பிளேட்டில் போட்டுக்கறிக் குழம்பை அம்மா ஊற்றுவாள். முதல் கவளம் எப்போதும் நாக்கைச் சுட்டுவிடும். அம்மா விசிறியொன்றால் விசிறுவாள். நாலு கவளத்தைக் குழம்பில் பிசைந்துசாப்பிட்டபின் அம்மா கறி என்பேன். அம்மா கறியப் பிரித்து வைக்கிறபோது அம்மாவின் கைகளையே பார்த்துக் கொண்டிருப்பேன்.

அப்பாவிற்கு நாலு கறி அதிகம் வைப்பாள். எனக்கும், தம்பிக்கும் சரியான அளவாக இருக்கும். ‘அவன் தம்பிதானே எனக்கு ரெண்டு சேர்த்தி வைக்கிறது’ என்பேன். ‘அட,அங்கலாப்பே பாரு’ என்று சேர்த்து வைப்பாள். பழனிவேல் முகம் சுருங்கும். ஈரல் துண்டுகளை எண்ணிச் சமமாய் வைத்துவிட்டு மீதியை வாயில் போட்டுக்கொள்வாள்.அப்பாவிற்கு எலும்புக்கறி ரொம்பவும் பிடிக்கும். நாங்கள் கடிக்க முடியவில்லை என்று எச்சில் பண்ணி வைத்துவிடுகிற எலும்பைக் கூட அப்பா எடுத்து கடக்முடக்கென்று சுத்தம்செய்துகொண்டிருப்பார். ‘எலும்பிலே இருக்கிற ஊளெ நல்லதுடா’ என்பார். நீளமான எலும்பு கிடைக்கிறபோது அதை உடைத்து ’இதபாரு..இதுதா நான் சொல்றது’ என்று காட்டிவாயைத் திறக்கச் சொல்வார். அம்மா எனக்குத் தெரியகூடாது என்று மறைத்துக் குனிந்து சாப்பிடும்போது பழனிவேலுக்கு ரெண்டு துண்டுகளைப் போட்டுவிட்டால் முறைத்துப்பார்ப்பேன். அவன் ஒன்றும் தெரியாத மாதிரி சாப்பிட்டுக்கொண்டிருப்பான். ஆளுக்கு மொத்தமாய் பத்து துண்டு வருவதே அதிகபட்சமாய் இருக்கும். மீறி கேட்கிறபோதுஅம்மாவின் பங்கு குறைந்துவிடும் என்பது தெரியும். சிலசமயம் அப்படிப் பெயருக்கென்று ஓரிரண்டு துண்டுகள் மட்டுமே அம்மாவிற்குக் கிடைத்த நாட்கள் நிறைய இருக்கும்என்று தோன்றும். அதற்கு மேலும் அதிகமாய்க் கறி எடுத்து வர அப்பாவால் முடியாதுதான்.

கோழிக்கறி சமையலின்போது தலை யாருக்கு என்பதில் விரோதம் வளரும். குழம்புப் பாத்திரத்திலிருந்து கோழியின் தலையோடு கரண்டியை எடுக்கும்போது யார் பிளேட்டில்போடுகிறாள் என்பதில் அவளின் அதிகாரத்தை உபயோகப்படுத்துகிற மாதிரி செயல்படுவாள். போட்டுவிட்டு அன்னிக்கு யார் அதிர்ஷ்டக்காரன் என்பாள். கோழித்தலை எனக்குவிழுந்து விட்டால் சிரமங்கள் இருக்காது. இல்லையென்றால் சாப்பிடுகிறபோது தலை விழுந்துவிட்ட பிளேட்டைப் பார்த்து வெறுவெறுத்துக் கொண்டிருப்பேன். அம்மாவாய்பொத்திச் சிரிப்பாள். அது பழனிவேலின் பக்கமாய் இருந்துவிட்டால் அன்றைக்கு ஏதாவது விஷயத்தினை அவன் மேல சொல்லி நாலு அடி கொடுத்துவிடுவேன். பழி வாங்கினதிருப்தி பின்னரே அடங்கும்.

அன்றைக்கு அப்படித்தான் நடந்துவிட்டது. கோழித்தலை பழனிவேல் பக்கம் விழுந்துவிட்டதற்காய் என்முகம் சிறுத்துப் போனது. அப்பாவும் ஏதோ சொல்லிச் சிரித்துவிட்டதுமுகம் சிவக்கச் செய்துவிட்டது. சூடான சாப்பாட்டில் வேர்க்கிற முகம் அன்று அதிகமாய் வேர்த்துவிட்டது. எதுவும் பேசாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அப்பாவும் என்னடாஇது என்றார். தன் பங்கிலிருந்து நாலு துண்டை எடுத்துப் போட்டார். நான் கோபத்துடன் அவற்றை அடையாளம் பார்த்துப் பொறிக்கி அவர் பிளேட்டில் போட்டேன். அப்போதுபழனிவேல் அவன் எச்சில் கையால் என் சிறு பிளேட்டில் இருந்த கறியில் ஈரல் துண்டை எடுத்துவிட்டான். பக்கத்தில் இருந்தவனின் தலைவை நச்சென்று சுவரில் மோதினேன்.அய்யோ என்றான். அவன் தலையிலிருந்து ரத்தம் வழிந்ததை அப்பா பார்த்துச் சத்தம் போட்ட பின்புதான் உணர்த்தேன். ‘அடப் பாவி’ என்று அம்மாவும் எழுந்தாள். அப்பா எச்சில்கையால் என் முகத்தில் அறைந்தார். நான் பயந்து ஓடிப்போய் வாசல் முன்புறம் அழுதுகொண்டே நின்றேன். இரண்டு துணிகளைக் கிழித்து கட்டுப் போட்டும் ரத்தம் நிறகாதபோதுஅம்மா அவனைத் தோளில் சாத்தி வெளியில் வந்தாள். என்னைப் பார்த்து மீண்டும் அடப்பாவி என்றாள். அப்பாவிடமிருந்து அடிவிழும் என்று தப்பி ஓடினேன். ரொம்ப நேரம்கழித்துதான் பசிப்பதை உணர்ந்தேன். எச்சில் கையை டெளசரில் துடைத்துக் கொண்டேன். வறண்டு போயிருந்தது. சாயங்காலம் அப்பா என்னை ரொம்பநேரம் வெளி இடங்களில்தேடி என்னைக் கண்டுபிடித்தார் ‘அடிக்கலை வாடா....’ என்று அழைத்துப் போனார். அவர் முன் நடந்து போக நான் ஐம்பது அடி இடைவெளியினைக் காப்பாற்றி வீடு சேர்ந்தேன்.பழனிவேல் தலைக் கட்டுடன் சோர்ந்து கிடந்தான். அம்மா ‘நாலு துண்டு கறிக்காக இத்தென ரத்தத்தெ வீணாக்கிட்டியேடா.. இந்த அஞ்சு வயசு கொழந்தே இதுக்கு எவ்வளவுகஷ்டப்படப் போகுதோ..நீ உருப்படுவியா..’ என்று அழுதாள். அன்றைக்கு மிச்சம் இருந்த குழம்பையும் கறியையும் யார் வாங்கிப் போயிருப்பார்கள் என்று யோசித்தேன். அம்மாசுத்தமாய் ருசி பார்த்துக்கூட இருக்கமாட்டாள் என்று தோணியது.

பழனிவேல் தலைக்காயம் ஆற இரண்டு மாதம் ஆகிவிட்டது. எப்போதும் தலையில் கட்டு இருந்துகொண்டே இருந்ததால் அவனுக்கு தலைக்குக் குளிக்கவோ சரியாகத் தலையைசீவிக் கொள்ளவோ முடியாமற் போயிற்று. தலைமுடி கூட ரொம்பவும் வளர்ந்து விட்டது. அந்த இரண்டு மாதத்தில் கறி சமைப்பது பற்றி அப்பா அம்மாவிடம் எதுவும்சொல்லவில்லை. இரண்டு மூன்று வாரம் கழித்து அப்பா கேட்டார் ‘எனக்கு வேண்டா..நீங்க வேணா சாப்புடுங்கோ’ என்றாள் அம்மா. அன்றைக்கு அப்பா மொகிதீன் கடைபோகவில்லை.

இதற்குப் பின்னாலும் ரெண்டு மூன்று முறை அப்பா கறி சமைப்பது பற்றிச் சொன்னபோது அம்மா பேசாமலேயே இருந்தாள். அப்பாவும் கட்டாயம் செய்யவில்லை. ஒரு நாள்பழனிவேலின் தலையைத் தடவி அவன் காயத்தை அம்மா பார்த்துக் கொண்டிருந்தாள். அவளையே நான் வெறித்துப் பார்த்தேன். ‘நாலு துண்டு கறிக்காக என்ன செஞ்சுட்டா இவன்.என்னோட சதைக் கறியும் ருசியா இருக்குமுன்னா என்னையே சாப்புட்டுவான் படுபாவி’ என்றாள். அம்மா என்னை வெறுக்க இப்படியொரு காரணமாகிவிட்டதே என்றுஅழுகையாக இருந்தது.

ஆறேழு மாதம் போயிருக்கும் வீட்டிக் கறி சமைத்து. இடையில் அக்கா வீட்டில் தான் அவ்வப்போது. அதுவும் ஒவ்வொரு முறையும் கறி சாப்பிடும்போது தம்பியின் காயம்ஞாபகம் வந்தாலும் யாராவது அதைப் பற்றி சொன்னதாலும் எனக்கு சாப்பிடுவதில் பிடிப்பே இல்லாமற் போயிற்று.

பக்கத்து ஊரிலிருந்து ஒரு நாள் குமரேசன் மாமா வந்திருந்தார். அவர் சேவல் சண்டைப் பிரியர். அதற்காய்ச் சேவல் வளர்ப்பார். சேவல் சண்டையில் சாகிற கோழியின் கறியைரொம்பவும் சுவைத்துச் சாப்பிடுவார். அதைக் கோச்சைக்கறி என்பார். அன்றைக்கு வெள்ளையூத்து சேவல்கட்டில் தன் கோழி ஜெயித்ததாயும், அந்தக் கோச்சைக் கறியைக்கொண்டு வந்ததாயும் சொன்னார். ‘இன்னிக்கு ராத்திரி நா இங்கதா இருக்கப் போறேன்..சமைச்சு வை..’ அப்பா சுரத்தின்றி சும்மா இருந்தார். யாரும் எதுவும் சொல்லாதபோது சத்தம்போட்டார். அப்பா எல்லாவற்றையும் விலாவரியாய்ச் சொன்னார். ‘என்னெக்கோ, எப்பவோ நடந்ததுக்கு இன்னுமா அதை மனசில வெச்சிட்டிருக்கணும். அவனும் ஒண்ணும்வெளவறியா தெரியாத பையன். அவன் ஏதோ செஞ்சுட்டான்னு ஆறு மாசமா இந்தப் பசங்களுக்கு கறியாக்கிப் போடாமெப் பட்டினி போட்டிருக்கியே..இது நல்லா இருக்கா..’சொல்லிக் கொண்டே போனார். இதை ஒருவர் சொல்லவேண்டும் என்று காத்திருந்த மாதிரி வீட்டினுள் போய் அம்மா வெங்காயக்கூடையை எடுத்து வந்து வெங்காயத்தப் பரப்பஆரம்பித்தாள். அப்பாவும் மாமாவுடன் சந்தோஷமாய் நடையை வெளியில் எட்டிப் போட்டார். அம்மா கலகலப்பாய் வெங்காயத்தை உரிக்க ஆரம்பித்தாள். கொஞ்சம் உரித்தசருகுகளை என் மேல் வீசியெறிந்து ‘வாடான்னா’ என்றாள். நானும் அவளின் தொடை அருகில் நெருக்கமாய் உட்கார்ந்தேன்.

பாதி வேலையில் குமரேசன் மாமாவைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள். அவரின் சேவல்கட்டுத் திறமையைப் பற்றி ரொம்பவும் சொன்னாள். ‘நாலு ஊருக்கும் சேவக்கட்டுசின்னதம்பின்னா ஒரு மருவாதை’ என்றாள். ‘கோச்சுக்கறி தின்னுவளர்ந்த ஒடம்புடா அது..வீர முனியப்பா மாதிரி கம்பீரமா..’ அம்மாவிற்கு மாமா மேல் சின்ன வயதில் ரொம்பவும் இஷ்டமாம் ‘நானே அவரெ கல்யாணம் பண்ணியிருந்தா இப்பிடியா ஒடக்கா மாதிரி இருப்பேன். சேவல் கட்டு கோழி மாதிரி கோச்சுக் கறியெத் தின்னுட்டு நிமிர்ந்து நிப்பேனே’

அம்மா இப்போது ஒரு புதுக்கதையைச் சொல்வதாய் எண்ணி நிமிர்ந்து அதை முழுசாய்க் கேட்கிற சுவாரஸ்யத்தில் உட்கார்ந்தேன்.

****

தட்டச்சு உதவி : கிரிதரன்

Jan 28, 2012

வண்ணதாசன் கதைகள் - சுந்தர ராமசாமி

இந்தக் கட்டுரையில் வண்ணதாசன், வண்ண நிலவன், பூமணி ஆகியோரின் கதைகளைப் பார்க்க எண்ணி இருந்தேன். இவ்விதத்தில், ஒவ்வொருவரைப் பற்றியும் என் எண்ணங்களைத் தெளிவுபடுத்த மற்ற இருவரும் உதவக்கூடுமென்ன்ற எண்ணத்தில். ஆனால் இப்போது வசதிப்படாமல் போய்விட்டது; வண்ணதாசன் போதிய அவகாசம் தந்திருந்தும் மற்றொரு சந்தர்பத்தில் நான் இதைச் செய்ய வேண்டும். இப்போது வண்ணதாசனைப் பற்றி மட்டும்.

வண்ணதாசனின் உலகம் புறப் பார்வையில் எப்போதும் நம் முன் சதா விழுந்து கொண்டிருக்கும் sundara-ramaswamy சாதாரண உலகம். டவுன் பஸ், டாக்சி ஸ்டாண்ட், பஸ் ஸ்டாண்ட், பார்பர் ஷாப்பு, பசுக்கள், மிட்டாய் வண்டி, குறுகிய தெருக்கள், தெரு வீடுகள், பள்ளிக்கூடம், குறுக்குப் பாதைகள். இதன்பின், வீட்டுப் பெண்கள், வீட்டு ஆண்கள், வெள்ளையடிப்பவன், கறவைக்காரன், பிச்சைக்காரி, நண்பர்கள். கணவன் மனைவியும் வருகிறார்கள் - எப்போதும் சின்ன வயதுக்காரர்களாக. கல்யாணத்திற்குக் காத்து புழுங்கிக் கொண்டிருக்கும் பெண்கள். அல்லது தாம்பத்தியம் சரிப்படாமல் புழுங்கிக் கொண்டிருக்கும் பெண்கள். இவர்கள் எல்லோரும் பிரந்தியம் சார்ந்து, பழக்க வழக்கங்கள் சார்ந்து, நம்பிக்கைகள் சார்ந்து வருகிறார்கள். இந்த நிஜ உலகத்தின் மீதும், இந்த நிஜ உலகத்தை சார்ந்த இவர்கள் மீதும் நாம் அக்கறை கொள்கிறோம். இவர்களின் பொதுத்தன்மை நளினமானது, பதவிசானது, இங்கிதமானது, நாசூக்கானது. கதையில் வரும் எல்லோரையும் அவர்களுக்குறிய பின்னணியையும் சேர்த்து, மன நிலையின் ஒரு சிறு வட்டத்திற்குள் தள்ளிவிடலாம்.

வாழ்க்கை இந்த ஆசிரியருக்கு எப்படிக் காட்சி தருகிறது? ஏன் இப்படி காட்சி தருகிறது? தன்னை வெளிப்படுத்துவதில் ஏன் இந்த மட்டோடு அது நிறுத்திக் கொண்டு விடுகிறது. இதை எளிமையாகக் காண, ஒரு குறுக்கு வழியாக இந்த ஆசிரியருக்கும், அவருடைய பெண் கதா பாத்திரங்களுக்குமுள்ள உறவு நிலையை யோசிக்கலாம். அந்தப் பெண்கள், அந்த சிறு வயதுக்க்காரர்கள், சின்ன மனைவிகள், டிபன் பாக்சைத் தேடிக்கொண்டு போகும் அந்தப் பெண், வெள்ளையடிப்பவனின் உச்சரிப்பை கேலி செய்யும் அந்தப் பெண், போட்டோ ஸ்டுடியோவில் பெரிதாக அழும் அந்தப் பெண், கல்யாணத்திற்கு காத்து வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் அந்த அக்கா, கணவனோடு அன்றி வெளியே செல்ல சுதந்திரமற்ற செல்லமக்கா, மெலிந்த பாப்பா, கணவனுடனும் குழந்தைகளுடனும் கைவீசி வெளியே நடமாட ஒரு சந்தர்ப்பம் வாய்த்துவிட்ட அந்தப் பெண், எழுத்தாளன் போன்றவனிடம் மயங்கி தன்னை அவனுக்குத் தவறுதலாகத் தந்துவிட்ட புஜ்ஜி, தனு எல்லோரும் எப்படிப்பட்டவர்கள்? இவர்கள் ஒரேமாதிரியானவர்கள் என்று தோன்றுகிறதல்லவா? இவர்கள் வித்தியாசமானவர்கள் தான். வெவ்வேறு பின்னணியும், வெவ்வேறு மனநிலையும், வெவ்வேறு பிரச்சனையும் கொண்டவர்கள் தான். ஆனால் எல்லோரும் வண்ணதாசனால் காதலிக்கப்படத் தகுதியானவர்கள். நளினமானவர்கள். முரட்டுத்தனத்தைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள். பிரியத்தை ஏகமாக வாங்கிக் கொள்ளவும் திருப்பித்தரவும் காத்திருப்பவர்கள். மனதில் ரகசியத் தந்திகளை மீட்டிக்கொண்டு உலகின் முன் சாதாரணமாக நடமாடுகிறவர்கள். தங்கள் பிறப்பு, சூழ்நிலை, பின்னணி இவற்றாஇ மீறி நளினத்தைத் திருப்திப்படுத்த உன்னுகிறவர்கள். புஜ்ஜி, அவளுடைய கணவனுடனான உறவை முறித்துக் கொள்ளும் போது கூட உயர்ந்த வசனம் பேசி முறித்துக் கொள்கிறாள்.

பெண் கதா பாத்திரங்கள் மீது இவர் கொண்டுள்ள உறவே முழு வாழ்வின் மீது இவர் கொண்டுள்ள vannskalyanji (2)உறவாகச் சொல்லலாம். இவருக்குப் பிரியமாக இருக்கிறது இந்த வாழ்க்கை. இது வாழ்வின் பிரச்சனைகள் தெரியாத மொண்ணைத்தனத்தின் விளைவு என்பதற்கில்லை. பிரச்சனை என்ற வார்த்தை கூட வண்னதாசன் உலகில் ஒரு கடுமையான வார்த்தை. அவருக்குத் தென்படுபவை கிரீச்சிடல்கள், உராய்வுகள், இடறல்கள், நெரடல்கள். ஒரு சிறு வெடிப்பு எப்படியோ ஏற்பட்டு விட்டது. முக்கியமாக மனித உறவுகளின் புரிதல்களில். ஒரு சிறு முயற்சி; மேலும் சற்று உன்னிப் புரிந்து கொ ள்ளும் தன்மை; அதற்கு அவசியமான பிரியம்; வெடிப்பு அணைந்து கொள்ளும். நெரடல் மறைந்துவிடும். இப்போது கூட அவருக்கு பெரிய புகார் எதுவும் இல்லை. இந்த நெரடலற்ற வாழ்க்கை எவ்வளவு சோபையாக இருக்கும் என்று கேட்கக் கூட அவருக்கு அவசியம் இல்லை. இந்த நெரடலும் சேர்ந்து அவருக்குப் பிரியமாகவே இருக்கிறது. இது எப்படி சாத்தியம்? எப்படி அனைத்தின் மீதும் ஒரு பிரியம், ஒரு ஒட்டுதல், ஒரு கனவு வழிவது சாத்தியம்? ஜானகிராமனின் விசித்திரமான கதாநாயகி எல்லோரையும் - முக்கியமாக ஆண்களை - தொட்டுத் தொட்டுப் பார்க்க ஆசைப்படுவது போல், வண்ணதாசனும் இந்த வாழ்க்கையைத் தொட்டுப் பார்த்து அதன் சதோஷங்களை அடைய ஆசைப்படுகிறாரா? பெண் ஸ்பரிசத்திற்கு ஆண்கள் இளிக்கலாம். இளிக்கிறார்கள். ஆனால் எந்த மகோன்னத எழுத்தாளனின் ஸ்பரிசத்திற்கும் வாழ்க்கை இளிக்காது.

வாழ்க்கை நளினமானதா? அல்ல. நளினம் அற்றதா? அல்ல. இங்கிதமானதோ இங்கிதம் அற்றதோ அல்ல. கனவோ, கனவுகள் அற்றதோ அல்ல. எப்படி இருப்பினும் அது நிச்சயமாக எளிமையானது அல்ல. லகுவானது அல்ல. ஒரு இயந்திரமாக பாவிக்கும் போது கூட அது மிகப் பெரிய இயந்திரம். குனிந்து பார்க்க தலை சுற்றும் இணைப்புகளும், உறுப்புகளும், இடுக்குகளும் கொண்டது. காடு எனக் கொண்டால், அதன் விஸ்தீரணம், விட்ட இடம் தொட்ட இடம் தெரியாதது. இதை முந்தியில் முடிந்து காட்டுகிறவந்தான் கலைஞன் என்பது இல்லை. தன் முன் விரியும் அனுபவங்களில், இந்த வாழ்வின் உக்கிரத்தை உணர முற்பட்டவன் கலைஞந்தான். இந்த உக்கிரம் பிரதிபலிக்காத எழுத்து உன்னதப் பொருட்படுத்தலை எப்போதும் பெற்றதில்லை.

வண்ணதாசன் வாழ்க்கையப் பார்க்கிறாரா? வாழ்க்கை சித்திரங்களைப் பார்க்கிறாரா? புற உலகத் தோற்றங்கள் இவரை வெகுவாக ஆகர்ஷிக்கின்றன. இவற்றை கிரகித்துக் கொள்ளும் பொறிகள் அவருடையவை. வெகு நுட்பமாக இந்த நுட்பங்களை வெகு நேர்த்தியாகச் சொல்லத் தெரிந்தவர் அவர். இவை திறமைகள். இது ஒரு சம்பத்து; இது ஒரு வில்லங்கம். வாழ்வு பற்றிய தன் அபிப்ராயத்தை ரேகைப் படுத்தும் பணியில் இத் திறமைகள் பின்னொதுங்கி உதவும் போது, இது சம்பத்து. பொறிகள் விரிக்கும் கோலங்களின் அளைதல் வாழ்வின் மையத்துக்கே நகர முட்டுக்கட்டையாகும் போது இது ஒரு வில்லங்கம்.

சித்திரங்களில் ஊடாடி கதையின் மையத்திற்குப் பிந்திப் போய் சேருகிறார் இவர். பகைப்புலங்களின் படைப்பில் மையம் அமுங்கிப் போகிறது. செய்திகள் வெளிறிப் போகின்றன. டிபன் பாக்சை மறந்து ஆபீசில் விட்டுவிட்ட சின்ன அம்மாள், மீண்டும் ஆபீசை அடைய ரொம்பக் கால தாமதம் ஆகிறது. ஆசிரியருக்குக் காட்சிப் புலங்களில் எவ்வளவு மயக்கமோ அவ்வளவு மயக்கம் இந்த அம்மாளுக்கும். அவளும் அப்படி என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். அவள் பராக்கு பார்க்கிறாள். அது அவளுடைய சுதந்திரம், ஆனால் அன்று அலுவலகத்தின் அழகு முதன்முதலாக அனுபவமாகி விட்டது. அதன் அழகை மறைத்துக் கொண்டிருந்த மனிதர்களின் களேபரம் அப்பொழுது அங்கு இல்லை. மனிதர்கள் முற்றாக அங்கு இல்லாமலும் இல்லை. எப்படி மனித களேபரத்தில் அலுவலகத்தின் அழகு மறந்து போய் விட்டதோ, அதே போல், அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் கதையில், கதை செய்தி நம்மை வந்து ஸ்பரிசிக்க, பின்னணியின் களேபரமும் தடையாகி விட்டது. செய்தியே ஒரு ஆசிரியரை ஊக்குவிக்க வேண்டிய உந்து சக்தி. அச் செய்தியைத் துலங்க கிரணங்களைக் குவிப்பது உண்மையில் வாழ்வு பற்றி ஆசிரியர் தன் பார்வையைப் பரப்பிக் கொள்வதாகும். தன்னையே துலங்க வைத்துக் கொள்வதாகும்.

இக்கதைகளில் வாழ்வு பற்றி ஒரு மயக்க நிலை ஊடாடி நிற்கிறது. விழிப்புடன் வாழ்வை கவனித்து, அதன் முழு வீச்சை கிரகித்துக் கொள்ளும் உன்னிப்பைத் தூண்டுவதற்கு பதிலாக, மயக்கத்தின் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றன. இந்த மயக்க நிலையை சப்பு கொட்டுகிறவர்களே இன்று இக்கதாசிரியரை அரவணைக்கும் இலக்கிய உலகின் புகழ்பெற்ற இரண்டுங் கெட்டான்கள்.

இந்த மயக்க நிலைக்குத் தமிழில் ஒரு முன் சரடு உண்டு. இடு கால்களற்ற மயக்க நிலை எனில், வெறும் மேகக் கூட்டம் எனில், இங்கு பொருட்படுத்த வேண்டியதில்லை. இம்மயக்கம் யதார்த்த தளத்தில் இணைக்கப்படுகிறது. யதார்த்த தளத்திற்குறிய விவரணைகள் சூட்சுமமாகவும், அப்பட்டமாகவும் பயன்படுத்தப்படும் நிலையில் கனவுகளின் கலப்பு செல்லுபடியாகின்றன. யதார்த்தத்தின் மேல் கனவின் பனிப்படலத்தை விரித்த மிக வெற்றிகரமான கலைஞன் என ஜானகிராமனைச் சொல்லலாம். அவருடைய ’மோகமுள்’ ஒரு சிறந்த உதாரணம். இத்தன்மையின் வாரிசுகள் ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் ஆகியோர். வண்ணதாசனின் மயக்கத்தைத் தெரிந்து கொள்ளக் கூட, ஜானகிராமனிலிருந்து பகுக்கும் ஒரு பொதுத் தன்மை அதிக பலனைத் தரக்கூடும்.

மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்களைச் சுற்றி இலக்கிய ஈடுபாடற்ற ‘ரசிக’ சிகாமணிகளும் கூடியிருப்பதன் காரனம் இதுதான். வாழ்வின் உக்கிரத்தைப் புரிந்து கொள்ள அல்ல, கனவுகளின் ஒரு மிடக்கைப் போட்டுக் கொள்ள வந்தவர்கள் அவர்கள். வாழ்க்கையை அதன் தளத்தில் பார்க்க நேர்ந்து, தனது அனுபவங்களின் மெய்ப்பொருளை வண்ணதாசன் தேட முற்படும் பொழுது, அவருடைய இயற்கை சம்பத்துகளான அழகியலும், பொறிகளின் சூட்சுமங்களும் அவரை வெகு தூரத்திற்கு இட்டுச் செல்லக் கூடும். அவ்வாறு ஒரு பயணத்தை மேற்கொள்ளும்போது, அவருடைய இன்றைய ரசிகர்கள் சுவாரஸ்யக் கனவுகளின் போதைக்கு அலைகிறவர்கள் - இவரைக் கைகழுவி விடுவார்கள். இந்த பாக்கியம் இந்த இளைஞருக்கு வாய்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது.

புஜ்ஜி, எவ்வளவு அருமையான பெண். அவள் ஏன் அந்த ‘எழுத்தாளனை’த் தேர்ந்தெடுத்தாள்? பருவத்தில் பிழப்புக்கு அச்சுகோர்க்கும் நிர்பந்தத்தில் தள்ளப்பட்டவளுக்குக் கூட அந்த ‘எழுத்தாளனை’ச் சுற்றி எப்படிக் கனவுகள் படர்ந்தன? யார் அந்தக் கனவைப் பரப்பினார்கள்? நம் கலை உலகில் கனவை விற்றுப் பிழைப்பவர்களுக்கு இதில் பங்கு இல்லையா? இப்படிப் பார்க்கும் போதுதான் இது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பது தெரிகிறது.

சுந்தர ராமசாமி

நாகர்கோவில்     20.07.1978

******

தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் என்கிற புத்தகத்திற்கான முன்னுரை.

நன்றி : எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் தளம் 20.10.2010.

ந.முத்துசாமிக்கு பத்மஶ்ரீ விருது

 

 

நாடக ஆசிரியரும், கூத்துப்பட்டறை இயக்குனரும், சிறுகதை எழுத்தாளருமான ந.முத்துசாமிக்கு இந்த வருடத்தின் பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது.

அவருக்கு அழியாச்சுடர்கள் வாசகர்கள் சார்பாக வாழ்த்துகள்.

ந.முத்துசாமி:நரையேறும் காலம்: எஸ்.ரா

இழப்பு - ந. முத்துசாமி

muthuswamy
417590_307441975969324_100001105711963_802756_378483240_n

Jan 18, 2012

தில்லைவெளி - நகுலன்

அவன் அதே தெருவில்தான் இருந்தான். அவரும். அவன் பென்ஷன் பெற்ற பிறகு தனது 60 ஆவது வயதில் தொடங்கி (இப்பொழுது அவன் 68 ஆவது வயதிலும்) தான் செய்து கொண்டிருந்த வேலையை ஒரு ட்யூட்டோரியல் காலேஜில் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான். 9 .30  ல் இருந்து 12 .30  வரை வேலை. பிறகு காலம் அவன் கையில். அது ஒரு சௌகரியமான ஏற்பாடாகவே அவனுக்குத் தோன்றியது. நடுவில் செல்லப்பா எழுதிய "வெள்ளை" என்ற கதை அவனுக்கு அடிக்கடி ஞாபகம் வரும். போலவே "வாழ்க்கையில் காதல்" என்ற கதையில் அவர் படைப்புத் தொழில் குறித்து சிருஷ்டி பரமாக எழுதியது. அவன் பிரக்ஞையில் அடிக்கடி தோNAGULAN-3ன்றி மறைந்து தோன்றி மறைந்த வண்ணம் இருந்துகொண்டே இருந்தது. இதெல்லாம் இருந்தும் நடுவில் நடுவில்  வாழ்க்கைக் கசப்பை மறக்கப் பிராந்திக் கசப்பும் வேண்டித்தான் இருந்தது. எல்லாமே அப்படித்தான். ஆனால் இதையெல்லாம் பின்தள்ளி அவர் உருவம் விசுவரூபமாக அவன் மனதில் என்றுமே உருக்கொண்டு உருக்கொண்டு அவனைக் கவனித்துக் கொண்டே இருந்தது.

இப்பொழுதெல்லாம் அவன் வேலை செய்யும் ஸ்தாபனத்தில் திரும்பி வரும்பொழுது அவர் வீட்டைப் பார்த்துகொண்டு வருவான். வீடு காலியாகப் பூட்டப்பட்டிருந்தது. உள்ளில் சுவர்கள் பச்சை வண்ணம். நடுஅறையில் ஒரு சாய்வு நாற்காலி. வருபவர்களுக்கு ஒரு  ஸெட்டி. எதிரில் ஒரு டி.வி. மனைவியை இழந்த பிறகு அவரும் தனிமையை உணர்ந்திருக்கவேண்டும். அவன் மனம் இதே தடத்தில் சென்று கொண்டிருந்தது. இன்று அவர் வீட்டில் சாய்வு நாற்காலி, ஸெட்டி, டி.வி. கார் இல்லை. ஏன், அவரே இல்லை. இல்லை? அவ்வீடு என்றுமே திகம்பரமாகத் தில்லை வெளியாக இருந்தது.

அவரைப் பற்றியே மனம் சுற்றிச் சுற்றி வந்தது. ஒரு நாள் அவனை வழக்கம் போல் கைதட்டிக் கூப்பிட்டார். போனான். கேட்டார். "உனக்கு எவ்வளல்வு பென்ஷன்?" சொன்னான். மறுபடியும் கேட்டார். "என்ன சொல்கிறாய்? இவ்வளவுதானா? D .A . உண்டென்பது தெரியாதா? ". அவன் ஒன்றும் சொல்லவில்லை. சொன்னார். "உன்னை எனக்குத் தெரியும். நீ ஒரு சண்டைக் கோழியாக மாறவேண்டும் என்று நான் சொல்லவில்லை. அரசாங்கத்திற்கு இதைப்பற்றி எழுதினால் கிடைக்கும். எழுது. சும்மா இருந்து விடாதே". அவன் தலையை அசைத்து விட்டு திரும்பி விட்டான். அடுத்த நாள் தன் கைத்தடியை தாங்கிக்கொண்டு அவன் அறை ஜன்னல் முன்வந்து நின்றார். கேட்டார். "எழுதினாயா?". அவன் பேசவில்லை. மறுபடியும் சொன்னார். "நீ இவ்வாறு இருந்தால் போதாது. என்னுடன் வா" என்றார். அவன் போனான். கடிதத்தை எழுதச் சொன்னார். எழுதினான். அவரே ஒரு போஸ்ட் கவரைக் கொடுத்துத் தபால் பெட்டியில் போடச் சொன்னார். போட்டான். இரண்டு வாரம் கழித்து மறுபடியும் கைத்தடியைத் தாங்கிக்கொண்டு அவன் அறை ஜன்னல் முன் நின்றார். அவன் அவரை உள்ளே வரச் சொல்லி நாற்காலியில் உட்காரச் சொன்னான். உட்கார்ந்தார். கேட்டார். "பதில் வந்ததா?". "சாதகமாகவே வந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட இலகாவிற்குப் பழைய பாக்கியுடன் D .A . கொடுக்க உத்தரவு சென்றுவிட்டது". மறுபடியும் கேட்டார். "அங்கு சென்று விசாரித்தாயா?". அவன் பேசவில்லை. அவர் பேசினார். "நீ இப்படி இருந்தால் போதாது. குறிப்பிட்ட இலகாவிற்குச் சென்று விசாரி" என்று சொல்லி விட்டுச் சென்றார். அதை அவன் செய்த பிறகுதான் அவனுக்கு அந்த அனுகூலம் கிடைத்தது. அவர் சொன்ன வேறு ஒரு விஷயமும் அவனுக்கு ஞாபகம் வந்தது. "இதோ பார். உனக்கு ஒன்றும் தெரியாது. இந்த உலகம் ஒரு மாதிரியானது. எந்த விஷயத்திலும் கடைசி வரை ஊர்ஜிதமாக இருந்து நாம்தான் எல்லாவற்றையும் செய்யவேண்டும். உணர்ச்சிகளுக்கு இடம் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இந்த உலகம் ஒரு மாதிரியானது".

அவரை அவன் முற்றிலும் புரிந்து கொண்டு விட்டான் என்று சொல்ல முடியாது. அவர் ஒரு உயர்ந்த உத்தியோகத்திலிருந்து பென்ஷன் பெற்றுத் தனியாகத்தான் வீட்டில் இருந்தார். அவருக்குச் சொந்த மக்கள் இருந்தார்கள் என்றாலும், அடிக்கடி அவனிடம் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல், நம்பிக்கையுடன் சமயோசிதமாகச் சிந்திக்க நீ என்னைப் பழக்கிக் கொள்ளவேண்டும் என்பார்.

இன்னும் அவன் வழக்கம்போல் வீடு திரும்புகையில் அந்த காலி வீட்டைப் பார்த்துக் கொண்டுதான் வந்தான். இது இப்பொழுதெல்லாம் ஒரு அர்த்தம் நிறைந்த பழக்கமாகி விட்டது. மறுபடியும், மறுபடியும் அவர் நினைவு அவனைச் சூழ்ந்தது. உடல் இடம் கொடுத்த வரையில் அவர் வீட்டிலிருந்து சற்றே தொலைவிலிருந்த கோவிலுக்கு அங்கு சேர்கிற வரை "ஹரே கிருஷ்ணா. கிருஷ்ண ஹரே "என்று ஓங்கிய குரலில் சப்தித்துக் கொண்டே போவார். அதே மாதிரி அவர் வீடு திரும்புகையில், வீடு எட்டும்வரை இதைச் செய்வார். ஒரு முறை அவன் அவரிடம் கேட்கவும் செய்தான். "ஏன் இவ்வாறு தெருவெல்லாம் கேட்க கிருஷ்ண கோஷம் செய்துகொண்டு போகிறீர்கள் ?"சொன்னார், "உனக்கு ஒன்றும் தெரியாது. பல முறைகளில் இந்தப் பழக்கத்தால் அனுபவபூர்வமாக எனக்குப் பல அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. நீ சாது என்றாலும் நீயும் இந்த தலைமுறையைச் சார்ந்தவனாதலால் இதெல்லாம் உனக்குப் புரியாது" என்றார். அவனும் அவரை முழுவதும் புரிந்துகொண்டான் என்று சொல்லமுடியாது. ஒரு முறை அவன் வீட்டில் யாருமில்லை. அன்று வீட்டு வேலைக்காரி வரவில்லை. (அவருக்கு அவன் தனியானவன் என்றதால் ஒருவித அனுதாபம் இருந்தது) அவன் வீட்டின் முன் தளத்தில் இருந்தான். சாப்பிடும் இடத்திலிருந்து ஒரு ஓசை கேட்டது. சென்று பார்த்தான் தரையில் ஒரு நீண்ட சாரைப் பாம்பு அவனைக் கண்டதும் ஓடிவிட்டது. இருநாட்கள் அந்தப் பக்கம் அவன் போகாமலே இருந்தான். மூன்றாவது நாள் அவரிடம் சென்றான். சொன்னான். சொன்னார், "ஒரு ஐந்து ரூபாய் கொடு, நான் வழக்கம்போல் கோவிலில் ஒரு நாக பூஜை செய்கிறேன்" என்றார். அவன் அவரைப் பார்த்தான். அவர் அவனைப் பார்த்துச் சொன்னார். "நான் உண்மையாக நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். கேட்கிறாயா?" என்றார். அவன் தலையை அசைத்தான். "எங்கள் பூர்வீகத்தில் ஒரு கிழவர் இருந்தார். ஒரு வகையில் சித்திகள் பெற்றவர். பாம்புக் கடியால் மரித்தவரை உயிர் பிழைப்பிக்க வல்லவர். இது அவர் குருவிடமிருந்து படித்தது. ஆனால் அந்தக் குரு அவர் அதைப் பிரயோகித்தால் அவர் மரணம் அடைவார் என்றும் சொல்லியிருந்தார். பிறகு அவர் நெருங்கிய உறவில் ஒரு இளைஞன் பாம்புக்கடியால் இறந்து விட்டான். அவன் பெற்றோர்கள் அவன் சடலத்தை அவர் முன்கிடத்தி அவனுக்கு உயிர்ப் பிச்சை அளிக்குமாறு கெஞ்சினார்கள். அவர் சிறிது  நேரம் பேசாமலிருந்து விட்டு ஒரு பிடி அரிசியைக் கொண்டுவரச் சொல்லி அதைத் தரையில் வாரி இறைத்தார். உடன் ஒரு பட்டாளம் எறும்புகள் அங்கிருந்து சென்று திரும்பி வர கடித்த பாம்பும் வந்தது . எறும்புகள் சுற்றி வளைத்த அப்பாம்பு தன் தலையை தரையில் அடித்துக் கொண்டு செத்தது. அந்த இளைஞனும் தூக்கத்தில்லிருந்து எழுந்தவன் மாதிரி உயிர் பெற்றான்." இதைச் சொல்லிவிட்டு அவர் சிறிது நேரம் பேசாமல் இருந்து விட்டுப் பின், "ஒரு வாரம் கழித்து அந்தக் கிழவரும் இறந்தார்". அவன் பேசாமல் இருந்தான்.

அவர் மறுபடியும் சொன்னார். "இதிலெல்லாம் உனக்கு நம்பிக்கை வராது. ஆனால் எனக்கு அப்படியில்லை." இதைப் போலவே அவரிடமிருந்து உலக வாழ்வைப்பற்றி, அதீத அனுபவங்களைப் பற்றி அவன் பலவற்றைத் தெரிந்துகொண்டான்.ஒரு நாள் மாலை அவரைப் பார்க்க வேண்டும்போல் தோன்றவே அங்கு சென்றான். ஒரு சிலர் இருந்தார்கள் மௌனபூர்வமாக.
கேட்டான் "அவர் இருக்கிறாரா?"

"நேற்று மாலை உங்கள் சிநேகிதர் அவர் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது திடீரென்று காலமாகி விட்டார்."

அவன் திரும்பி விட்டான். இப்பொழுதும் அவன் அத் தெரு வழியில் போகும் பொழுதெல்லாம் அந்த வீட்டைப் பார்த்துக்கொண்டுதான் சென்றான். ஆனால் அதைக் காலி வீடு என்று அவனால் நம்பமுடியவில்லை.

விருட்சம் கதைகள் 1992 . விருட்சம் வெளியீடு.

தட்டச்சு உதவி: ரமேஷ் கல்யாண்

Jan 17, 2012

எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது(2011)

2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்‌ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை ஆகியவர்களைத் தொடர்ந்து இம்முறை இந்த விருதுக்கு உரியவராக கsra டந்த 25 வருடங்களாக தமிழுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தேர்வாகியிருக்கிறார்.

இவர் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், விமர்சனங்கள், நாடகங்கள், குழந்தை இலக்கியம், சினிமா என பல இலக்கிய வகைப்பாட்டுகளில் இயங்கினாலும் இவருடைய புனைவு இலக்கியத்தின் போக்கு தமிழுக்கு புதிய வாசலை திறந்தது. மனித மனத்தையும் அதன் விசித்திரத்தையும், வசீகரத்தையும், வக்கிரத்தையும் மகத்தான தரிசனங்களாக வெளிப்படுத்தி உலகப் பிற இலக்கியங்களுக்கு சமனாக தமிழில் படைத்து வரும் இவரது சிறுகதைகள் ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு, கன்னடம், வங்காளம், ஹிந்தி, மலையாளம் ஆகிய பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் இவர் ’அட்சரம்’ என்ற இலக்கிய காலாண்டிதழையும் நடத்தி வருகிறார்.

இவர் ஏழு நாவல்கள், மூன்று குழந்தை இலக்கிய நூல்கள், ஒன்பது நாடகங்கள், இருபது கட்டுரை தொகுப்புகள், எட்டு சிறுகதை தொகுப்புகள் என இதுவரை எழுதியிருப்பதுடன் 15 திரைப்படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். இவருடைய படைப்புகள் நாலு கல்லூரிகளிலும், இரண்டு பல்கலைக்கழகங்களிலும் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இவருடைய படைப்புலகம் பற்றி ஆய்வு செய்து மூவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றனர். தமிழக அரசின் விருது (2007), ஞானவாணி விருது (2004), முற்போக்கு எழுத்தாளர் சங்க சிறந்த நாவல் விருது (2001), சிகேகே இலக்கிய விருது (2008), தாகூர் இலக்கிய விருது (2010) ஆகிய விருதுகளை இவர் இதுவரை பெற்றிருக்கிறார்.

’என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும், ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக்கொண்டுபோகும் வெல்லக்கட்டியை போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக்கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துக்கள்’ என்று எஸ். ராமகிருஷ்ணன் சொல்வது உண்மைதான். இன்று உலகம் அவரை திரும்பி பார்க்கிறது. தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கும் விழா வழமைபோல எதிர்வரும் ஜூன் மாதம் ரொறொன்ரோவில் நடைபெறவுள்ளது. 

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அழியாச்சுடர்கள் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

தகவல்: அ.முத்துலிங்கம் தளம்

Jan 15, 2012

நீர் விளையாட்டு - பெருமாள் முருகன்

அவனை அவர்கள் அழைத்தபோது மிகுந்த தயக்கத்தைக் காட்டினான். ‘நானா’ என்று வாய்க்குள்ளே மெல்ல இழுத்தான். ஆனால், அவன் நினைவுப் பாசிகள் துடைக்கப்பட்ட பளிச்சிடலின் அடியில் விருப்பமும் ஆர்வமும் புடைத்தெழும்பின. குழந்தைகள் அவனை மேலும் வற்புறுத்தலாயினர். அங்கே விருந்தாளியாக வந்திருந்தான் அவன். ஓரளவுக்கு நெருங்கிய உறவுதான். அடிக்கடி வரவில்லை என்பதே இயல்பாக இருக்க விடவிperumal_muruganல்லை. கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தைகள், எட்டிலிருந்து பன்னிரண்டு வயதிற்குள்ளான மூவர் - சிறுமி, இரண்டு சிறுவர்கள் - அவன் மடிமீது புரளவும் விளையாட்டின்   நடுவராக அவனைப் பாவிக்கவுமான அளவிற்குத் தயாராகிவிட்டிருந்தனர். அதன் உச்சபட்சமாகத்தான் இந்த அழைப்பு. மனதில் மெலிந்த குறுகுறுப்பு உணர்வைத் தோற்றுவிப்பதாக, மூழ்கிவிட்ட நினைவுப் பொருள் ஒன்றைப் பெற்றுவிட்டதாக அவன் கிளர்ச்சி அடைந்தான். உடனே எழுந்து சென்றுவிடவும் முடியவில்லை. தயக்கத்தின் மெலிந்த நூல் முனைகள் அவன் கால்களை இறுகக் கட்டியிருந்தன. பாதம் வியர்த்து ஊன்றியிருந்த தரை பிசுபிசுத்தது. அங்கும் இங்குமாகக் கண்களை ஆசை நிரப்பி அலைபாய விட்டான். குரல் எழும்பாமல் உள்ளடைத்தது. குழந்தைகள் கைகளை இடுக்கிக் கொண்டு அவன் தாடையில் கைவைத்துக் கெஞ்சவும், கைகளை உரிமையுடன் பற்றி இழுக்கவும் தொடங்கினர். அவன் அசைவில் கட்டில் கிரீச்சிட்டுக் கத்தியது. ஏதாவது ஒரு குரல் ’அவரத் தொந்தரவு பண்ணாதீங்கடா’ என்று உயர்ந்து இந்தச் சூழலைச் சிதைத்துவிடுமோ என அஞ்சினான். அதற்குள்ளாக அவர்களோடு எழுந்துவிடுவது நல்லது என்று பட்டது. தன் ஆர்வத்தை மனதிற்குள் சுருட்டிக்கொண்டு தயவு செய்யும் பாவனையில் ‘துண்டு இல்லையே’ என்றான். அதுதான் இப்போது பெரிய பிரச்சினைப் போல. அவர்கள் வெகு உற்சாகமாகக் கூவிக் கொண்டு எங்கெங்கோ ஓடி ஆளுக்கொரு துண்டை இழுத்து வந்தனர். முகம் முழுக்கப் பரவிய வெட்கச் சிரிப்போடு அவனும் எழுந்து கொண்டான்.

பசுமை மணம் பரவிய காடுகளுக்கிடையே நிலத்தின் பிளந்த வாய்போல சட்டென்று கிணறு தோன்றியது. சீரான சுவர்களையோ சமமான வடிவத்தையோ அது பெற்றிருக்கவில்லை. அங்கங்கே கதைகள் பிதுங்கி குழிப் பொந்துப் புண்கள் நிறைந்து ‘ஆ’வென இருந்தது. படிகளெனத் தோன்றும்படி சுவடுகள் பதிந்த தடமொன்றும் தெரிந்தது. மோட்டாரின் குழாய் பாதியளவுக்கு மூழ்கி அசைவற்றிருந்தது. தென்னங்கீற்றுகளில் நுழைந்த கதிரொளி கிணற்றைத் துளைத்து ஆழ்மண்ணைக் காட்டியது. குதிப்பதற்குக் கால்களைத் துறுதுறுக்க வைக்கும் தோற்றமுடைய கிணறுதான் இது. குழந்தைகள் யார் முதலில் குதிப்பது என்று தர்க்கித்துச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. குதித்தலில் தொடக்கம்தான் முக்கியம். ஒரு முறை நீர் சிதறிக் கிணறலையும் சத்தம் கேட்டுவிட்டால் போதும். கிணற்றின் உறைந்த மௌனத்தை முதலில் உடைக்க வேண்டும். அதன் பின் உற்சாக வெறி எல்லோரையும் தொற்றிக் கொள்ளும். அதைத் தொடங்குவதில்தான் அத்தனை சிரமம். முதலில் குதிப்பவரைக் காவு கொள்ளவெனக் கிணறு காத்திருப்பதான அச்சம். அவர்களின் கவனம் குவிந்திருந்த போது, குலையிலிருந்து கழன்று விழும் நெற்றுத் தேங்காயென அவன் குதித்திருந்தான். உடனே கிணற்றின் மூலைகள் ஒவ்வொன்றிலிருந்தும் அவர்களும் குதித்தனர். உறைந்திருந்த கிணறு இப்போது பலவித ஓசைகளில் பேசத் தொடங்கிற்று. இடைவிடாமல் நீர் அலைந்து சுவர்களில் மோதும் ஒலிகள். குழந்தைகள் அங்கங்கே பற்றி ஏறிக் குதிப்பதற்கான வழிகளை வைத்திருந்தன. குதிப்பதன் மூலம் நீரைத் துன்புறுத்துவதே அவர்களின் லட்சியம் போல தொடர்ந்து குதிக்கும் சத்தம்.

கிணற்றை அவன் வேறுமாதிரி உணர்ந்தான். பூங்குழந்தையை அள்ளி அணைக்கும் மென்மையுடன் நீரைக் கைகளால் வருடிக்கொண்டு நீந்தினான். கிணற்றின் ஒழுங்கற்ற உருவம் பெரும் சந்தோசத்தைக் கொடுத்திருந்தது. வெயில் வேளையில் தண்ணீரின் ஜில்லிப்பு உடலுக்கு ஒத்தடம்.  அடிக்கடி தலையை முழுகுவதிலும் மல்லாந்து நீச்சலடிப்பதிலும் அவன் விருப்பமுற்றான். சிதறி விழுந்திருந்த வெயில் ஆழ்பள்ளத்துக்குள் கிடக்கும் அவனைத் தேடி வந்து முகத்திலடித்தது. அற்புதத்தைத் தேக்கி வைத்திருக்கிறது கிணறு. அதைக் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு வழங்குகிறது. கிணற்றின் மீது அன்பு வெறி முகிழ்த்தது. அதன் ஒவ்வொரு அணுவையும் தொட்டுத் தழுவ ஆசையுற்றான். அலைவில் தூசிக் கோல்கள் ஒதுங்கிக் கிடக்கும் அதன் மூலைகள் ஒவ்வொன்றையும் நோக்கி வெகுநேரம் பயணம் செய்தான். ஒவ்வொரு மூலையும் நின்று ஓய்வெடுப்பதற்கான சிறு இடத்தை ஏற்படுத்தி வைத்திருந்தது. குறைந்தபட்சம் பற்றி நிற்பதற்கான பிடிமானங்களையேனும் கொண்டிருந்தது. கருணை மிக்கது கிணறு. மூலைகளில் பனி நீரின் சுகம். பின் ஆழத்தை நோக்கிச் சென்று கிணற்றின் அடி மேனியை அறிய ஆவல் கொண்டான். நடுக்கிணற்றில் மூழ்கிய சில விநாடிகளில் வெகுதூரம் உள்நோக்கி அமிழ்ந்துவிட்டதாக உணர்ந்தான். கிணறு இன்னும் போய்க்கொண்டிருந்தது. எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம். ஒன்றும் புரிபடாது மூச்சுத் திணறியது. சட்டெனக் கைகளை அழுத்தி மேல்நோக்கி வந்தான். கிணற்றுள் எத்தனையோ ரகசியங்கள். எல்லாவற்றையும் எப்போதோ வரும் ஒருவனுக்குச் சில நிமிடங்களில் அவிழ்த்துப் பரப்பிவிடுமா? என்ன மாதிரியான முட்டாள்தனத்தில் ஈடுபட்டோம் என்று தன்னைக் கடிந்துகொண்டான். படியோரப் பலகைக்கல்லில் உட்கார்ந்து ஆசுவாசமானான். தண்ணீரின் அசைவில் சுவரைப் பற்றிக் கொள்ளும் தவளையையும், மேலிருந்து நீருக்குள் தாவும் தவளையையும் புதிதான வியப்போடு கண்டான். சற்றுநேரம் வெறும் பார்வையாளன் மட்டுமேதான் என்று தோன்றியது.

குழந்தைகளோ சற்றும் களைக்கவில்லை. சரியும் மண்ணைப் பொருட்படுத்தாமல், சுவர்களைப் பற்றியேறி மாறி மாறிக் குதித்துக் கொண்டேயிருந்தனர். தவளைகளுக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் தோன்றவில்லை. கிழவனின் வாயிலிருந்து எழும் புன்சிரிப்பைப் போல, மெல்ல நகைத்துக்கொண்டு அவர்களைக் கிணறு பார்த்துக் கொண்டிருப்பதாகப் பட்டது. குஞ்சம் கலைந்த ரிப்பன் காற்றிலாட அந்தச் சிறுமி எட்டிக் குதிக்கையில், வெயில் பட்ட மினுக்கத்தில் இறங்கி வரும் குட்டி தேவதையைத் தணிவாகக் கிணறு ஏந்திக் கொள்வதாய் இருந்தது. மேலேறுவதும் குதிப்பதும் தெரியாமல் பையன்கள் அத்தனை வேகம். அவர்களின் பொருளற்ற கூச்சல்களைப் பெருமிதத்தோடு கிணறு வாங்கிக் கொண்டது. துணையற்ற தனிமையில் வெகுகாலமாக லயித்துச் சலிப்புற்றுப் போய்விட்ட மனோபாவத்தோடு இவற்றையெல்லாம் கிணறு ரசித்துக்கொண்டிருக்கிறது போலும். அவன் உடம்பைத் தழுவிய ரகசியக் காற்று குளிரைப் பரப்பியது. மேனியிலிருந்து உருண்டோடிய நீர்த்திவலைகள் அனைத்தும் கிணற்றில் கலந்துவிட்டன. உடல் காய்ந்து போனது. நடுக்கம் பற்றியது. நீருக்குள் இருக்கையில் தெரியாத குளிர், சற்று மேலேறியதும் சட்டெனப் பிடித்துக்கொள்கிறது. உண்மையில், இது கிணற்றின் தந்திரம். தன்னுள் இறங்கச் சொல்லும் அதன் அழைப்பு. ஒரு முறை வந்துவிட்டவனை மீண்டும் மீண்டும் தூண்டுவதற்கான மந்திரத்தைக் கிணறு தூவிவிடுகிறது. அலையினூடே பாய்ந்தான். இப்போது வெதுவெதுப்பான நீர் அவன் உடலைத் தடவி அரவணைத்தது. அவனையறியாமலே கிணற்றை வட்டமாகப் பாவித்து வலம் வந்தான். அவன் காலடிகள் உடனுக்குடன் மறைந்தாலும் சுளிவுகள் இருந்தன. மறுபடியும் வலம் வரத் தூண்டிற்று. அதற்குள் அந்தச் சிறுமி அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“சித்தப்பா... கெணத்தச் சுத்தி நிக்காம எத்தன ரவுண்டு வருவீங்க?”

அவனால் எண்ணிக்கை சொல்ல முடியவில்லை. கிணற்றை அளவிட்டான். அதன் கோணமற்ற பரப்பு எந்தத் தீர்மானத்தையும் கொடுக்கவில்லை. பதிலின்றி மெலிதாக மழுப்பிச் சிரித்தான். அவள் விடவில்லை.

“பத்து ரவுண்டு வர முடியுமா?”

சிறுவன் அதற்குப் பதில் சொன்னான்.

”சித்தப்பாவால ரண்டு ரவுண்டே வரமுடியாது.”

அவனைக் கிளப்புவதற்காக அந்தச் சிறுவன் சொல்கிறான் என்பதை உணர முடிந்தாலும், இதையும்தான் பார்ப்போமே என்ற சவால் மனம் வந்திருந்தது. படியிலிருந்து தொடங்கி ஒவ்வொரு மூலையாக தொட்டு மீண்டும் படிக்கே வருவது ஒரு சுற்று. முதல் வட்டம் முடிந்து அடுத்த வட்டத்தின் பாதியில் அவன் மூச்சுறுப்புகள் பலகீனமடைந்தன. வாய் வழியாக மூச்சு வாங்கினான். கைகள் சோர்ந்து கால்கள் ஒத்துழைக்க மறுத்தன. எவ்வளவோ முயன்றும் அவனால் முடியவில்லை. மறுபடியும் கிணறு அவனைத் தோல்வியுறச் செய்துவிட்டது. ஒரு மூலையில் நின்றுகொண்டு உடல்குறுகி மூச்சு வாங்கினான். கிணற்றின் எக்களிப்புத் தானோ என அஞ்சும்படி அவர்களின் ஆரவாரம் காதடைத்தது. அவமானத்தை மிகுவிக்கும் கூச்சல். மேலேறிப் போய்விடவேண்டும் போலிருந்தது. கிணறு யாராலும் ஜெயிக்க இயலாத பிரம்மாண்டம். இதன் முன் தோல்வியை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இதனோடு போட்டியிட்டுத் தோற்பதே தைரியம்தான். கர்வத்தோடு பெருமூச்செறிந்தான். படியை நோக்கி நீந்தினான். தேர்வடத்தைப் பிடிக்கும் அடக்கத்தோடு கை துழாவியது. படியோரம் வந்து இறுதி முழுக்குப் போட்டுத் தலையைப் பின்னோக்கி நீர்ச்சீப்பினால் சீவிக்கொண்டான். பின் அறிவித்தான்.

“நான் ஏர்றன். நீங்க குதிக்கறதுன்னா குதிச்சுட்டு வாங்க.” அவன் அறிவிப்பு குழந்தைகளிடம் அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும். சில நொடிகள் கிணற்று அலை டிமிக்கிடும் ஓசை. சிறுமியின் முகத்தில் துயரத்தின் சாயை முற்றிலுமாகப் படிந்துவிட்டது. பையன்கள் சோர்ந்து போயினர். கிணற்றுச் சுகம் இத்தனை சீக்கிரம் தீர்ந்து போய்விடுவதை அவர்களால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அவன் ஏறிவிட்டால் அவர்களும் ஏறிவிடவேண்டியதுதான். பெரிய ஆள் யாரும் இல்லாமல் கிணற்றுக்குள் இருக்க அவர்களுக்கு அனுமதியில்லை. கிணறு எத்தனையோ அச்சுறுத்தல்களைத் தன்னுள் கொண்டிருக்கிறது. அதன் மேற்பொந்துகளில் விஷமேறிய கிழட்டுப் பாம்புகள் அடைகிடக்கலாம். துஷ்டக்கணம் ஒன்றில் அவை தலை நீட்டி வெளிவரலாம். நீருக்குள் மூழ்கிச் செல்பவர்களை மாட்டி இழுக்கும் கொடங்குகள் மறைந்திருக்கலாம். வழுக்கலின் பிடி எந்த நேரத்திலும் இறுகலாம். அந்தச் சூழல்களைப் பெரியவர்கள் சமாளித்து விட முடியும். சிறுவர்கள்? அத்தோடு, சுற்றிலும் உயர்ந்த தென்னைகள் நிற்க, நடுவில் ஆடிச்செல்லும் கிணரு, அமானுஷ்யமான தன்மை வாய்ந்தது.  குரல்களின் எதிரொலி எந்தத் திசையிலிருந்தும் வரும். பயமூட்டும் மௌனம் நீரின் கருமைக்குள் நிரந்தரமாகி இருக்கிறது. இவற்றிலிருந்தெல்லாம் பாதுகாக்கும் கவசமான அவன் மேலேறிவிட்டால் அவ்வளவுதான். சிறுமி, அவனை அழைப்பதற்குக் கெஞ்சியதைப் போன்றே மறுபடியும் தொடங்கினாள். இப்போது அவளுடைய கெஞ்சல் அவனை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. ஏறிப் போய்விடும் முடிவில் தீர்மானமாயிருந்தான். அசட்டையான புன்னகையோடு அடி எடுத்தான். கிழக்கு மூலையில் நின்றிருந்த சிறுமி நீரில் லாவகமாகப் பாய்ந்து அவனருகில் வந்து எங்களைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டாள். நனைந்து படிந்திருந்த சடை ஆட, ’போவ் வேண்டாஞ் சித்தப்பா’ என்று தயவானாள். அவன் இதை எதிர்பார்க்கவில்லை. அவள் கைகள் முறுக்கிச் சுற்றிய பாம்பெனப் பிடித்திருந்தன. ‘உடு கண்ணு... உடு கண்ணு’ என்றான். இந்தச் சாதாரணமான சொற்களே அவள் பிடிவாதத்தைப் போக்கிவிடுமென நினைத்தான். அவள் விடுவதாயில்லை. வரம் தரும்வரை விடமாட்டேன் என்று இறைஞ்சுவதுபோல அவள் குனிந்திருந்த தோற்றம் காட்டியது. அவனுக்கு எதுவும் விளங்கவில்லை. தடுமாற்றத்தோடு மெல்லக் குனிந்து அவள் விரல்களைப் பிரிக்க முயன்றான். மேலும் மேலும் இறுகியதே தவிர நெகிழவில்லை.

“சித்தப்பாவ உட்ராத பிள்ள” என்னும் குரல் எங்கிருந்தோ கேட்டது. அப்போதும்கூட பிள்ளை விளையாட்டின் பிடிவாதம்தானே இது என சாவதானமாகச் சிரித்தான். எதிர்பார்க்காத நொடியில் சிறுமியின் கை அவனை வாரி உள்ளே தள்ளியது. சுவரில் துருத்திக்கொண்டிருக்கும் கல்லொன்று பெயர்ந்து விழுவதைப் போல நீரில் படாரென விழுந்தான். வயிற்றில் நீர்ச்சாட்டை பளீரென வெளுத்து வாங்கியது. உடலெங்கும் அச்சத்தின் மின் துகள்கள் பாய்ந்தன. சுதாரித்து நீந்தி படிக்கு வந்தான். இதுவும் கிணற்றுக்கு எதிரான தோல்விதானோ என்று தோன்றியது. அப்படியொன்றுமில்லை என்று காட்டிக்கொள்பவனாய் ‘ஏங்கண்ணு இப்பிடிப் பண்ணுன’ எனச் சமாதானம் பேசிக்கொண்டு ஏறலானான். இப்போது அவனுக்கு மேல்படியில் -  அது படியில்லை துருத்திக்கொண்டிருந்த பையன் அவனைப் பார்த்து கைகளை விரித்து ஆட்டிக் கொண்டு ‘உடமாட்டனே’ என்று கூச்சலிட்டான். ஏறிவிடும் வைராக்கியத்தோடு கால்தூக்க, பையன் குனிந்து அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு புரண்டான். இரண்டு பேரும் ஒருசேரக் கிணற்றுக்குள் விழுந்தனர். பையனை நீருக்குள் இழுத்துக் கால் உந்தி ஓர் அழுத்து அழுத்திவிட்டுப் படியை நோக்கி வேகமாக நீந்தினான். பையன் அடிமண்ணைத் தொட்டுத்தான் திரும்ப முடியும். அவன் கழுத்தைக் கட்டிக் கொள்ள குறி வைத்து வந்த சிறுமியைத் தள்ளிவிட்டுப் பாய்ந்து படியேறினான். ‘ஏய்’ என்று உற்சாகக் கத்தலோடு இன்னொரு பையன் அவன் மீது தாவினான். சற்றும் அவன் எதிர்பார்க்காத கணம். மீண்டும் நீருக்குள் விழுந்திருந்தான். நீரைத் துளைத்து வந்த ஒளி கண்களைக் கூசியது. திவலைகளினூடே அவன் பார்க்க முயன்றான். புரியாத காட்சிகளே எங்கும் நிறைந்தன. பரபரப்பானான். ஏறி ஓடி விடுதலை தவிரத் தப்பிக்க வழியேதுமில்லை. ஆனால், படிக்கு மேலே இன்னொரு பையன். அவர்களுக்குள் ஓர் ஒழுங்கு வந்திருந்தது. நீருக்குள் அவனோடு போராட ஒருவர், படியேற விடாமல் காலைக் கவ்வ ஒருவர். கொஞ்சம் உயரத்தில் நின்றுகொண்டு மேலே தாவிக் குதிக்க ஒருவர். மாற்றி மாற்றி அவர்கள் அந்தந்த இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டனர். அவனைச் சுற்றி உடைக்க இயலாத கனத்த விலங்கென அவர்கள் மாறியிருந்தனர்.

இந்த விளையாட்டு எத்தனை நேரம் தொடருவது? இது என்ன விளையாட்டு? விளையாட்டெனக் கிணற்றின் தந்திரம். விருந்தாளியாக அவன் யார் வீட்டுக்கும் வரவில்லை. கிணறு வரவழைத்திருக்கிறது. நீச்சலுக்கு அவனை யாரும் அழைக்கவில்லை. தன் தூதுவர்களை உருவம் கொடுத்துக் கிணறு அனுப்பியிருக்கிறது. அவர்கள் முகங்களை அவனுக்குத் தெரியாது. மாயத்தின் பிறப்பிடம் கிணறு, மரணக்குழி. காவு கேட்கத் தொடங்கிவிட்டது. கிணற்றின் பகாசுர வாய்க்குள் வசமாக வந்து சிக்கிக்கொண்டிருக்கிறான். குழந்தைகள் என அவன் நினைத்தது எவ்வளவு தவறு. கிணற்றின் ஏவலாளர்களான மூன்று பிசாசுகள். கழுத்தைக் குறிவைத்துப் பாய்கிறது ஒன்று. காலை வாரி விடுகிறது ஒன்று. நீருக்குள் கட்டிப்புரண்டு இழுக்கிறது ஒன்று. அவற்றின் சிரிப்புகள் உயிர் உறிஞ்சும் அழைப்பு. குட்டிப் பிசாசுகள் பசி வெறி கொண்டுவிட்டன. அவன் எவ்விதம் தப்பிப் போவான்?

கிணற்றின் பொந்துகள் மரணம் ஒளிந்திருக்கும் இருட் குகைகளென மாறின. தோல் கருக்கும் அமிலக் கரைசல் தண்ணீர். இவற்றை வெற்றி கொள்ளும் நீச்சல் பலம் அவனிடம் இருக்கிறதா? சுவர்களின் மீது ஏறிக்கொண்டு கழன்ற கண்களோடு வாய் பிளந்து நிற்கின்றன தவளைக் குட்டிகள். அவை எந்த நேரத்திலும் அவனை வீழ்த்திவிடத் தயாராய் இருக்கின்றன. பிசாசுகள் துவண்டு போகையில் அவை பாயக்கூடும். அச்சம் அவன் உடல் முழுக்கப் பரவி நிலைகொண்டது. எதையும் யோச்கிக்கக் கூடவில்லை. ஏறி ஓடிவிடுகிற  முன்னமுன்ன, மீண்டும் மீண்டும் முயன்று சரிந்தான். தண்ணீரைக் குடித்துக் குடித்து வயிறு உப்பிப் போய்விட்டது. உடல் முழுவதும் நடுக்கம் வேறோடியிருந்தது. எசகுபிசகாக விழுந்ததில் எங்கெங்கோ கற்களின் சிராய்ப்புகளும் காயங்களும் எரியத் தொடங்கின. அவன் அதனைப் பொருட்படுத்தவில்லை. தப்பிப்பதில் குறியாக இருந்தான். அவற்றின் இலக்கு கொஞ்சம் கொஞ்சமாய்ச்  சிதைத்து ஆள்விழுங்கி விடுவதுதான் போலும். மிரண்ட விழிகளோடு சாவுடன் போராடும் மிருகமாய் மூர்க்கமானான். கைபற்ற வரும் பிசாசுகளை இழுத்து அடித்தான். கால் வைத்துக் கிணற்றின் ஆழம் நோக்கி உந்தினான். ஆனால் அவற்றின் மூர்க்கமும் அதற்கேற்ப அதிகரித்தன.

மரணக்குழி வேறு ஏதேனும் வழிகளைக் கொண்டிருக்கலாம். மூலையை நோக்கித் தாவினான். நிற்க இயலவில்லை. கால்கள் வெடவெடத்தன. மேனியில் வழியும் நீரை முந்தி வியர்வை பெருகியது. அவையோ அவனின் மூலை நகர்வு தங்களுக்குக் கிடைத்த வெற்றியெனக் கும்மாளமிட்டன. துழாவிய விழிகளில் மோட்டார் பம்ப் பட்டது.  பற்றுக் கிடைத்த வேகத்தில் கைகள் தாவின. குழாயைப் பிடித்துக் கொண்டு சரசரவென மேலேறத் தொடங்கினான். அது ஒன்றுதான் அங்கிருந்து வெளியேற வைக்கப்பட்டிருக்கும் சூட்சும வழியென ஊகித்தான். வழவழத்த அதன் உடலோடு வெகுவாகப் போராடி ஏறிக் கொண்டிருந்தான். அப்படியும் இப்படியுமாய் அசைந்தாலும் தன் நிலைவிட்டு மாறாமல் கடினமாகவே இருந்தது.  விளையாட்டின் உச்சவெறி எங்கும் பற்றிக் கொண்டது. வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் கடைசி நொடிகள் இதுவாகவே இருக்கலாம். அவன் ஏற ஏற கூச்சலிட்டுக் கொண்டே பாகுக் குழம்பென உருவம் ஒன்று அதிவேகத்தில் பம்ப்பில் வழுக்கி வந்து அவன் மீது மோதிற்று. பிடிப்புத் தளர்ந்து நேராக நீருக்குள் போய் விழுந்தான். அவ்வளவுதான். எல்லாம் தீர்மானிக்கப்பட்டு விட்டதுபோல. குழறத் தொடங்கினான். கைகள் அனிச்சையாக நீந்திக் கொண்டிருந்தன. திசை எதுவெனத் தெரியவில்லை. எங்கே பிடிப்பென உணர இயலவில்லை. எதை எதையோ கை பற்றியது. கால்கள் நடுக்கத்தோடு எவற்றின் மீதோ ஏறின. அது கிணற்றின் ஏதோ பக்கச்  சுவராக இருக்கலாம். நீட்டிக் கொண்டிருக்கும் கல் விளிம்புகளில் கைகள் பதிகின்றன போலும். சிறிது தூரம் ஏறிவிட்டதான உணர்வு கொண்டான். அது நம்பிக்கை அளித்து ஈர்த்தது. மேலும் மேலும் தாவலானான். அப்போது கிணறு குரலெழுப்பி எதிரொலித்தது. ‘பாம்பு பாம்பு’. துவண்டு கைகளின் பிடி நெகிழ்ந்தது. வாய் பிளந்து கை கால்கள் விரிய மல்லாந்து விழுந்தான் நீருக்குள், தவளை ஒன்றாய்.

-***

பிரதி உதவி: அஜய் , தட்டச்சு உதவி:  சென்ஷி

Jan 13, 2012

தேவதச்சனுக்கு விளக்கு விருது

நவீனத் தமிழ்க் கவிதையின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவரான தேவதச்சனுக்கு 2010ஆம் ஆண்டுக்கான ‘விளக்கு’ விருது வழங்கப்படுகிறது. நாற்பதாயிரம் ரூபாய்devathatchan34 பரிசுத் தொகையும் பாராட்டுப் பத்திரமும் அடங்கிய விருது இது. அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பான ‘விளக்கு’ புதுமைப்பித்தன் நினைவாக வழங்கும் இந்த விருதை இதுவரை தமிழின்  முக்கியமான இலக்கியவாதிகளான சி. சு. செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், ஹெப்சிபா  ஜேசுதாசன், பூமணி, சி. மணி, சே. இராமானுஜம், ஞானக்கூத்தன், அம்பை, தேவதேவன், வைத்தீஸ்வரன், விக்ரமாதித்யன், திலீப்குமார் ஆகியோர் பெற்றிருக்கின்றனர்.

எழுபதுகளின் இறுதியில் எழுதத் தொடங்கிய தேவதச்சன் நவீனக் கவிதையின் புதிய வடிவமைப்பைக் கட்டமைத்தவர்களில் ஒருவர். இவரது கவிதைகள் அன்றாட வாழ்வின் எளிய சொற்களில், நழுவும் கணங்களை நுட்பமாகச் சித்தரிக்கின்றன. ஆனந்துடன் இணைந்து அவரவர் கைமணல் என்னும் முதல் தொகுதியை தேவதச்சன் வெளியிட்டார். அத்துவான வேளை, கடைசி டைனோசார், யாருமற்ற நிழல், ஹேம்ஸ் என்னும் காற்று, இரண்டு சூரியன் ஆகியவை பிற கவிதைத் தொகுதிகள். கவிஞர் தேவதச்சனுக்குக் அழியாச்சுடர்கள் வாசகர்கள் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி: காலச்சுவடு

Jan 10, 2012

அப்பாவைப் புனிதப்படுத்துதல்-லஷ்மி மணிவண்ணன்

 

 

அப்பாவைப் புனிதப்படுத்துதல்

அப்பாவின் நண்பர்கள்
ஊடகங்களில் வருகிறார்கள்lakshmimanivannan
திரைப்படங்களில் நடிக்கிறார்கள்
அம்மாவின் திகைப்பான கண்கள் வழியே
சிறுவன் பார்க்கிறான்

அப்பாவின் உறவினர்கள்
பண்டிகைகள் கொண்டாடுகிறார்கள்
பதவிகளிலிருக்கிறார்கள்
நிறுவனங்கள் இயக்குகிறார்கள்
சிறுமி கேள்விப்படுகிறாள்

அப்பா அன்புள்ளவரா
சொல்லத் தெரியாது
பண்புள்ளவரா
இல்லை
வீதிகளில் சண்டையிட்டு
வீட்டுக்கு வருபவர்
வீட்டில் சண்டையிட்டு
வீதிகளில் நுழைபவர்

அப்பா
எப்போது வீட்டுக்கு வருவார்
தெரியாது
எப்போது வெளியிலிருப்பார்
தெரியாது
கைகால் ஒடிந்தால் மருத்துவமனை
கலவரமென்றால் காவல்நிலையம்

மதிப்பெண் பட்டியலைச் சரிபார்க்கமாட்டார்
பள்ளிக்கூடத்துக்குத் துணைவரமாட்டார்
சாப்பாட்டில் குறி இவற்றைத் தவிர
அப்பா என்ன முடிவெடுப்பார்
தீர்மானிக்க முடியாது

அப்பா சண்டையா சச்சரவா
தெரியாது
வேண்டுமா வேண்டாமா
தெரியாது
அதிகமானால் அச்சம்
அப்பா அளவாய்ச் குடித்தால்
விளையாட வருவார்

அப்பாவுக்கு என்னென்ன பிடிக்கும்
தெரியாது
எது பிடிக்காது
தெரியாது

அப்பாவுக்கு என்னென்ன நோய்கள்
முற்றிய மனநோய்
ரகசியமான மருத்துவ அறிக்கை மட்டும்
தெருக்களில் கிடக்கிறது

^^^^^

அப்பாவைப் புனிதப்படுத்துதல் தொகுப்பு பக்கம் 11-12

நன்றி: தமிழ் ஸ்டுடியோ

Jan 6, 2012

சென்னை புத்தகக் கண்காட்சி 2012

 

புத்தகப்பிரியர்களுக்கான விழாக்காலம் வந்துவிட்டது. இத்தனை புத்தகங்களை ஒரே இடத்தில் பார்ப்பதே தனியின்பம்தான். போன வருடம் வாங்கிய புத்தகங்களை வாசித்தோமோ இல்லையோ, இன்னும் புத்தகங்களை வாங்கவே மனம் துடிக்கும். வாருங்கள் நண்பர்களே மீண்டும் ஒருமுறை புத்தக கூட்டத்திற்குள் தொலைந்து போவோம்.

chennai-book-fair-2012

சில பரிந்துரைகள் : முழுத்தொகுப்புகள்,நாவல்கள்

Jan 5, 2012

ஹெப்சிபா ஜேசுதாசன் : நேர்காணல்

ஒரு ஜாதிக்கு என்று தனி இலக்கியம் வரக்கூடாது – ஹெப்சிபா ஜேசுதாசன்

ஹெப்சிபா ஜேசுதாசன் அறுபதுகளில் இலக்கிய உலகில் வெகுவாக விவாதிக்கப்பட்ட எழுத்தாளர். அவரது முதல் நாவல் ”புத்தம் வீடு” இன்றும் வெகுவாக வாசகர்களிடையே பேசப்படும் ஒன்று. அறுபதுகளில் பிராமணர்களின் பேச்சுநடையிலேயே கதைகள் அதிகமாக வெளிவர, கன்னியாகுமரி மாவட்ட நாடார் இன மக்கள் பேசும் பேச்சுமொழியில் சிறப்பாக வந்த நாவல் என்ற சிறப்பை Hepshi-Bai_Jesudasan-Su-Ra புத்தம்வீடு பெற்றது. அதன்பிறகு மாஜனீ, டாக்டர் செல்லப்பா, அனாதை என பல்வேறு நாவல்களைப் படைத்தார் ஹெப்சிபா.

தமிழின் சிறந்த இலக்கிய படைப்புகளை ”கவுண்ட் டவுன் ஃபிரம் சாலமோன்” (Count down from Solomon) என்ற பெயரில் ஆங்கிலத்தில் தந்துள்ளார் ஹெப்சிபா. நான்கு பெரிய தொகுதிகளாக ஆங்கிலத்தில் ஏசியன் பப்ளிகேசனால் வெளியிடப்பட்ட இந்தத் தொகுதியில் மூன்றாவது தொகுதி முழுக்க கம்பரசம் சொட்டுகிறது. லட்சுமணனின் சகோதரத்துவம், பரதனின் விட்டுக்-கொடுக்கும் தன்மை, ராமனின் தலைமைப் பண்பு, சொல்லின் செல்வன் ராமன், யுத்தகாண்டத்தில் கூட இலக்கியம் சொட்டும் தன்மை ஆகியவற்றை அழகாக ஆங்கிலத்தில் கூறியுள்ளார் ஹெப்சிபா. ”கம்பனில் இல்லாதது எதுவும் இல்லை. இலக்கியம் என்றால் கம்பன். கம்பன் என்றால் இலக்கியம்!” என்கிறார் ஹெப்சிபா.

இவரது முதல் நாவலான புத்தம் வீடு ஆங்கிலத்தில் லிசிஸ் லெகசி (Lissy’s Legacy) என்ற பெயரில் சமீபத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. ஏற்கனவே மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது புத்தம்வீடு. இந்திய சுதந்திரத்தின் 50-வது பொன்விழாவின்போது மாஸ்டர் பீசஸ் ஆஃப் இன்டியன் லிட்டரேச்சர் (Master Pieces of Indian Literature) தொகுதியில் 1353-ம் பக்கத்தில் ஹெப்சிபா ஜேசுதாசன் குறித்து பதிவும் செய்யப்பட்டுள்ளது. என்சைக்ளோபீடியா பிரிட்டாணிகாவிலும் இவரைப்பற்றி குறிப்பு காணப்படுகிறது. An early Sheaf, Sky Lights ஆகியவை இவரது ஆங்கிலக் கவிதை நூல்களாகும். en- Exercises என்ற தலைப்பில் ஆங்கிலக் கட்டுரை நூல் ஒன்றும் Tit-bits for Tinytots, STORY TIMES DARLINGS ஆகிய குழந்தை இலக்கிய நூல்களும் Songs of The Cuckoo and Other Poems என்ற தலைப்பில் பாரதியாரின் குயில் பாட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் Songs of The Cuckoo and Other Poems என்ற சுயசரிதை நூலையும் வெளியிட்டுள்ளார்.

2002-ல் கணவர் இறப்புக்குப்பின் மகனுடன் இருக்கிறார் ஹெப்சிபா. நிறைய தமிழிலக்கியங்களை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கத் திட்டங்கள் வைத்திருந்தார் ஹெப்சிபா. அவரது மனம் முழுக்க சந்தோஷத்தின் வெளிப்பாடுதான்.

அவருடைய மகன் டாக்டர் தம்பி தங்ககுமார் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அவர் தாயாரின் படைப்புகளைத் தொகுத்து வைத்திருக்கிறார். ஹெப்சிபாயிடம் நாம் இலக்கியம் பேசப்பேச பழைய நினைவுகளை மீட்டுக்கொண்டு வந்து பலவிஷயங்களைப் பேச வைத்தது டாக்டர் தம்பிதான்.

திருவனந்தபுரம் – கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் புலிப்புனத்தில் இறங்கி ஹெப்சிபா ஜேசுதாசன் வீடு எது என்று கேட்டால் எல்லோருக்கும் தெரிகிறது.

பார்க்க வந்திருக்கிறோம் என்று கூறியதும் மிகவும் சந்தோஷமாக வரவேற்றார். அதே பழைய புன்னகை மாறாமல் வணக்கத்துடன் நம்மை வரவேற்று உட்காரச்சொன்னார். ”இப்பவும் என்னை ஞாபகம் வச்சுட்டு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்!” என்றார். அருகிலிருந்த அவரது மகன், ”அம்மா நல்லாதான் இருந்தாங்க.. எப்ப பார்த்தாலும் படிச்சுகிட்டே இருப்பாங்க.. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஆட்டோவிலேர்ந்து கீழே விழுந்ததிலே அவங்களுக்கு தலையில அடி பட்டுடுச்சி.. அதுல கொஞ்சம் பிரச்சனை.. ஞாபக மறதி நிறைய!” என்றார் ஆனால் அவர் எழுதிய பழைய கட்டுரைகள் பற்றிப் பேசினால் கோர்வையாக பல விஷயங்களைக் கூறினார்.

நம்மைப் பார்த்ததும் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் நிறைய விஷயங்களைப் பேசினார். ”வாழ்க்கையைச் சந்தோஷமா அனுபவிச்சுகிட்டிருக்கேன்” என்றவர் ”இதுக்கு முன்னாடியும் நாலஞ்சுபேரு என்னைப்பத்தி தெரிஞ்சுகிடுறதுக்கு வந்தாங்க. நான் சாகுறதுக்கு முன்னாடி கூட என்னைப்பார்த்துப் பேச உங்களை மாதிரி ஆளுங்க வருவாங்க..” என்று சிரித்தபடியே சொன்ன ஹெப்சிபாவுக்கு இப்போது வயது 84. தற்கால பத்திரிகை, இலக்கிய உலகம் பற்றி எதுவுமே ஹெப்சிபாவுக்குத் தெரியவில்லை. தன்னுடைய நுட்பமான அறிவாலும் கணவரின் ஒத்துழைப்பாலும் பலவற்றை காலங்களுக்கு முன் சாதிக்க முடிந்தது என்று சிலாகித்து சிலாகித்துச்சொல்கிறார். முகத்தில் எப்போதும் ததும்பி வழியும் மாறாத அன்பும் புன்னகையும் அவரிடம் நமக்கு திரும்பத்திரும்ப பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

ஆடிமாத சாரல்மழை வெளியே விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. ரப்பர் மரங்கள் அடர்ந்த புலிப்புனத்தில் உள்ள ஹெப்சிபாவின் வீட்டில் பழங்கால சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி நமக்கு அவர் அளித்த நேர்காணலின் சுருக்கம்தான் இது. நாம் அவரைச் சந்திக்க வந்திருக்கும் செய்தி அறிந்து அவரது வீட்டருகே வசிக்கும் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஏனோஸ் நமக்கு உதவுவதற்காக அங்கே வந்தார். இங்கே நாம் அவரிடம் சில கேள்விகள் எழுப்பும்போது அதற்கான பதிலை பேராசிரியர் ஏனோஸ் ஞாபகப்படுத்திதான் அவரிடமிருந்து பதிலைப் பெற முடிந்தது.

பேராசிரியர் ஏனோஸ், அவரது மகன் தம்பிதங்ககுமார் ஆகியோரின் உதவியுடன்தான் இந்த நேர்காணல் தயாரிக்கப்பட்டது. இலக்கியம் பற்றிப்பேசினால் ஹெப்சிபாவின் மனம் முழுக்க சந்தோஷம் வெளிப்படுவதைக் காண முடிகிறது. இப்போது அவர் இலக்கியம் படைப்பதும் இல்லை, படிப்பதும் இல்லை. விழித்திருக்கும் பொழுதுகளில் பார்வை மங்காத கண்களின் வழியே பைபிளைத்தான் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறார்.

தீராநதி: உங்க இளமைப்பருவத்தைப்பத்தி சொல்லுங்களேன்..?

ஹெப்சிபா: நீங்க கேட்குறதுனால சொல்லுறேன். எங்க பழங்காலச்சுவடுகள் எங்க குடும்பப் பிள்ளைங்க தெரியணும்கிறதுனாலதான் சொல்லுறேன். எனக்கு சாரோட பூர்வீகம் மிகவும் ஏழைமக்களிடையே இருந்தது. சேனம் விளையில் ஆறேழு தலைமுறைக்கு முன்னாடி அவர்கள் வந்து குடியேறின போது அவர்கள் பனையேற்றுத்தொழிலாளிகள். அவங்க வீட்டுல நிறைய படிச்சது அவருதான். எனக்கு ஊரு புலிப்புனம். கோவிலோட சேர்ந்து தமிழ்ப்பாடசாலை இருந்ததால் அடுத்த தலைமுறைக்கு நல்ல கல்வி கெடைச்சுது. எங்க குடும்பத்துல உள்ளவங்க அங்கே படிச்சுதான் முன்னேறினாங்க. என் மதினி ருக்மிணிக்கு இப்பவும் பென்சன் கிடைக்குதுனா காரணம் அன்னிக்கு அவங்களோட படிப்புதான். படிச்ச ஸ்கூல்லயே வேலை பார்த்தாங்க.

என் பூர்வீகத்தை எடுத்துகிட்டீங்கன்னா அம்மா வழியில கல்வி, அப்பா வழியில சொத்து எனக்கு கிடைச்சதுனு சொல்லலாம். என்னோட தாத்தா அந்தக்காலத்துல பி.ஏ. பாஸாகி மார்த்தாண்டம் எல்.எம்.எஸ். ஆண்கள் பள்ளியில் முதல் தலைமை ஆசிரியரா வேலையில சேர்ந்தாங்க. அவங்களுக்கு மதபோதனை செய்யுறதுல மிகுந்த ஈடுபாடு. அதனால வேலையை ரிசைன் பண்ணிட்டு பாஸ்டரானாங்க. என் அம்மாவின் பாட்டி கூட எல்.எம்.எஸ். பெண்கள் பிரைமரி பள்ளிக்கூடத்துல ஆசிரியையா வேலை பார்த்தாங்க. அவங்களும் ஒரு பைபிள் உமனா இருந்தாங்க. தமிழாகட்டும். இங்கிலீஷ் ஆகட்டும், கணக்காகட்டும் எனக்கு சின்ன வயசுல அவங்கதான் சொல்லித்தந்தாங்க. பப்பா (அப்பாவை பப்பா என்றுதான் சொல்கிறார்) வடபர்மாவில ஒரு அரசு பள்ளிக்கூடத்துல டீச்சரா வேலை பார்த்துட்டு இருந்தாரு.

அன்னிக்கு பொம்பிளைங்களைப்படிக்க வைக்கிறதுன்னா சாதாரண விசயமா? என்கூட நாலு சகோதரருங்க. வீட்டுல ஒரே பொண்ணு நான். அதனால் நான் வீட்டுல செல்லப்பிள்ளையா இருந்தேன். என்னோட பப்பா பர்மாவுல இருந்ததுனால அம்மா ஊருல உள்ள பள்ளிக்கூடத்துல என்னைச் சேர்த்தாங்க. ஒரு நாள் ஒரு டீச்சரு எங்கம்மாவக் கூப்பிட்டு இந்தச் சின்னப்பிள்ளைக்கு மூளையே கிடையாது. உதவாக்கரையான இவளைப்போய் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி கஷ்டப்படுத்தியேளே..!”ன்னு சொன்னார். எங்கம்மாவுக்கு ரொம்ப வேதனையாப்போச்சு. அப்பா பர்மாவிலேர்ந்து வந்ததும் இதைப்பத்தி அவங்ககிட்டே சொன்னாங்க. உடனே அப்பா என்னை பர்மாவுக்குக் கூட்டிட்டு போனாரு. பப்பா ஸ்கூல் விட்டு வரும்போது நிறைய புக்ஸ் கொண்டு வருவாங்க.. அதுல அழகான படம் போட்டிருப்பாங்க. அதை ரசிக்கிறதுதான் என்னோட வேலை. அப்படியே பர்மாவில இங்கிலீஷ் சரளமா பேசக் கத்துகிட்டேன். அந்த வயசுல ஒருநாள் ராத்திரி ஒரு சொப்பனம் கண்டேன். கனவுல ஒரு தேவதை என் கையில் ஒரு பேனாவைத் தந்தது போல். எனக்கு அந்த சொப்பனம் பிடிச்சிருந்தது. என்னோட வாசிப்புக்கு காரணம், சிறுவயது பர்மா வாழ்க்கைதான். என்னோட ஒன்பதாவது வயசுல பப்பா வேலை பார்த்த ஸ்கூல்ல 5-வது வகுப்பில் சேர்க்கப்பட்டேன். வகுப்பில நான் தான் முதலாவது. பப்பாவுக்கு பெருமைன்னா பெருமை. அப்புறம் 6-வது வகுப்பிலயும் முதல் இல்லைன்னா இரண்டாவது இடம் எனக்குத்தான் கிடைக்கும். இங்கிலீசுல இலக்கணத்தை நல்ல ஆர்வமா கத்துகிட்டேன். பத்தாவது வயசுல என் முதல் இங்கிலீஷ் போயம் (ஆங்கில கவிதை) எழுதினேன். பப்பாவுக்கு ஆச்சரியம். எனக்கு வாசிக்க நிறைய புத்தகங்கள் தந்தார். அங்கேயே ஏழாம் வகுப்பு வரை படிச்சேன். அப்போது தமிழாசிரியர் சொல்லி உருகிய, ”இன்றைக்கோ கம்பன் இறந்த நாள்” என்ற பாடலை இன்னிக்கும் நினைக்கிறது உண்டு. வெண்பாவின் இலக்கணமென்று நாற்சீர், முச்சீர் நடுவே தனிச்சீர் என அடிக்கடி நினைத்துப் பார்க்கிறதுண்டு.

பதினாலாவது வயசுல காட்டாத்துறையில் உள்ள பள்ளிக்கூடத்துல என்னைக்கொண்டு வந்து சேர்த்தாங்க. அங்கே என்னன்னா என்னோட ஆங்கில அறிவு என்னை மதிப்புக்குரியவளாக்கிச்சு. ”பர்மாக்காரி பவுறப்பாரு”ன்னு என் காது படவே பேசுவாங்க. டீச்சர்மாருங்க ஆங்கிலத்தைத் தப்பா பேசுறப்ப அவங்க சொல்லுறதைத் திருத்தியிருக்கேன். பொறவு நாகர்கோவில் டதி பள்ளிக்கூடத்துல படிச்சேன். ஆங்கிலத்தில் இருந்த ஈடுபாடு காரணமா எனக்கு தமிழில் கவனம் செல்லவில்லை. டதியில் தமிழ் சொல்லிக் கொடுத்தவர், ”பர்மாக்காரி பர்மாவுக்குப்போயிடு”னு சொல்லி என்னை கிண்டல் பண்ணுவாரு.

தீராநதி: அன்னிக்கு எந்தக் கல்லூரியில படிச்சீங்க..?

ஹெப்சிபா: ஸ்காட் கிறிஸ்டியன் காலேஜ்ல இன்டர்மீடியேட் படிக்கிறப்ப நான்தான் மாநிலத்திலேயே முதலாவதா வந்தேன். திருவனந்தபுரம் யூனிவர்சிட்டி கல்லூரியில் பி.ஏ. ஹானர்ஸ் மேற்படிப்பு படிச்சேன். அப்பத்தான் எனக்கு ஆங்கிலக் கட்டுரைகளும் கவிதைகளும் ஊற்றெடுத்து பெருகத்துவங்கின.

முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் எனக்கு சீனியர். இந்த நிலையில எனக்கு ஆங்கிலக் கவிதைகள் படைக்கணும்னு வெறி. முட்டத்துல வைச்சு எஸ்.சி.எம். காம்பில் வைத்து ஒரு கல்லூரி மாணவன் இறந்ததைப்பற்றி கவிதை எழுதினேன். அந்தக் கவிதை பிரேம் செய்யப்பட்டு ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி பிரின்சிபால் அறையில் தொங்கவிடப்பட்டிருந்தது. இன்டர்மீடியேட் படிக்கும்போது நான் இங்கிலீசில் திருவாங்கூர் ஸ்டேட் பர்ஸ்ட். ஆனால் அப்போது இரண்டாம் உலகப்போர் துவங்கிச்சு. உடனே பப்பாவுக்கு பயம் வந்துடுச்சு. அவரு இமயமலையேறி இந்தியாவுக்குத் தப்பி வீடு வந்து சேர்ந்தாரு. சாகிற வரைக்கும் பப்பாவை எக்சைட் செய்யும் அந்த மலைப்பயணம். வழியில் எத்தனையோ பேர் செத்து விழுந்தார்களாம். பப்பா சொன்னது இப்பவும் ஞாபகமா இருக்கு. ஆறாம் வகுப்பில் என்கூடப்படித்த சைனா மாணவன் ஜப்பான் வீசிய குண்டுக்குப் பலியானான். ஊருக்கு வந்ததுக்கப்புறம் பப்பா என்னை நிறைய படிக்கச் சொல்லுவாரு. நான் நிறைய படிச்சு காலேஜ் லெக்சர் ஆகக்காரணமே பப்பாதான். அவரோட தூண்டுதல்தான் எனக்கு ஆங்கில இலக்கியத்துல ஈடுபாட்டை உருவாக்கிச்சு.

தீராநதி: ஆங்கிலப் பேராசியரான நீங்க தமிழ்ப்பேராசியரான ஜேசுதாசனை கல்யாணம் செய்துகிட்டது எப்படி?

ஹெப்சிபா: திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில படிச்ச பிறகு வேலை தேடிட்டு இருந்தேன். இந்த நிலையில என்னைப்பத்தி ஜேசுதாசன் கேள்விப்பட்டிருக்காரு. அப்பவே நான் ஆங்கிலத்துல கட்டுரைகள் எழுதியதால், என்னைப்பத்தி நிறைய பேருக்குத் தெரிஞ்சிருக்கு. அவரு தமிழ்ப் பேராசிரியர். அவருக்கு தமிழில் உள்ள நல்ல இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கணும்னு ஆசை. எங்க வீட்டாருங்க பேசினாங்க. பொதுவா ஒரு ஆங்கிலக் கல்வி பெற்றவ ஒருத்தி தமிழ்க் கல்வி பெற்றவரை கல்யாணம் செஞ்சுக்கிறதை குறைவா நினைப்பாங்க. ஆனால் அவரோட ஆழ்ந்த மனசை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது. நான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். கல்யாண ஏற்பாடு நடந்துகிட்டிருக்கிறப்பவே எனக்கும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் வேலை கிடைத்தது.

தீராநதி: உங்கள் கணவர் பேராசிரியர் ஜேசுதாசன் பற்றிச் சொல்லுங்களேன்..?

ஹெப்சிபா: அவங்க சொந்த ஊரு சேனம்விளை. அன்றைய திருவாங்கூர் அரசரின் ஊக்கத்தொகையைப் பெற்று பி.ஏ. ஹானர்ஸ் படிச்சாரு. இவர் மாணவராகவும் ஆசிரியராகவும் இருந்தபோது கம்பனிடம் ஈடுபாடு வரக்காரணமாயிருந்தது பேராசிரியர் பன்னிருகை பெருமாள் முதலியார். ஹானர்ஸ் முடிச்சதும் அண்ணாமலையிலயும் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலயும் ஆசிரியரா இருந்தார். பிறகு திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் விரிவுரையாளரா, பேராசிரியரா, துறைத்தலைவரா இருந்தார். அப்புறம் கோழிக்கோடு பல்கலைக்கழகம், பாலக்காடு சித்தூர் அரசினர் கல்லூரியில் முதுகலைத்துறையில் தலைவரா வேலை பார்த்தார். அவரு ”முதற்கனி” என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இது முழுக்க முழுக்க மரபுக்கவிதைத்தொகுதி. அதுல ஷெல்லி, கீட்ஸ் உட்பட சில ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்திருந்தார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் வழிகாட்டுதல்ல அவரு (ஜேசுதாசன்) தமிழ் இலக்கிய வரலாறு பற்றி ஆய்வு செய்தார். ஆனால் ஆராய்ச்சிப் படிப்பு முடியாததுனால் அவர் தொகுத்த செய்திகளை கல்கத்தா ஒய்.எம்.சி.ஏ. மூலமா ”ஹ’ஸ்டரி ஆஃப் டமில் லிட்டரேச்சர்”ங்ற பேர்ல புத்தகமா வெளியிட்டாங்க. நிறைய கட்டுரைகள் அவங்க எழுதியிருக்காங்க. அவர் மாணவர்களுக்கு பண்டை இலக்கியங்களைப்போல கம்பனும் புதுமைப்பித்தனும் சுந்தரராமசாமியும் முக்கியம் என்பதை எடுத்துச் சொல்லியிருக்காரு. கேரள பல்கலைக்கழக கல்லூரியில வேலை பார்த்தபோது கேரளத் தமிழ் மாணவர்களுக்கு தற்காலத் தமிழ்ப் படைப்பாளிகளை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பை இவர் ஏற்படுத்திக் கொடுத்தார். கர்நாடக இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இசையை முறையா கத்துகிட்டவரு. என்கிட்டயும் சரி பிள்ளைங்க கிட்டயும் சரி, இவரு கோபப்படவே மாட்டாரு. ரொம்ப அன்பா இருப்பாரு. கவுன்ட் டவுன் ஃபிரம் சாலமோன் தொகுதிகளை இவரோட உதவி இல்லாம இவ்வளவு சிறப்பா கொண்டு வந்திருக்க முடியாது. கம்பனைக் குறித்துத்தான் மூன்றாவது தொகுதியில் சொல்லியிருந்தேன். மூன்றாவது தொகுதி வெளியான பதினைஞ்சாவது நாள் அவரு இறந்துபோனாரு (கண்கலங்குகிறார்).

தீராநதி: அப்புறம் தமிழ்நாவல் பக்கம் உங்க கவனம் திரும்பினது எப்படி?

ஹெப்சிபா: அப்புறம் எங்க வாழ்க்கை நல்லாதான்போயிட்டிருந்துச்சு. எங்க வாழ்க்கை இல்லறத்தோட மட்டுமே நிற்கவில்லை. இரண்டுபேரும் சேர்ந்து இலக்கியத் தேடல்களிலும் ஈடுபட்டோம்.. முதற்கனி, பாரதியாரின் குயில்பாட்டு ஆகியவற்றை அவங்ககிட்டே கேட்டுக் கேட்டு நான் ஆங்கிலத்தில மொழிபெயர்த்தேன். இந்த நேரத்தில தான் அவங்க என்னை தமிழ்ல நாவல் எழுதணும்னு கேட்டுகிட்டே இருந்தாரு. அப்படி இருக்கிறப்ப பழைய நோட்புக்கிலேர்ந்து கொஞ்சம் பேப்பரைக் கிழிச்சு நான் கதை எழுதத்தொடங்கினேன். அதுல ஒரு இடத்திலயும் அவரு தலையிடவில்லை. பதினைஞ்சு நாளு கழிச்சா ஒரு நாவல் ரெடி. கையெழுத்துப்பிரதியை அவரு படிச்சு பார்த்துட்டு ”கொள்ளாம்.. நல்லாருக்கு”னு சொன்னாரு. கடைசில என்ன தலைப்பு வைக்கலாம்னு யோசிச்சப்ப ”புத்தம் வீடு”னு அவங்க சொன்னாங்க.. பொறவு கையெழுத்துப்பிரதியை எழுத்தாளர் நகுலன்கிட்டே கொண்டு போனாங்க. அங்கேயிருந்து நண்பர் சுந்தரராமசாமியிடம் கையெழுத்துப்பிரதி போச்சு. எங்க சாரும் சுந்தரராமசாமியும் நல்ல நண்பருங்க. சுந்தரராமசாமி நிறையதடவை எங்க வீட்டுக்கு வந்திருக்காரு. அவரு எழுதின கதையில சிலது படிச்சிருக்கேன். எதுன்னு ஞாபகமில்லை. என்னோட புத்தம் வீடு நாவலை சுந்தரராமசாமி படிச்சுட்டு ”நாவல் நல்லாருக்கு”னு என் சார்கிட்டே சொல்லியிருக்காரு. கடைசியில் தமிழ்ப்புத்தகாலயம் கண.முத்தையா வாங்கி அதை புத்தகமா போட்டாங்க.!

தீராநதி: புத்தம்வீடு நாவலை உண்மைச் சம்பவத்தை அடிப்படையா வைச்சா எழுதினீங்க..? இன்னிக்கு வட்டார வழக்கில நிறைய நாவல்கள் வருது… ஆனா அந்த காலகட்டத்துல நாடார் சமுதாய மக்களின் வாழ்க்கையை படைப்பிலக்கியத்தில் நீங்கதான் முதல்முதலா பதிவு செய்ததா சொல்லுறாங்க…

ஹெப்சிபா: உண்மைச் சம்பவமான்னு கேட்டா.. என்ன பதில் சொல்லுறது. ஆனால் அந்த நாவல்ல கையாண்டிருக்கிற நிறைய கதாபாத்திரங்கள், கதைக்களன்கள் எல்லாமே உண்மைதான். அன்னிக்கு எங்க வீட்டை புத்தம்வீடுன்னுதான் சொல்லுவாங்க. அதுமாதிரி அந்தக் கதையில வர்ற கண்ணப்பச்சி தாத்தா பேரும் என்னோட தாத்தா பேருதான். புத்தம் வீடுக்கு முன்னாடி நாடார் சமுதாய வாழ்க்கைமுறை தமிழ்ல நாவல்வடிவமா வரலைன்னு நினைக்கேன். அதை அவுங்க (பேராசிரியர் ஜேசுதாசன்) ஒரு பெரிய குறையா சொன்னாங்க. அப்பெல்லாம் பிராமண வாழ்க்கைமுறைதான் அதிகமா தமிழ்ல வந்திருக்கு. நாட்டுல பிராமணன் மட்டும்தான் இருக்காங்களா? அவங்க வாழ்க்கைமட்டும்தான் வாழ்க்கையா? நம்ம வாழ்க்கை வாழ்க்கை இல்லையா?ன்னு ஒருதடவை சொன்னாங்க. அவங்க சொன்னதை யோசிச்சுப்பார்த்தப்பதான் நான் வாழுற சமுதாயத்தைப்பத்தி அதேபேச்சுநடையில ”புத்தம் வீட்டை” எழுத முடிஞ்சது. அந்த நாவல்ல நாடார் சமுதாய வாழ்க்கை முறையை ஓரளவுக்கு நல்ல படியா பதிவு செய்திருக்கேன்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. அதுல வர்ற பனையேறி அன்பையன் குடும்பம் மாதிரி நிறையப் பேரை நான் எங்க ஊருல சந்திச்சிருக்கேன்.

தீராநதி: அன்னிக்கு ”புத்தம் வீடு” நாவல் இலக்கிய உலகில் பெரும் விவாதப்பொருளா இருந்ததுதானே..

ஹெப்சிபா: ஆமாம். இந்த நாவல்பத்தி நிறைய விவாதங்கள் அன்னிக்கு வந்துச்சு. சில மலையாள நாவல்கள்தான் புத்தம்வீடு எழுதத் தூண்டுதலா இருந்துச்சுன்னெல்லாம் சொன்னாங்க. ஆனால் எனக்கு மலையாளம் வாசிக்கவே தெரியாது. மலையாளம் நல்லா பேசுவேன். மலையாளிங்க கிட்டே சரிசமமா பேசுவேன். தமிழில் வந்த 10 நாவல்களில் ஒன்னுன்னுகூட புத்தம் வீடைச்சொன்னாங்க. என்னோட நாவல் சம்பந்தமா வந்த விவாதங்களை நான் பெருசா எடுத்துக்கலை. பொதுவா நான் ஆங்கிலத்துலதான் நிறைய எழுதினேன். அவுங்க என்னை கல்யாணம் செய்ததனாலதான் நான் தமிழ்ல எழுதினேன். இல்லைன்னா நான் தமிழ்ல எழுதமாட்டேன். நான் தமிழ்ல நாவல் எழுதியிருக்கேன்னு மார்த்தாண்டத்துல உள்ள என் சொந்தக்காரங்ககிட்டே பெருமையா சொன்னப்ப ”தமிழிலையா?”ன்னு இழிவா கேட்டாங்க என் சொந்தக்காரங்க. புத்தம் வீடுக்கப்புறம் டாக்டர் செல்லப்பா, மாஜனீ, அநாதை ஆகிய நாவல்கள் எழுதினேன்.

தீராநதி: நீங்க நாலு நாவல்கள் எழுதினாலும் இன்னிக்கும் பேசப்படுற நாவலா புத்தம் வீடு இருக்கு. புத்தம்வீடு பேசப்பட்ட அளவுக்கு மத்த நாவல்கள் பேசப்படலையே..?

ஹெப்சிபா: புத்தம்வீடு என்னோட முதல் நாவல். அதை எழுதறப்ப என்ன மனநிலையில இருந்தேனோ அதே மனநிலைதான் மத்த நாவல்களை எழுதறப்பவும். புத்தம் வீடு நாவல்ல இருந்த புதுமை எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. அதுல இதுவரை யாருமே சொல்லாத வட்டார சொல் வழக்கைப் பயன்படுத்தி எழுதியிருந்தேன். புத்தம்வீடுல கல்வி அறிவில்லாத சமுதாயத்தைப்பத்தி சொல்லியிருந்தேன். அதுல சொல்லியிருந்த சமுதாய அமைப்பு ”இப்படியும் ஒரு சமுதாயம் உண்டா?”னு வாசகர்களிடையே கேள்வி எழுப்பியது. அறிமுகமில்லாத ஒரு சமுதாயத்தைக் காட்டினதுனாலதான் புத்தம் வீடு பேசப்பட்டதுன்னு நெனைக்கேன். மத்த நாவல்களைப் பொறுத்தவரையில் அதுல வர்ற சமுதாய அமைப்புகள் எங்கேயும் காணப்படக்கூடிய பொதுவான சமுதாயத்தைப்பத்தி எழுதியிருந்ததுனால அது வாசகர்களை ஈர்க்காமப்போச்சோ என்னவோ..?

தீராநதி: நீங்க நாவல்களில் மதப்பிரச்சாரம் செய்ததாக அன்றைக்கு பேசப்பட்டதே…?

ஹெப்சிபா: கண்டிப்பா இல்லை. நான் நாவலை நாவலா பார்த்தேனேதவிர எந்த இடத்திலயும் மதப்பிரச்சாரம் செய்யலை. நான் வாழ்ந்த எனக்குத்தெரிந்த நாடார் கிறிஸ்தவ குடும்பத்தைப்பற்றிச் சொல்லும்போது அவர்களின் மத இயல்புகளைத்தான் நாவலில் சொன்னேனேதவிர எந்த வகையிலும் நான் நாவலில் மதப்பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. ஆனால் நான் பைபிள் பத்தி பிரச்சாரம் நிறைய செய்திருக்கேன். ஆனால் நாவலை அதுக்குப் பயன்படுத்தவில்லை.

தீராநதி: உங்கள் நாவல்களில் பெண்கதாபாத்திரங்களைச்சுற்றியே கதை நகர்த்தப்படுகிறதே? உங்களின் புத்தம்வீடு நாவலாகட்டும், மாஜனீ ஆகட்டும் பெண்களின் வேதனைகளை பரிவுடன் சொல்லியிருந்தீர்கள். உங்களை நீங்கள் எப்போதாவது பெண்ணியவாதி என்று எண்ணியிருக்கிறீர்களா?

ஹெப்சிபா: வீட்டிலயும் சரி, பள்ளிக்கூடத்திலயும் சரி, கல்லூரியிலயும் சரி பெண்களிடம்தான் எனக்கு நெருங்கிய தொடர்பு. கஷ்ப்படுறவங்க மேல இரக்கம் வருவது இயல்பு தானே. என்னைச்சுத்தி நடக்கிற பலவிஷயங்கள் என்னை பாதிச்சிருக்கு. பெண்களுக்கு சமுதாயத்தில் பெரிய தாக்கம் உண்டு. எதையும் சாதிக்கும் ஆற்றல் உண்டு, உண்மையான உழைப்புக்கு மதிப்புக்கொடுப்பவர்கள் என்பதையும் உணர்த்துவதற்காகவே என் நாவல்களில் வரும் பெண்களை உயர்வாகச் சித்தரித்திரிந்தேன்.

தீராநதி: உங்கள் நாவல்களில் வரும் பெண்கள் அனைவரும் கிறிஸ்தவப்பின்னணியில் வளர்ந்தவர்களாக காண்பித்திருந்தீர்கள். இதற்குக் காரணம் ஏதேனும் உண்டா?

ஹெப்சிபா: கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்திலயும், கிறிஸ்தவக்கல்லூரியில் படித்ததினாலும், அக்கம்பக்கத்தவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்ததினாலும் கிறிஸ்தவர்களோடு மாத்திரமே நெருக்கமான பழக்கம் இருந்ததினாலும் என் நாவல்களில் வரக்கூடிய பெண்பாத்திரங்களும் கிறிஸ்துவப் பின்னணியில் வளர்ந்தவர்களாக அமைந்துவிட்டனர்.

தீராநதி: நீங்கள் படைத்துள்ள பெண்பாத்திரங்கள் உங்கள் குடும்பத்தோடு இணைந்த பாத்திரங்கள் என்று சிலர் கருதுகிறார்களே. நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

ஹெப்சிபா: அது என் குடும்பத்தோடு இணைந்த பாத்திரங்கள் அல்ல. அப்படி சிலர் கருதினால் அது தவறு. ஆனால் நான் எழுதிய நாவல்களில் படைக்கப்பட்ட பெண்கள் அன்றைய காலகட்டத்தில் நான் சந்தித்த சில பெண்கள்தான்.

தீராநதி: நீங்கள் படைத்துள்ள பெண் பாத்திரங்களில் உங்கள் சுயநிலைகளை அதிகமாக வெளிப்படுத்தும் பாத்திரமாக நீங்கள் கருதுவது எது?

ஹெப்சிபா: மாஜனீ. பர்மாவில் ஏழு வயதிலிருந்து 14 வயது வரையிலும் நான் படிக்க நேர்ந்தது. என் தந்தை அங்கே ஆசிரியரா பணியாற்றினார். அதற்குப்பிறகு அங்கே போர் ஏற்பட, இந்தியா திரும்ப நேர்ந்தது. இந்தக் காலகட்டத்துல நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் என் மனசுல இன்னிக்கும் ஓடிகிட்டிருக்கு. இதை மையமா வைச்சே மாஜனீ நாவலைப்படைச்சேன். மாஜனீ நாவலில் வரும் மாஜனீ கேரக்டரின் இயற்பெயர் ”கிரேஸ் அழகுமணி” அவளது பெயரில் உள்ள இறுதிப்பகுதியை பர்மீய ஒலிக்கிசைய மாஜனீ என மாற்றி அழைப்பதைத்தான் நாவலுக்குத் தலைப்பாக வைத்தேன்.

தீராநதி: இந்த நாவல்களைப் படைச்சதுக்கப்புறம் நீங்க எழுதுறதை விட்டிட்டீங்க போல…?

ஹெப்சிபா: ஆமாம். தமிழ்நாவல் எழுதறதை விட்டேன். ஆனால் நான் தமிழ், ஆங்கிலத்துல கட்டுரைகள் எழுதிகிட்டிருந்தேன். எனக்கு எழுதணும்னு உந்துதல் வராம நான் எழுதமாட்டேன். எழுத்து மனசிலேர்ந்து வரணும். அதுக்காக என்னதான் உந்தித்தள்ளினாலும் எழுதமுடியாது. நாவல் எழுதலைன்னு எனக்கு வருத்தம் ஒண்ணும் கிடையாது. ஆனால் குழந்தைகளுக்காக நிறைய எழுதத் துவங்கினேன். பத்து வருஷத்துக்கு முன்னாடி எழுத ஆயத்தமானபோது ஒரு குரலைக் கேட்டேன். stop that you have other work to do அதே வேளை மின்னல் போல, பழைய இலக்கியம் தொட்டு freedom movement வரை ஒரு ரோட்டைக்கண்டேன். 1998-ல் துவங்கி 2002-ல் நான்கு வால்யூம்களாக Count down from Solomon வெளியிட்டிருக்கேன். இதுக்கு அவுங்க(ஜேசுதாசன்) ரொம்ப உதவி செய்தாங்க. எகிப்தில் உள்ள மன்னன் சாலமனின் அரண்மனையில் தேக்குமரத்துண்டுகளாலான பலகைகள் இருந்தது. அன்றைக்கு எகிப்தும் இந்தியாவும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தன. தென்னிந்தியாவிலிருந்துதான் தேக்குமரம் அங்கே கொண்டுசெல்லப்பட்டிருக்க வேண்டும். எனவே தமிழ்நாட்டுடன் அன்றைக்கு எகிப்திற்கு தொடர்பு ஏற்பட்டிருக்கவேண்டும். அதனால்தான் கவுண்ட் டவுன் ஃபிரம் சாலமோன்னு தொகுப்புக்கு பேர் வைச்சேன்.

தீராநதி: தலித் இலக்கியம் பற்றி உங்கள் கருத்தென்ன..?

ஹெப்சிபா: இலக்கியத்தை மேல்வர்க்க இலக்கியம் தலித் இலக்கியம்னு பிரிச்சுப்பேசுறதுல எனக்கு உடன்பாடு இல்லை. அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி ஜாதியை நான் எதிர்க்கிற ஆளாக்கும். ஒரு விசயம் சொல்லுதன் கேட்டுகிடுங்க.. என்னோட மகன் டாக்டர் தம்பி தங்ககுமார் கேரளா பல்கலைக்கழக கல்லூரியில பிசிக்ஸ் படிச்சதுக்கப்புறம் சென்னை ஐ.ஐ.டி.யில மேற்படிப்பு படிக்க செலக்ட் ஆனான். படிச்சு முடிச்சு வந்ததுக்கப்புறம் மார்த்தாண்டம் நேசமணி கிறிஸ்துவக்கல்லூரியில புரபசரா வேலை கிடைச்சது. வேலை கிடைச்சதும் என்கிட்டே சொன்னான், ”அம்மா எனக்கு நம்ம ஜாதியில பொண்ணு வேண்டாம். வேற ஜாதியில எனக்கு அம்மா பொண்ணு பாத்துதரணும்.. டவுரி ஒண்ணும் வாங்கக்கூடாது.. குறைஞ்சது பி.ஏ. வரையாவது படிச்சிருந்தாபோதும்.. நாம் கிறிஸ்துவத்தை கடைப்பிடிக்கிறதுனால கிறிஸ்துவரா இருந்தா நல்லதுனு சொன்னான். நானும் அவரும்(ஜேசுதாசும்) என் மகன்கிட்டே உட்கார்ந்து பேசுனோம். ”வேற ஜாதியில பொண்ணு பார்க்கிறதுல ஒண்ணும் பிரச்சனை இல்லை. ஆனா நாளைக்கு குழந்தைங்க பிறந்து அதுகளுக்கு கல்யாணம் பண்ணுறப்ப ஏதாவது பிரச்சனை வந்தா என்ன பண்ணுறதுன்னு அவன்கிட்டே கேட்டோம். அதுக்கு அவன் சொன்னான், அதைப்பத்தி அப்ப பாத்துக்கலாம்னு. நாங்க சரின்னுட்டோம். அன்னைக்கு எங்க வசதிக்கு பலரும் பல லட்சரூபாய் டவுரி தந்து பொண்ணைத்தர தயாரா இருந்தாங்க. ஆனா எங்களுக்கு எங்க மகனோட விருப்பம்தான் பெருசா தோணிச்சு. எங்க முடிவை சர்ச் பாஸ்டர்கிட்டே எங்க மகனோட எதிர்பார்ப்பைச் சொன்னோம். உடனே பாஸ்டர் சிரிச்சுகிட்டே சொன்னாரு, ”ஒரு குடும்பத்துக்கு பல லட்சரூபா லாபமாச்சு”ன்னு.. மகன் ஆசையைச் சொல்லிட்டான். அவனுக்கு விரும்பினமாதிரி எங்க போய் பொண்ணு தேடுயதுன்னு பலருகிட்டேயும் பேசினோம். அப்போதான் டதியில பாடம் சொல்லித்தந்த டீச்சர் பத்தி ஞாபகம் வந்துது. அவங்க ஷெட்யூல்ட் காஸ்ட். அவங்களோட ஹஸ்பண்ட் பிராமின். திருவனந்தபுரத்தில அவரு வேலை பார்த்தாரு. நான் வேலைக்கு வந்ததுக்கப்புறம் அவங்களோட எந்தத் தொடர்பும் இல்லாம இருந்துச்சி.. ஒரு வழியா அவங்களைக் கண்டுபிடிச்சு என் மகனின் விருப்பத்தைச் சொன்னேன். அவரு ஆந்திராவில் இருக்கிற அவரோட உறவினர் பாஸ்டர் தேவபிரகாசம் பத்தி சொன்னாரு. தேவபிரகாசமும் பிராமின் குடும்பத்தைச்சேர்ந்தவர். அவரும் கிறிஸ்டினா கன்வெர்ட் ஆனவரு. இவரு தனியா போதம் செய்திட்டிருந்தாரு. அவருக்கு இரண்டு பெண்பிள்ளைகளும் இரண்டு பையன்களும். இந்த நிலையில அவருக்கு மனைவி இறந்துபோனாங்க. இவரு போதனை செய்ய ஊரூரா அலைஞ்சிட்டிருப்பாரு. அதனால் அவருக்கு பிள்ளைங்க எதிர்காலம் பத்தி பயம் வந்துது. இந்தச் சமயத்துல எனக்கு டதி ஸ்கூல் டீச்சர் பாஸ்டர் தேவபிரகாசத்தோட மூத்த மகள் விஜய கீர்த்தியை என் மகனுக்கு பேசி முடிச்சாங்க. திருவனந்தபுரத்தில சர்ச்சுல வைச்சு கல்யாணம் நடந்தது. அதனால் எனக்கு ஜாதியில எல்லாம் நம்பிக்கை இல்லை. அதுபோலவே என் பேத்திக்கும் (தம்பி தங்ககுமாரின்மகள்) கலப்புத்திருமணத் தம்பதியரின் மகனைத்தான் பார்த்து திருமணம் செய்து வைத்தோம். எனக்கு தலித்துன்னும் கிடையாது.. பிராமணன்னும் கிடையாது.. நாடார்ன்னும் கிடையாது. அதனால இலக்கியத்தை தலித்துன்னு பிரிச்சுப்பாக்கிறது சரியில்லைங்கிறதுதான் என்னோட கருத்து.

தீராநதி: இப்போது தமிழிலக்கியத்தை எடுத்துகிட்டா தலித் இலக்கியம் முன்னேற்றப்பாதையில் செல்வதாக தெரிகிறது. தலித் எழுத்தாளர்கள் பற்றி உங்கள் கருத்து.

ஹெப்சிபா: அதுதான் மொதல்லேயே சொல்லிட்டேனே, நான் இலக்கியத்தைப் பிரிச்சுப்பாக்கவே இல்லைன்னு. யாரு தலித் எழுத்தாளர்னெல்லாம் எனக்குத்தெரியாது..

தீராநதி: இலக்கியத்தைப்பத்தி உங்கள் மதிப்பீடு என்ன..?

ஹெப்சிபா: இலக்கிய உலகம் கடல் போல. மனிதர்களில் எத்தனை விதமோ, இலக்கியமும் அத்தனைவிதமாகத்தானிருக்கும். கலங்கல் நீர்போன்ற வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இலக்கியம்தான் இன்று பெருவாரியான மக்களைக் கவர்கிறது. அதில் அதிசயம் ஒன்றும் இல்லை. இது இயல்புதான். ஆசிரியர்கள் தங்கள் வாழ்க்கைத் தத்துவ நிலையிலிருந்துதானே தங்கள் படைப்புகளுக்கு உருக்கொடுக்க முடியும். தரக்குறைவான படைப்பாளர்கள் விற்பனையை முன்னிட்டு அல்லது புகழை முன்னிட்டு ராகத்துக்குத் தகுந்த தாளமாக, எந்தத் தத்துவம் மக்களிடையே எடுபடுகிறதோ, அந்தத் தத்துவத்தையே கையாளுகிறார்கள். இதில் புதுமை ஒன்றும் இல்லை. பொதுவுடமை இலக்கியமாவது, புராண இலக்கியமாவது நமது நம்பிக்கையைக் கலைக்கப்போவது இல்லை. சத்தியத்தில் நிலை நிற்பவர்களுக்கு சத்தியம் வழியாகத்தான் இலக்கியத்தை உணர முடியும். தூய்மையையும் சத்தியத்தையும் கம்பர் மனசார வாயாரப் பாடுவதற்காகவே நாம் கம்பரைப் பாராட்டுகிறோம். பொது உடைமை இலக்கியத்தின் ஒரு பெரிய குறை என்னவென்றால், பொய்தான். பணக்காரன் மகாபாவியாக இருக்கலாம், ஒப்புக்கொள்கிறோம். வஞ்சனைக்காரனாக இருக்கலாம். ஏழைமீது காட்டுவது அக்கிரமமாக இருக்கலாம். அதையும் ஒப்புக்கொள்வோம். ஆனால் ஏழையானவன் நல்லவன் என்று எடுத்துக்காட்டுகிறார்களே, அதைத்தான் ஒப்புக்கொள்ளமுடியாது. ஏழையின் கையில் அதிகாரத்தைக் கொடுத்துப்பார்த்தாலல்லவா தெரியும். அவன் கொண்டு பிறந்த குணம் எப்படிப்பட்டது என்பது..? அதற்காக அக்கிரமத்தை அக்கிரமமல்ல என்று சொல்லவேண்டாம். ஆனால் ஏழை மீது இரக்கம் பாராட்டும்போது, அந்த இரக்கம் உண்மையானதுதானா? அல்லது சொந்தக்காரியம் சிந்தாபாத் என்ற முறையில் அமைந்திருக்கிறதா என்பதுதான் விஷயம். பொய்யின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு, காட்டுற இரக்கத்திற்கு என்ன பெயர் கொடுப்பது.? குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கிறதா? எதுவாக இருந்தாலும் அது கலை என்று நாம் ஒப்புக்கொள்ள முடியாது. மெய்யான கலை, உண்மையின் அடிப்படையிலேயே உருப்பெறுவது. உண்மை என்பது எல்லா மனுஷருக்குமே உரிமையுள்ள ஒன்று. ஆனால் அதற்கு வேண்டுமென்றே கண்ணடைத்துக்கொண்டால் என்ன செய்ய முடியும்? அத்தகையை நிலையைக் கலை என்று எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்..? மனித இருதயம் கலையால் மாற்றம் அடையுமோ என்பது சந்தேகத்துக்குரியது. மண்ணை உடைத்து மரமடித்து விதைபோடுகிறமாதிரி, கலையால் மனித சிந்தனைக்கு ஓரளவு பக்குவம் கொடுக்கமுடியும். மனமாற்றம் என்று நாம் சொல்லும்போது அது சிந்தனையளவில் நின்று விட முடியாதல்லவா? ஓல்ட் மேன் அன்ட் தி சீ என்ற நூல் நம்மை வெகுவாக சிந்திக்க வைக்கிறது. கடலோடு போராடின மீனவனை ஒரு வீரனாகவே காட்டுகிறது. ஆனால் அதே மீனவன் ஆசிரியரிடம் பொருளுதவிக்காகப் போனபோது ஆசிரியர் மறந்துவிட்டதாக அறிகிறோம். கலை என்பதே இந்த அளவுதான். கற்பனையோடு பெரும்பாலும் நின்று விடுகிறது. கற்பனை என்பது மனிதனுக்கு இறைவன் கொடுத்த ஒரு அருமையான வரம்தான். செவியில்லாமல் வீணையைக் கேட்டு இன்புற முடியுமா? கண்ணில்லாமல் நிலவைப் பார்த்து ரசிக்க முடியுமா? செவியையும் கண்ணையும் கொடுத்த இறைவனே கற்பனையையும் நமக்குக் கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்த வரங்களை நாம் தவறாகப் பயன்படுத்தி வருகிறோம். கண்ணையும் செவியையும் கர்த்தர் கொடுத்திருக்கிறார் என்பதற்காக இருட்டு விடிய டி.வி.(டெலிவிஷன்)க்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு கண்களைக் கெடுத்துக்கொண்டிருக்கிறோம். கலை கலை என்று பலரும் ஜ“வனைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பல எழுத்தாளர்களுக்கும் வாழ்க்கையை விட கலைதான் பெரிதாகத் தெரிகிறது. அதனால் வாழ்க்கையே தொலைந்து விடுகிறது. கலையும் நெறிதவறிப் போய்விடுகிறது. கலை என்ற நிலையில் இலக்கியத்திற்கு ஒரு கணிசமான வரையறை உண்டு. நல்ல இலக்கியங்களை வாசித்துப் பழகினவர்களுக்கு அது இந்த வாழ்க்கையில் ஒரு இன்பம் தருகிறது என்பது உண்மை. அத்தகைய இன்பத்தில் தவறில்லை என்பதும் உண்மை. இனிய பதார்த்தங்களை நாம் சாப்பிடுவதில் தவறில்லை எனில் நல்ல நூல்களை வாசிக்கிறதிலும் தவறிருக்க முடியாது. ஜேன் ஆஸ்டினின் கதைகளைப் படிக்கும்போது ஒரு அடிப்படை நிம்மதியை நாம் அனுபவிக்கவே அனுபவிக்கிறோம். நேர்மாறாக வர்ஜ“னியா ஊல்ஃபின் கதைகளை வாசிக்கும்போது, ”ஐயோ என்ன பரிதாபம்! இப்படியா வாழ்க்கையைக் கண்டிருக்கிறாள்?” என்ற மனக்கஷ்டம் மேலோங்கி நிற்கிறது. கற்பனை இலக்கியத்தில் செயல் என்றாலோ பெரும்பாலும் கற்பனை உலகத்தோடு நின்று விடுகிறது. அப்படி நிற்கவும்தான் வேண்டும். இல்லாவிட்டால் மனிதன் பைத்திய நிலையில் அல்லவா ஆகிவிடுகிறான். கற்பனையில் டார்சான் (டார்ஜான்) என்னவெல்லாமோ செய்கிறான். அதை நிஜ வாழ்க்கையில் செயல்படுத்திவிட்டால் மரத்திலிருந்து விழுந்து முதுகை ஒடித்துக் கொள்ளலாம். அல்லாவிட்டால் புலியின் வாயில் சென்று விழலாம். சத்தியம் என்பது, கற்பனையில் கிரியை செய்யும்போது அந்தக் கற்பனைக்கு, சிருஷ்டியின் நிழல் என்ற அளவுக்கு அழகு வருகிறது. என்னதான் இலக்கியம் என்றாலும் இறைவனின் ஆசியின்றி ஒன்றுமே இல்லை. இன்றைய இலக்கிய ஆசிரியர்களின் விஷயம் பயத்தைத் தருகிறது. பிறவிச்செவிடன் பாட்டுப்பாடப்போனால் பாட்டின் கதி என்னவாகுமோ அந்தக் கதிதான் அவன் எழுதுகிற இலக்கியத்துக்கும். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் எதற்கும் குறைபட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். சத்தியம் சத்தியம் என்பதையும் இலக்கியம் வெறும் இலக்கியம் என்பதையும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

தீராநதி: அதென்ன உங்களுக்கு கம்பனிடம் அத்தனை ஈடுபாடு..? கவுன்ட் டவுன் ஃபிரம் சாலமோனில் மூன்றாவது தொகுதி முழுக்க கம்பரசத்தை அழகாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பன்முகச் சிந்தனைகளை உருவாக்கியிருந்தீர்கள். இதற்குக் காரணம்..?

ஹெப்சிபா: தமிழ்ல கம்பனில் இல்லாதது எதுவும் இல்லை. தமிழ் இலக்கியம்னா அது கம்பன் தான். என்னைப்பொறுத்தவரை சமுதாயம் ஆகட்டும், நட்பாகட்டும், போர் ஆகட்டும், கம்பராமாயணத்துல ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கைதான். நாடு கடத்தப்பட்ட ராமன் பின்னால தருமம் இரங்கிப்போகிறது. ராமனின் பட்டாபிஷேகத்துக்கு என்று அமைத்த முல்லைப்பந்தல் கலைவது, ராமனிடம் அபயம் தேடுமாறு புத்தி சொல்லும் சகோதரனிடம் அழும் கும்பகர்ணன், தன்னுடைய நாயகியிடமிருந்து தன்னைப்பிரிக்கும் கடலை உற்றுநோக்குவது மருதத்தின் வர்ணனை, ராஜகுமாரி திருமணத்தன்று ராஜசபையில் வருகிற அழகு என ஆயிரம் இடங்களில் கம்பன் வாழ்க்கையின் ஆழங்களைத்துழாவி, அதன் சிகரங்களை எட்டிப்பிடித்து அதன் அழகுகளை கையிலடக்கி விடுகிறான். இதனால் தான் கம்பனை சாகாவரம் பெற்ற கவியாக உலகிலுள்ள மகா கவிகளில் ஒருவனாக ஏன் ஷேக்ஸ்பியரோடேயே தோளோடு தோளாக நிற்கக்கூடியவனாக நாம் கருதுகிறோம். ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியர் எப்படி நம்மை திகைக்க வைக்கிறானோ அதுபோலவே கம்பனும். கம்பராமாயணத்தில் ஒரு சொல் கூட வீணான சொல் கிடையாது. அதிகப்பிரசங்கம் என்பார்களே, அது கம்பராமாயணத்தில் கிடையாது. கம்பன் பல்வேறு கவனங்களில் நம்மை ஈர்க்கும்போது காவியத்தை வேண்டுமென்றே நீள வைக்கிறான். அது சபையின்தேவை. கம்பராமாயணத்தின் சில அழகுகள் சிலருக்கென்றே அமைக்கப்பட்டன. கேட்போரை ஈர்க்கவேண்டும். அழகு மந்திரத்தால் கட்டுப்படுத்தவேண்டும். இதெல்லாம் இல்லாமல் அன்று கம்பன் கவியாக இருந்திருக்க முடியாது. கம்பனின் மகா காவியப்பரப்பில் நாம் உற்று நோக்குகிற அனுபவம், ஷேக்ஸ்பியரின் நாடக சாகரத்தில் பார்க்கிற அனுபவத்தைப் போலிருக்கும்.

ஷேக்ஸ்பியராகட்டும் கம்பனாகட்டும் இயல்பிலேயே மகா கவிகளாக அமைந்தவர்கள். இருவருக்கும் திடீர் திடீர் என்று வாழ்க்கையின் மிகப்பெரிய இரகசியங்களைப்-பற்றிய தரிசனங்கள் கிடைத்துக் கொண்டிருந்தது. உள்ளுணர்வு அவர்களை உந்தித்தள்ளிய வேகத்தில் தங்களை அறியாமலேயே கலை எண்ணத்தைக் கடந்த மகாகவிகளாகிவிட்டார்கள்.

”புவியினுக்கணியாய், ஆன்ற பொருள் தந்து, புலத்திற்றாகி

அவி அகத்துறாஇகள் தாங்கி, ஐந்திணி நெறி அளாவி,

சவிஉறத்தெளிந்து, தண்ணென்(று) ஒழுக்கமும் தழுவி, சான்றோர்

கவியெனக்கிடந்த கோதாவரியினை வீரர்கண்டார்!” என்ற கோதாவரியினைப்பற்றிய இந்த அற்புத வரியிலிருந்து கம்பன் கவிதையை எப்படிப்பார்க்கிறான் என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

மகா காவியத்தை விட விரிந்து பரந்து கிடக்கக்கூடியது எது? பெரு வெள்ளத்தின் பிரவாகத்துக்கு வேறு எந்த ரீதியாக எழுதிய கவிதையை ஒப்பிட முடியும்? மட்டுமல்லாமல் கம்பனுக்கு மூல நூலான இராமாயணம் இருக்கவே இருக்கிறது. கம்பனைப்பற்றிய கவிக்கு எதைப்பின்பற்றத்தேவை என்பது நன்கு தெரிந்திருக்கும். தன் காவிய முன் மாதிரி தன் முன்னால் இருக்க, ரசிகர் சபைக்கு தினம் தினம், படலம் படலமாகப்பாட வேண்டிய தேவையும் இருந்திருக்கிறது. கம்பனைப்போல் செவிக்கு இனிமையாகப்பாட வல்லவர் யார்? இந்த இனிமை சில வேளைகளில் வார்த்தைப்பந்தலாக அமைந்து விடுகிறது. பொருளை உணராமலேயே இசையை ரசிக்கிற நிலைமை வந்து விடுகிறது. விரிந்து, பரந்து கிடக்கிற காவியம் வேண்டுமல்லவா? இழுக்கிற இழுப்புக்கெல்லாம் காவியம் வளைந்து கொடுக்கிறது. சபையில் சுகம் காண வந்தவனை, கனவு காணவந்தவனை திருப்தி செய்வதற்கென்றும் காவியத்தை அமைக்க வேண்டிய நிலை பலவிதப்பட்ட ரசிகர்களை திருப்தி செய்கிற வேலைக்கு கம்பன் இறங்கியிருக்க வேண்டும். ஷேக்ஸ்பியர் செய்ததும் இதைத்தான்.

கம்பன் வால்மீகியிடமிருந்து கடன் வாங்கினானா? ஷேக்ஸ்பியர் எத்தனையோ பேரிடமிருந்து காப்பி அடித்திருக்கிறான். ஷேக்ஸ்பியர் வெற்றி பெற்ற மாதிரியே கம்பனும் வெற்றி பெற்றான். மக்கள் அவன் யாரிடமிருந்து காப்பியடித்தான் என்பதை மறந்துவிட்டு கம்பனிலேயே பெருமிதம் கொண்டார்கள். ஆங்கிலேயர் ஹாலின்ஷெட் க்ரானிக்கிள் போன்ற மூல நூல்களை மறந்துவிட்டு ஷேக்ஸ்பியர் எடுத்துக்காட்டிய வாழ்க்கை நாடகத்தில் பெருமிதம் கொண்டார்கள் அல்லவா, அதுபோல் இங்கே நான் அழுத்திக்கூற விரும்புகிற விஷயம், ஷேக்ஸ்பியரின் குற்றங்குறைகளைப்போலவே கம்பனின் குற்றங்குறைகளையும் பெரும்பாலும் சபையின் விருப்பு வெறுப்புகளோடும், காலத்தின் தேவைகளோடும் பண்பாட்டின் அமைப்போடும் பொருந்தக்காணலாம்,

கம்பன் பாலுறவை வெறியோடு, மிருக இச்சையோடு ஒரு கூச்சமும் இல்லாமல் விவரிக்கத்துணிவது என்னவோ உண்மைதான். ஆனால் சீதாராமர் காதலில் அந்த விஷயத்தில் மவுனம் சாதிக்கிறான் என்றே சொல்ல வேண்டும். அனுமனை இராமன் சீதையிடம் அனுப்பும்போது ஏதெதோ உளறுகிறானே அதை மட்டும் நாம் நீக்கிவிட்டுப் பார்த்தால் அவற்றில் கம்பனின் இயல்பான பண்புகள் காணப்படவில்லை என்பது ஞாபகமிருக்கவேண்டும். கம்பனிடம் தான் சபைக்கு முன் கலைஞனாக வேண்டும் என்ற உத்தரவாத உணர்வு தெரிகிறது. இந்த உணர்வால் கலைக்கு அல்லது உத்திக்கு அதிகப்படியான முக்கியத்துவம் வந்து அதனால் கம்பனை வேண்டாத வழிகள் பலவற்றுக்கு இழுத்துச் செல்கிறது. அன்றைய நிலையில் இந்த வழிகள் தவிர்க்கக்கூடாதவையாக இருந்திருக்கலாம். கம்பனிடமிருந்து சபை எதிர்பார்த்த கலையும் பக்தியும். சபையில் அவன் துணிந்தெழுதின காமரசம் கொண்ட பல கட்டங்களை ரசிக்கக்கூடிய பல கவியுள்ளம் படைத்தவர்கள் இருந்திருக்க வேண்டும். தன் தேவன் தேவியரை அவன் எடுத்துக்காட்டிய விதத்தில் பக்தியுணர்வில் கரைந்து போகத்தயாராக பக்தர்களும் இருந்திருக்கவேண்டும். எழுத்துப்பிரவாகம் அவனுள் இருந்தது. அவன் நல்லகாலம் அதில்லாமல் ராமாயணம் அரங்கேற்றப்பட்ட வட்டத்தின் தேவைகளை அவன் திருப்தி செய்வதில் வெற்றி கண்டிருக்கமுடியாது. அந்த வட்டம் ஏற்கெனவே அறிந்திருந்த ராமாயணத்தை ஒட்டித்தன் காவியத்தை அமைப்பது கூட கம்பனின் வெற்றிக்கு அவசியமாக இருந்தது. அது போல காமப்பித்தர்களுக்கும் பக்தர்களுக்கும் கலைப்பித்தர்களுக்கும் கூடத்திருப்தி தேடிக்கொடுப்பது கம்பனின் இலக்கிய வெற்றிக்கு மிகமிக அவசியமானதாக இருந்தது. சபை விரும்பியதை கம்பன் செய்தான். கம்பனில் சொல்லாததும் எதுவும் இல்லை. அதனால்தான் Count down from Solomon. ஒரு தொகுதி முழுவதுமே கம்பராமாயண இலக்கிய ரசத்தை சொட்டச்சொட்ட சொல்லியிருக்கேன்.

தீராநதி: உங்களுக்கு விருது ஏதாவது கிடைத்திருக்கிறதா?

ஹெப்சிபா: தமிழ்லேர்ந்து ஆங்கிலத்துல எழுதினதுனால எனக்கு 1965-ல் ஒரு விருது கொடுத்தாங்க. நான் விருதை எதிர்பார்த்து ஒண்ணும் எழுதவில்லை.

தீராநதி: நீங்க எழுதினது பணத்துக்காகவா? உங்கள் ஆத்ம திருப்திக்காகவா?

ஹெப்சிபா: பணத்துக்காக எழுதவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. வீட்டுலயும் எனக்கு நல்ல வசதி. அதுக்குமேல பேராசிரியர் வேலை இருந்ததுனால் எனக்கு பணத்துக்கு பிரச்சனை ஒண்ணும் இல்லை. மொதல் நாவல் எழுதினேன். ஒரு கட்டத்துல நாவல் எழுதவேண்டாம்னு சொல்லி இலக்கியம் பக்கம் போனேன். கடைசியா தமிழ் இலக்கியம் பத்தி நான் எழுதிய கவுண்ட் டவுன் ஃபிரம் சாலமோன் நான்கு தொகுதிகளை நினைக்கிறப்ப எனக்கு பயம்தான் வருது. எழுதுறது எனக்கு கடவுள் தந்த வரம்னு நினைக்கேன். 9 வயசுல எனக்கு தேவதை பேனா தந்ததுமாதிரி வந்த கனவை அடிக்கடி நினைச்சுப்பார்ப்பேன். அதனால என்னோட பேனாவால கிடைக்கிற ஒரு காசுகூட என்னோட குடும்பத்துக்கு செலவிடக்கூடாதுங்கிறதுல நான் வைராக்கியமா இருக்கேன். என் எழுத்திலேர்ந்து கிடைக்கிற வருமானத்தை சர்ச்சுகளுக்கும், உதவி மையங்களுக்கும் செலவிடுறேன். புலிப்புனம் பகுதியில நானும் அவங்களும் (ஜேசுதாசன்) சேர்ந்து ஒரு ஆங்கிலப்பள்ளியைத் துவங்கினோம். அதுக்கு பேருகூட ஆங்கிலப்பேராசிரியரின் ஆங்கிலப்பள்ளின்னு வைச்சோம். அவர் காலத்துக்கப்புறம் தங்கக்கண் நினைவு ஆங்கிலப்பள்ளின்னு பேர் மாத்திட்டோம். இங்கே நாங்க குறைஞ்ச செலவில இந்தப் பகுதியில உள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலக்கல்வி வழங்கிட்டு இருக்கோம். என்னோட மருமகள்தான் இப்ப இந்தப் பள்ளியை நடத்திகிட்டு வர்றாங்க. இந்தப் பள்ளிக்கூடத்தை நடத்த போதிய வருமானம் இல்லாததனால் என்னோட எழுத்திலேர்ந்து கிடைக்கிற வருமானம்தான் பள்ளிக்கூடத்தை நடத்துறதுக்கு உதவியா இருக்கு.

தீராநதி: நீங்கள் எழுதிய கிராண்ட்மா டைரிக்கு திருவாங்கூர் இளவரசி முன்னுரை அளித்திருந்தார்களே..

ஹெப்சிபா: நான் கேரள பல்கலைக்கழக கல்லூரியில் வேலை பார்த்தபோது திருவாங்கூர் இளவரசி கவுரி லெஷ்மிபாய் எனது மாணவி. நான் ஆங்கிலத்தில் கவிதை வெளியிடுகிறேன் என்றதும் மனப்பூர்வமாக முன்வந்து முன்னுரை வழங்கினார்.

தீராநதி: நாவல் எப்படி இருக்கணும்னு சொல்ல வர்றீங்க..?

ஹெப்சிபா: எழுதுறது பெரிய விஷயம் இல்லை. ஆனால் எழுதறவங்களுக்கு ஒரு மேதைத்தன்மை இருக்கணும்கிறதுதான் என்னோட அபிப்பிராயம். இப்ப முட்டையை எடுத்துகிட்டோம்னா வெள்ளைக்கருதான் அதிகமா இருக்கு. ஆனால் மஞ்சள் கருதான் முக்கியம். முட்டையில இருக்கிற மஞ்சள்கரு போலத்தான் மேதைத்தன்மை. நாவலில் உண்மைத்தன்மை இருக்கணும். சமுதாயத்தைப்பத்திச் சொல்லியிருக்கணும். நாவலில் யதார்த்தம் வெளிப்படணும்.

தீராநதி: இப்ப உள்ள எழுத்தாளர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்..?

ஹெப்சிபா: அப்பவும் சரி, இப்பவும் சரி, எனக்கு அதிகமாக நாவல்கள் படிக்கிற வாய்ப்பு குறைவு. இந்தக் காலத்துல யாரு எழுதுறாங்கன்னு ஒண்ணுமே எனக்குத் தெரியாது.

தீராநதி: மேல்நாடு இலக்கியத்திலும் தமிழிலும் உங்களுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ஆங்கில எழுத்தாளர்களில் உங்களைக் கவர்ந்தவர்..?

ஹெப்சிபா: ஜேன் ஆஸ்டின். அவரோட எம்மா நாவல் ரொம்பப் பிடிக்கும். அது போல டால்ஸ்டாயின் எழுத்துக்களை ரொம்பப் பிடிக்கும்.

தீராநதி: தமிழில் வெளியான சிறந்த நாவல் என்று எதைச் சொல்வீர்கள்?

ஹெப்சிபா: முன்னாடி கல்கி நிறைய எழுதியிருந்தார். ஆனால் அதில் யதார்த்தமில்லை. தமிழ்ல நிறைய நாவல்கள் இருக்குது. நான் போதுமான அளவுக்கு தமிழ்நாவல் வாசிக்கவில்லை. அதனால் எது நல்ல நாவல்னு என்னால் சொல்ல முடியலை. கல்லூரியில் படிச்சிட்டிருந்த, வேலை பார்த்த காலத்துல உள்ள நாவல்களைத்தான் சிலவருசத்துக்கு முன்னாடி வரை படிச்சது. இப்ப ஒண்ணுமே படிக்க முடியவில்லை. அதனால் நாவல்களைப் படிக்காம சிறந்த நாவல் எதுன்னு என்னால சொல்ல முடியாது.

தீராநதி: உங்களுக்குனு ஆசைகள் ஏதாவது?

ஹெப்சிபா: இலக்கியத்தில் ஈடுபாடு உள்ள எங்கள் வீட்டில் எங்கள் பிள்ளைகளுக்கு இலக்கிய ஈடுபாடு இல்லாமல் போனது வருத்தம்தான். ”கம்பனைக் குறித்து ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என நினைத்திருந்தேன். இப்போது எனக்குள்ள உடல் நிலையில் என்னால் இது முடியாது. யாராவது மொழிபெயர்க்க வந்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன்!

(நிறைய கேள்விகள் கேட்டும் ஹெப்சிபாவிடமிருந்து உரிய பதில்களைப்பெற சிரமப்படவேண்டி வந்தது. நிறைய கேள்விகளுக்கு மவுனமே பதில். பேராசிரியர் ஏனோஸ் உதவியால் ஓரளவுக்கு அவரிடமிருந்து பதில்களைப் பெற முடிந்தது.)

நன்றி: தீராநதி 2008

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்