Jan 5, 2012

ஹெப்சிபா ஜேசுதாசன் : நேர்காணல்

ஒரு ஜாதிக்கு என்று தனி இலக்கியம் வரக்கூடாது – ஹெப்சிபா ஜேசுதாசன்

ஹெப்சிபா ஜேசுதாசன் அறுபதுகளில் இலக்கிய உலகில் வெகுவாக விவாதிக்கப்பட்ட எழுத்தாளர். அவரது முதல் நாவல் ”புத்தம் வீடு” இன்றும் வெகுவாக வாசகர்களிடையே பேசப்படும் ஒன்று. அறுபதுகளில் பிராமணர்களின் பேச்சுநடையிலேயே கதைகள் அதிகமாக வெளிவர, கன்னியாகுமரி மாவட்ட நாடார் இன மக்கள் பேசும் பேச்சுமொழியில் சிறப்பாக வந்த நாவல் என்ற சிறப்பை Hepshi-Bai_Jesudasan-Su-Ra புத்தம்வீடு பெற்றது. அதன்பிறகு மாஜனீ, டாக்டர் செல்லப்பா, அனாதை என பல்வேறு நாவல்களைப் படைத்தார் ஹெப்சிபா.

தமிழின் சிறந்த இலக்கிய படைப்புகளை ”கவுண்ட் டவுன் ஃபிரம் சாலமோன்” (Count down from Solomon) என்ற பெயரில் ஆங்கிலத்தில் தந்துள்ளார் ஹெப்சிபா. நான்கு பெரிய தொகுதிகளாக ஆங்கிலத்தில் ஏசியன் பப்ளிகேசனால் வெளியிடப்பட்ட இந்தத் தொகுதியில் மூன்றாவது தொகுதி முழுக்க கம்பரசம் சொட்டுகிறது. லட்சுமணனின் சகோதரத்துவம், பரதனின் விட்டுக்-கொடுக்கும் தன்மை, ராமனின் தலைமைப் பண்பு, சொல்லின் செல்வன் ராமன், யுத்தகாண்டத்தில் கூட இலக்கியம் சொட்டும் தன்மை ஆகியவற்றை அழகாக ஆங்கிலத்தில் கூறியுள்ளார் ஹெப்சிபா. ”கம்பனில் இல்லாதது எதுவும் இல்லை. இலக்கியம் என்றால் கம்பன். கம்பன் என்றால் இலக்கியம்!” என்கிறார் ஹெப்சிபா.

இவரது முதல் நாவலான புத்தம் வீடு ஆங்கிலத்தில் லிசிஸ் லெகசி (Lissy’s Legacy) என்ற பெயரில் சமீபத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. ஏற்கனவே மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது புத்தம்வீடு. இந்திய சுதந்திரத்தின் 50-வது பொன்விழாவின்போது மாஸ்டர் பீசஸ் ஆஃப் இன்டியன் லிட்டரேச்சர் (Master Pieces of Indian Literature) தொகுதியில் 1353-ம் பக்கத்தில் ஹெப்சிபா ஜேசுதாசன் குறித்து பதிவும் செய்யப்பட்டுள்ளது. என்சைக்ளோபீடியா பிரிட்டாணிகாவிலும் இவரைப்பற்றி குறிப்பு காணப்படுகிறது. An early Sheaf, Sky Lights ஆகியவை இவரது ஆங்கிலக் கவிதை நூல்களாகும். en- Exercises என்ற தலைப்பில் ஆங்கிலக் கட்டுரை நூல் ஒன்றும் Tit-bits for Tinytots, STORY TIMES DARLINGS ஆகிய குழந்தை இலக்கிய நூல்களும் Songs of The Cuckoo and Other Poems என்ற தலைப்பில் பாரதியாரின் குயில் பாட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் Songs of The Cuckoo and Other Poems என்ற சுயசரிதை நூலையும் வெளியிட்டுள்ளார்.

2002-ல் கணவர் இறப்புக்குப்பின் மகனுடன் இருக்கிறார் ஹெப்சிபா. நிறைய தமிழிலக்கியங்களை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கத் திட்டங்கள் வைத்திருந்தார் ஹெப்சிபா. அவரது மனம் முழுக்க சந்தோஷத்தின் வெளிப்பாடுதான்.

அவருடைய மகன் டாக்டர் தம்பி தங்ககுமார் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அவர் தாயாரின் படைப்புகளைத் தொகுத்து வைத்திருக்கிறார். ஹெப்சிபாயிடம் நாம் இலக்கியம் பேசப்பேச பழைய நினைவுகளை மீட்டுக்கொண்டு வந்து பலவிஷயங்களைப் பேச வைத்தது டாக்டர் தம்பிதான்.

திருவனந்தபுரம் – கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் புலிப்புனத்தில் இறங்கி ஹெப்சிபா ஜேசுதாசன் வீடு எது என்று கேட்டால் எல்லோருக்கும் தெரிகிறது.

பார்க்க வந்திருக்கிறோம் என்று கூறியதும் மிகவும் சந்தோஷமாக வரவேற்றார். அதே பழைய புன்னகை மாறாமல் வணக்கத்துடன் நம்மை வரவேற்று உட்காரச்சொன்னார். ”இப்பவும் என்னை ஞாபகம் வச்சுட்டு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்!” என்றார். அருகிலிருந்த அவரது மகன், ”அம்மா நல்லாதான் இருந்தாங்க.. எப்ப பார்த்தாலும் படிச்சுகிட்டே இருப்பாங்க.. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஆட்டோவிலேர்ந்து கீழே விழுந்ததிலே அவங்களுக்கு தலையில அடி பட்டுடுச்சி.. அதுல கொஞ்சம் பிரச்சனை.. ஞாபக மறதி நிறைய!” என்றார் ஆனால் அவர் எழுதிய பழைய கட்டுரைகள் பற்றிப் பேசினால் கோர்வையாக பல விஷயங்களைக் கூறினார்.

நம்மைப் பார்த்ததும் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் நிறைய விஷயங்களைப் பேசினார். ”வாழ்க்கையைச் சந்தோஷமா அனுபவிச்சுகிட்டிருக்கேன்” என்றவர் ”இதுக்கு முன்னாடியும் நாலஞ்சுபேரு என்னைப்பத்தி தெரிஞ்சுகிடுறதுக்கு வந்தாங்க. நான் சாகுறதுக்கு முன்னாடி கூட என்னைப்பார்த்துப் பேச உங்களை மாதிரி ஆளுங்க வருவாங்க..” என்று சிரித்தபடியே சொன்ன ஹெப்சிபாவுக்கு இப்போது வயது 84. தற்கால பத்திரிகை, இலக்கிய உலகம் பற்றி எதுவுமே ஹெப்சிபாவுக்குத் தெரியவில்லை. தன்னுடைய நுட்பமான அறிவாலும் கணவரின் ஒத்துழைப்பாலும் பலவற்றை காலங்களுக்கு முன் சாதிக்க முடிந்தது என்று சிலாகித்து சிலாகித்துச்சொல்கிறார். முகத்தில் எப்போதும் ததும்பி வழியும் மாறாத அன்பும் புன்னகையும் அவரிடம் நமக்கு திரும்பத்திரும்ப பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

ஆடிமாத சாரல்மழை வெளியே விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. ரப்பர் மரங்கள் அடர்ந்த புலிப்புனத்தில் உள்ள ஹெப்சிபாவின் வீட்டில் பழங்கால சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி நமக்கு அவர் அளித்த நேர்காணலின் சுருக்கம்தான் இது. நாம் அவரைச் சந்திக்க வந்திருக்கும் செய்தி அறிந்து அவரது வீட்டருகே வசிக்கும் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஏனோஸ் நமக்கு உதவுவதற்காக அங்கே வந்தார். இங்கே நாம் அவரிடம் சில கேள்விகள் எழுப்பும்போது அதற்கான பதிலை பேராசிரியர் ஏனோஸ் ஞாபகப்படுத்திதான் அவரிடமிருந்து பதிலைப் பெற முடிந்தது.

பேராசிரியர் ஏனோஸ், அவரது மகன் தம்பிதங்ககுமார் ஆகியோரின் உதவியுடன்தான் இந்த நேர்காணல் தயாரிக்கப்பட்டது. இலக்கியம் பற்றிப்பேசினால் ஹெப்சிபாவின் மனம் முழுக்க சந்தோஷம் வெளிப்படுவதைக் காண முடிகிறது. இப்போது அவர் இலக்கியம் படைப்பதும் இல்லை, படிப்பதும் இல்லை. விழித்திருக்கும் பொழுதுகளில் பார்வை மங்காத கண்களின் வழியே பைபிளைத்தான் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறார்.

தீராநதி: உங்க இளமைப்பருவத்தைப்பத்தி சொல்லுங்களேன்..?

ஹெப்சிபா: நீங்க கேட்குறதுனால சொல்லுறேன். எங்க பழங்காலச்சுவடுகள் எங்க குடும்பப் பிள்ளைங்க தெரியணும்கிறதுனாலதான் சொல்லுறேன். எனக்கு சாரோட பூர்வீகம் மிகவும் ஏழைமக்களிடையே இருந்தது. சேனம் விளையில் ஆறேழு தலைமுறைக்கு முன்னாடி அவர்கள் வந்து குடியேறின போது அவர்கள் பனையேற்றுத்தொழிலாளிகள். அவங்க வீட்டுல நிறைய படிச்சது அவருதான். எனக்கு ஊரு புலிப்புனம். கோவிலோட சேர்ந்து தமிழ்ப்பாடசாலை இருந்ததால் அடுத்த தலைமுறைக்கு நல்ல கல்வி கெடைச்சுது. எங்க குடும்பத்துல உள்ளவங்க அங்கே படிச்சுதான் முன்னேறினாங்க. என் மதினி ருக்மிணிக்கு இப்பவும் பென்சன் கிடைக்குதுனா காரணம் அன்னிக்கு அவங்களோட படிப்புதான். படிச்ச ஸ்கூல்லயே வேலை பார்த்தாங்க.

என் பூர்வீகத்தை எடுத்துகிட்டீங்கன்னா அம்மா வழியில கல்வி, அப்பா வழியில சொத்து எனக்கு கிடைச்சதுனு சொல்லலாம். என்னோட தாத்தா அந்தக்காலத்துல பி.ஏ. பாஸாகி மார்த்தாண்டம் எல்.எம்.எஸ். ஆண்கள் பள்ளியில் முதல் தலைமை ஆசிரியரா வேலையில சேர்ந்தாங்க. அவங்களுக்கு மதபோதனை செய்யுறதுல மிகுந்த ஈடுபாடு. அதனால வேலையை ரிசைன் பண்ணிட்டு பாஸ்டரானாங்க. என் அம்மாவின் பாட்டி கூட எல்.எம்.எஸ். பெண்கள் பிரைமரி பள்ளிக்கூடத்துல ஆசிரியையா வேலை பார்த்தாங்க. அவங்களும் ஒரு பைபிள் உமனா இருந்தாங்க. தமிழாகட்டும். இங்கிலீஷ் ஆகட்டும், கணக்காகட்டும் எனக்கு சின்ன வயசுல அவங்கதான் சொல்லித்தந்தாங்க. பப்பா (அப்பாவை பப்பா என்றுதான் சொல்கிறார்) வடபர்மாவில ஒரு அரசு பள்ளிக்கூடத்துல டீச்சரா வேலை பார்த்துட்டு இருந்தாரு.

அன்னிக்கு பொம்பிளைங்களைப்படிக்க வைக்கிறதுன்னா சாதாரண விசயமா? என்கூட நாலு சகோதரருங்க. வீட்டுல ஒரே பொண்ணு நான். அதனால் நான் வீட்டுல செல்லப்பிள்ளையா இருந்தேன். என்னோட பப்பா பர்மாவுல இருந்ததுனால அம்மா ஊருல உள்ள பள்ளிக்கூடத்துல என்னைச் சேர்த்தாங்க. ஒரு நாள் ஒரு டீச்சரு எங்கம்மாவக் கூப்பிட்டு இந்தச் சின்னப்பிள்ளைக்கு மூளையே கிடையாது. உதவாக்கரையான இவளைப்போய் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி கஷ்டப்படுத்தியேளே..!”ன்னு சொன்னார். எங்கம்மாவுக்கு ரொம்ப வேதனையாப்போச்சு. அப்பா பர்மாவிலேர்ந்து வந்ததும் இதைப்பத்தி அவங்ககிட்டே சொன்னாங்க. உடனே அப்பா என்னை பர்மாவுக்குக் கூட்டிட்டு போனாரு. பப்பா ஸ்கூல் விட்டு வரும்போது நிறைய புக்ஸ் கொண்டு வருவாங்க.. அதுல அழகான படம் போட்டிருப்பாங்க. அதை ரசிக்கிறதுதான் என்னோட வேலை. அப்படியே பர்மாவில இங்கிலீஷ் சரளமா பேசக் கத்துகிட்டேன். அந்த வயசுல ஒருநாள் ராத்திரி ஒரு சொப்பனம் கண்டேன். கனவுல ஒரு தேவதை என் கையில் ஒரு பேனாவைத் தந்தது போல். எனக்கு அந்த சொப்பனம் பிடிச்சிருந்தது. என்னோட வாசிப்புக்கு காரணம், சிறுவயது பர்மா வாழ்க்கைதான். என்னோட ஒன்பதாவது வயசுல பப்பா வேலை பார்த்த ஸ்கூல்ல 5-வது வகுப்பில் சேர்க்கப்பட்டேன். வகுப்பில நான் தான் முதலாவது. பப்பாவுக்கு பெருமைன்னா பெருமை. அப்புறம் 6-வது வகுப்பிலயும் முதல் இல்லைன்னா இரண்டாவது இடம் எனக்குத்தான் கிடைக்கும். இங்கிலீசுல இலக்கணத்தை நல்ல ஆர்வமா கத்துகிட்டேன். பத்தாவது வயசுல என் முதல் இங்கிலீஷ் போயம் (ஆங்கில கவிதை) எழுதினேன். பப்பாவுக்கு ஆச்சரியம். எனக்கு வாசிக்க நிறைய புத்தகங்கள் தந்தார். அங்கேயே ஏழாம் வகுப்பு வரை படிச்சேன். அப்போது தமிழாசிரியர் சொல்லி உருகிய, ”இன்றைக்கோ கம்பன் இறந்த நாள்” என்ற பாடலை இன்னிக்கும் நினைக்கிறது உண்டு. வெண்பாவின் இலக்கணமென்று நாற்சீர், முச்சீர் நடுவே தனிச்சீர் என அடிக்கடி நினைத்துப் பார்க்கிறதுண்டு.

பதினாலாவது வயசுல காட்டாத்துறையில் உள்ள பள்ளிக்கூடத்துல என்னைக்கொண்டு வந்து சேர்த்தாங்க. அங்கே என்னன்னா என்னோட ஆங்கில அறிவு என்னை மதிப்புக்குரியவளாக்கிச்சு. ”பர்மாக்காரி பவுறப்பாரு”ன்னு என் காது படவே பேசுவாங்க. டீச்சர்மாருங்க ஆங்கிலத்தைத் தப்பா பேசுறப்ப அவங்க சொல்லுறதைத் திருத்தியிருக்கேன். பொறவு நாகர்கோவில் டதி பள்ளிக்கூடத்துல படிச்சேன். ஆங்கிலத்தில் இருந்த ஈடுபாடு காரணமா எனக்கு தமிழில் கவனம் செல்லவில்லை. டதியில் தமிழ் சொல்லிக் கொடுத்தவர், ”பர்மாக்காரி பர்மாவுக்குப்போயிடு”னு சொல்லி என்னை கிண்டல் பண்ணுவாரு.

தீராநதி: அன்னிக்கு எந்தக் கல்லூரியில படிச்சீங்க..?

ஹெப்சிபா: ஸ்காட் கிறிஸ்டியன் காலேஜ்ல இன்டர்மீடியேட் படிக்கிறப்ப நான்தான் மாநிலத்திலேயே முதலாவதா வந்தேன். திருவனந்தபுரம் யூனிவர்சிட்டி கல்லூரியில் பி.ஏ. ஹானர்ஸ் மேற்படிப்பு படிச்சேன். அப்பத்தான் எனக்கு ஆங்கிலக் கட்டுரைகளும் கவிதைகளும் ஊற்றெடுத்து பெருகத்துவங்கின.

முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் எனக்கு சீனியர். இந்த நிலையில எனக்கு ஆங்கிலக் கவிதைகள் படைக்கணும்னு வெறி. முட்டத்துல வைச்சு எஸ்.சி.எம். காம்பில் வைத்து ஒரு கல்லூரி மாணவன் இறந்ததைப்பற்றி கவிதை எழுதினேன். அந்தக் கவிதை பிரேம் செய்யப்பட்டு ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி பிரின்சிபால் அறையில் தொங்கவிடப்பட்டிருந்தது. இன்டர்மீடியேட் படிக்கும்போது நான் இங்கிலீசில் திருவாங்கூர் ஸ்டேட் பர்ஸ்ட். ஆனால் அப்போது இரண்டாம் உலகப்போர் துவங்கிச்சு. உடனே பப்பாவுக்கு பயம் வந்துடுச்சு. அவரு இமயமலையேறி இந்தியாவுக்குத் தப்பி வீடு வந்து சேர்ந்தாரு. சாகிற வரைக்கும் பப்பாவை எக்சைட் செய்யும் அந்த மலைப்பயணம். வழியில் எத்தனையோ பேர் செத்து விழுந்தார்களாம். பப்பா சொன்னது இப்பவும் ஞாபகமா இருக்கு. ஆறாம் வகுப்பில் என்கூடப்படித்த சைனா மாணவன் ஜப்பான் வீசிய குண்டுக்குப் பலியானான். ஊருக்கு வந்ததுக்கப்புறம் பப்பா என்னை நிறைய படிக்கச் சொல்லுவாரு. நான் நிறைய படிச்சு காலேஜ் லெக்சர் ஆகக்காரணமே பப்பாதான். அவரோட தூண்டுதல்தான் எனக்கு ஆங்கில இலக்கியத்துல ஈடுபாட்டை உருவாக்கிச்சு.

தீராநதி: ஆங்கிலப் பேராசியரான நீங்க தமிழ்ப்பேராசியரான ஜேசுதாசனை கல்யாணம் செய்துகிட்டது எப்படி?

ஹெப்சிபா: திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில படிச்ச பிறகு வேலை தேடிட்டு இருந்தேன். இந்த நிலையில என்னைப்பத்தி ஜேசுதாசன் கேள்விப்பட்டிருக்காரு. அப்பவே நான் ஆங்கிலத்துல கட்டுரைகள் எழுதியதால், என்னைப்பத்தி நிறைய பேருக்குத் தெரிஞ்சிருக்கு. அவரு தமிழ்ப் பேராசிரியர். அவருக்கு தமிழில் உள்ள நல்ல இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கணும்னு ஆசை. எங்க வீட்டாருங்க பேசினாங்க. பொதுவா ஒரு ஆங்கிலக் கல்வி பெற்றவ ஒருத்தி தமிழ்க் கல்வி பெற்றவரை கல்யாணம் செஞ்சுக்கிறதை குறைவா நினைப்பாங்க. ஆனால் அவரோட ஆழ்ந்த மனசை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது. நான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். கல்யாண ஏற்பாடு நடந்துகிட்டிருக்கிறப்பவே எனக்கும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் வேலை கிடைத்தது.

தீராநதி: உங்கள் கணவர் பேராசிரியர் ஜேசுதாசன் பற்றிச் சொல்லுங்களேன்..?

ஹெப்சிபா: அவங்க சொந்த ஊரு சேனம்விளை. அன்றைய திருவாங்கூர் அரசரின் ஊக்கத்தொகையைப் பெற்று பி.ஏ. ஹானர்ஸ் படிச்சாரு. இவர் மாணவராகவும் ஆசிரியராகவும் இருந்தபோது கம்பனிடம் ஈடுபாடு வரக்காரணமாயிருந்தது பேராசிரியர் பன்னிருகை பெருமாள் முதலியார். ஹானர்ஸ் முடிச்சதும் அண்ணாமலையிலயும் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலயும் ஆசிரியரா இருந்தார். பிறகு திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் விரிவுரையாளரா, பேராசிரியரா, துறைத்தலைவரா இருந்தார். அப்புறம் கோழிக்கோடு பல்கலைக்கழகம், பாலக்காடு சித்தூர் அரசினர் கல்லூரியில் முதுகலைத்துறையில் தலைவரா வேலை பார்த்தார். அவரு ”முதற்கனி” என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இது முழுக்க முழுக்க மரபுக்கவிதைத்தொகுதி. அதுல ஷெல்லி, கீட்ஸ் உட்பட சில ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்திருந்தார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் வழிகாட்டுதல்ல அவரு (ஜேசுதாசன்) தமிழ் இலக்கிய வரலாறு பற்றி ஆய்வு செய்தார். ஆனால் ஆராய்ச்சிப் படிப்பு முடியாததுனால் அவர் தொகுத்த செய்திகளை கல்கத்தா ஒய்.எம்.சி.ஏ. மூலமா ”ஹ’ஸ்டரி ஆஃப் டமில் லிட்டரேச்சர்”ங்ற பேர்ல புத்தகமா வெளியிட்டாங்க. நிறைய கட்டுரைகள் அவங்க எழுதியிருக்காங்க. அவர் மாணவர்களுக்கு பண்டை இலக்கியங்களைப்போல கம்பனும் புதுமைப்பித்தனும் சுந்தரராமசாமியும் முக்கியம் என்பதை எடுத்துச் சொல்லியிருக்காரு. கேரள பல்கலைக்கழக கல்லூரியில வேலை பார்த்தபோது கேரளத் தமிழ் மாணவர்களுக்கு தற்காலத் தமிழ்ப் படைப்பாளிகளை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பை இவர் ஏற்படுத்திக் கொடுத்தார். கர்நாடக இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இசையை முறையா கத்துகிட்டவரு. என்கிட்டயும் சரி பிள்ளைங்க கிட்டயும் சரி, இவரு கோபப்படவே மாட்டாரு. ரொம்ப அன்பா இருப்பாரு. கவுன்ட் டவுன் ஃபிரம் சாலமோன் தொகுதிகளை இவரோட உதவி இல்லாம இவ்வளவு சிறப்பா கொண்டு வந்திருக்க முடியாது. கம்பனைக் குறித்துத்தான் மூன்றாவது தொகுதியில் சொல்லியிருந்தேன். மூன்றாவது தொகுதி வெளியான பதினைஞ்சாவது நாள் அவரு இறந்துபோனாரு (கண்கலங்குகிறார்).

தீராநதி: அப்புறம் தமிழ்நாவல் பக்கம் உங்க கவனம் திரும்பினது எப்படி?

ஹெப்சிபா: அப்புறம் எங்க வாழ்க்கை நல்லாதான்போயிட்டிருந்துச்சு. எங்க வாழ்க்கை இல்லறத்தோட மட்டுமே நிற்கவில்லை. இரண்டுபேரும் சேர்ந்து இலக்கியத் தேடல்களிலும் ஈடுபட்டோம்.. முதற்கனி, பாரதியாரின் குயில்பாட்டு ஆகியவற்றை அவங்ககிட்டே கேட்டுக் கேட்டு நான் ஆங்கிலத்தில மொழிபெயர்த்தேன். இந்த நேரத்தில தான் அவங்க என்னை தமிழ்ல நாவல் எழுதணும்னு கேட்டுகிட்டே இருந்தாரு. அப்படி இருக்கிறப்ப பழைய நோட்புக்கிலேர்ந்து கொஞ்சம் பேப்பரைக் கிழிச்சு நான் கதை எழுதத்தொடங்கினேன். அதுல ஒரு இடத்திலயும் அவரு தலையிடவில்லை. பதினைஞ்சு நாளு கழிச்சா ஒரு நாவல் ரெடி. கையெழுத்துப்பிரதியை அவரு படிச்சு பார்த்துட்டு ”கொள்ளாம்.. நல்லாருக்கு”னு சொன்னாரு. கடைசில என்ன தலைப்பு வைக்கலாம்னு யோசிச்சப்ப ”புத்தம் வீடு”னு அவங்க சொன்னாங்க.. பொறவு கையெழுத்துப்பிரதியை எழுத்தாளர் நகுலன்கிட்டே கொண்டு போனாங்க. அங்கேயிருந்து நண்பர் சுந்தரராமசாமியிடம் கையெழுத்துப்பிரதி போச்சு. எங்க சாரும் சுந்தரராமசாமியும் நல்ல நண்பருங்க. சுந்தரராமசாமி நிறையதடவை எங்க வீட்டுக்கு வந்திருக்காரு. அவரு எழுதின கதையில சிலது படிச்சிருக்கேன். எதுன்னு ஞாபகமில்லை. என்னோட புத்தம் வீடு நாவலை சுந்தரராமசாமி படிச்சுட்டு ”நாவல் நல்லாருக்கு”னு என் சார்கிட்டே சொல்லியிருக்காரு. கடைசியில் தமிழ்ப்புத்தகாலயம் கண.முத்தையா வாங்கி அதை புத்தகமா போட்டாங்க.!

தீராநதி: புத்தம்வீடு நாவலை உண்மைச் சம்பவத்தை அடிப்படையா வைச்சா எழுதினீங்க..? இன்னிக்கு வட்டார வழக்கில நிறைய நாவல்கள் வருது… ஆனா அந்த காலகட்டத்துல நாடார் சமுதாய மக்களின் வாழ்க்கையை படைப்பிலக்கியத்தில் நீங்கதான் முதல்முதலா பதிவு செய்ததா சொல்லுறாங்க…

ஹெப்சிபா: உண்மைச் சம்பவமான்னு கேட்டா.. என்ன பதில் சொல்லுறது. ஆனால் அந்த நாவல்ல கையாண்டிருக்கிற நிறைய கதாபாத்திரங்கள், கதைக்களன்கள் எல்லாமே உண்மைதான். அன்னிக்கு எங்க வீட்டை புத்தம்வீடுன்னுதான் சொல்லுவாங்க. அதுமாதிரி அந்தக் கதையில வர்ற கண்ணப்பச்சி தாத்தா பேரும் என்னோட தாத்தா பேருதான். புத்தம் வீடுக்கு முன்னாடி நாடார் சமுதாய வாழ்க்கைமுறை தமிழ்ல நாவல்வடிவமா வரலைன்னு நினைக்கேன். அதை அவுங்க (பேராசிரியர் ஜேசுதாசன்) ஒரு பெரிய குறையா சொன்னாங்க. அப்பெல்லாம் பிராமண வாழ்க்கைமுறைதான் அதிகமா தமிழ்ல வந்திருக்கு. நாட்டுல பிராமணன் மட்டும்தான் இருக்காங்களா? அவங்க வாழ்க்கைமட்டும்தான் வாழ்க்கையா? நம்ம வாழ்க்கை வாழ்க்கை இல்லையா?ன்னு ஒருதடவை சொன்னாங்க. அவங்க சொன்னதை யோசிச்சுப்பார்த்தப்பதான் நான் வாழுற சமுதாயத்தைப்பத்தி அதேபேச்சுநடையில ”புத்தம் வீட்டை” எழுத முடிஞ்சது. அந்த நாவல்ல நாடார் சமுதாய வாழ்க்கை முறையை ஓரளவுக்கு நல்ல படியா பதிவு செய்திருக்கேன்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. அதுல வர்ற பனையேறி அன்பையன் குடும்பம் மாதிரி நிறையப் பேரை நான் எங்க ஊருல சந்திச்சிருக்கேன்.

தீராநதி: அன்னிக்கு ”புத்தம் வீடு” நாவல் இலக்கிய உலகில் பெரும் விவாதப்பொருளா இருந்ததுதானே..

ஹெப்சிபா: ஆமாம். இந்த நாவல்பத்தி நிறைய விவாதங்கள் அன்னிக்கு வந்துச்சு. சில மலையாள நாவல்கள்தான் புத்தம்வீடு எழுதத் தூண்டுதலா இருந்துச்சுன்னெல்லாம் சொன்னாங்க. ஆனால் எனக்கு மலையாளம் வாசிக்கவே தெரியாது. மலையாளம் நல்லா பேசுவேன். மலையாளிங்க கிட்டே சரிசமமா பேசுவேன். தமிழில் வந்த 10 நாவல்களில் ஒன்னுன்னுகூட புத்தம் வீடைச்சொன்னாங்க. என்னோட நாவல் சம்பந்தமா வந்த விவாதங்களை நான் பெருசா எடுத்துக்கலை. பொதுவா நான் ஆங்கிலத்துலதான் நிறைய எழுதினேன். அவுங்க என்னை கல்யாணம் செய்ததனாலதான் நான் தமிழ்ல எழுதினேன். இல்லைன்னா நான் தமிழ்ல எழுதமாட்டேன். நான் தமிழ்ல நாவல் எழுதியிருக்கேன்னு மார்த்தாண்டத்துல உள்ள என் சொந்தக்காரங்ககிட்டே பெருமையா சொன்னப்ப ”தமிழிலையா?”ன்னு இழிவா கேட்டாங்க என் சொந்தக்காரங்க. புத்தம் வீடுக்கப்புறம் டாக்டர் செல்லப்பா, மாஜனீ, அநாதை ஆகிய நாவல்கள் எழுதினேன்.

தீராநதி: நீங்க நாலு நாவல்கள் எழுதினாலும் இன்னிக்கும் பேசப்படுற நாவலா புத்தம் வீடு இருக்கு. புத்தம்வீடு பேசப்பட்ட அளவுக்கு மத்த நாவல்கள் பேசப்படலையே..?

ஹெப்சிபா: புத்தம்வீடு என்னோட முதல் நாவல். அதை எழுதறப்ப என்ன மனநிலையில இருந்தேனோ அதே மனநிலைதான் மத்த நாவல்களை எழுதறப்பவும். புத்தம் வீடு நாவல்ல இருந்த புதுமை எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. அதுல இதுவரை யாருமே சொல்லாத வட்டார சொல் வழக்கைப் பயன்படுத்தி எழுதியிருந்தேன். புத்தம்வீடுல கல்வி அறிவில்லாத சமுதாயத்தைப்பத்தி சொல்லியிருந்தேன். அதுல சொல்லியிருந்த சமுதாய அமைப்பு ”இப்படியும் ஒரு சமுதாயம் உண்டா?”னு வாசகர்களிடையே கேள்வி எழுப்பியது. அறிமுகமில்லாத ஒரு சமுதாயத்தைக் காட்டினதுனாலதான் புத்தம் வீடு பேசப்பட்டதுன்னு நெனைக்கேன். மத்த நாவல்களைப் பொறுத்தவரையில் அதுல வர்ற சமுதாய அமைப்புகள் எங்கேயும் காணப்படக்கூடிய பொதுவான சமுதாயத்தைப்பத்தி எழுதியிருந்ததுனால அது வாசகர்களை ஈர்க்காமப்போச்சோ என்னவோ..?

தீராநதி: நீங்க நாவல்களில் மதப்பிரச்சாரம் செய்ததாக அன்றைக்கு பேசப்பட்டதே…?

ஹெப்சிபா: கண்டிப்பா இல்லை. நான் நாவலை நாவலா பார்த்தேனேதவிர எந்த இடத்திலயும் மதப்பிரச்சாரம் செய்யலை. நான் வாழ்ந்த எனக்குத்தெரிந்த நாடார் கிறிஸ்தவ குடும்பத்தைப்பற்றிச் சொல்லும்போது அவர்களின் மத இயல்புகளைத்தான் நாவலில் சொன்னேனேதவிர எந்த வகையிலும் நான் நாவலில் மதப்பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. ஆனால் நான் பைபிள் பத்தி பிரச்சாரம் நிறைய செய்திருக்கேன். ஆனால் நாவலை அதுக்குப் பயன்படுத்தவில்லை.

தீராநதி: உங்கள் நாவல்களில் பெண்கதாபாத்திரங்களைச்சுற்றியே கதை நகர்த்தப்படுகிறதே? உங்களின் புத்தம்வீடு நாவலாகட்டும், மாஜனீ ஆகட்டும் பெண்களின் வேதனைகளை பரிவுடன் சொல்லியிருந்தீர்கள். உங்களை நீங்கள் எப்போதாவது பெண்ணியவாதி என்று எண்ணியிருக்கிறீர்களா?

ஹெப்சிபா: வீட்டிலயும் சரி, பள்ளிக்கூடத்திலயும் சரி, கல்லூரியிலயும் சரி பெண்களிடம்தான் எனக்கு நெருங்கிய தொடர்பு. கஷ்ப்படுறவங்க மேல இரக்கம் வருவது இயல்பு தானே. என்னைச்சுத்தி நடக்கிற பலவிஷயங்கள் என்னை பாதிச்சிருக்கு. பெண்களுக்கு சமுதாயத்தில் பெரிய தாக்கம் உண்டு. எதையும் சாதிக்கும் ஆற்றல் உண்டு, உண்மையான உழைப்புக்கு மதிப்புக்கொடுப்பவர்கள் என்பதையும் உணர்த்துவதற்காகவே என் நாவல்களில் வரும் பெண்களை உயர்வாகச் சித்தரித்திரிந்தேன்.

தீராநதி: உங்கள் நாவல்களில் வரும் பெண்கள் அனைவரும் கிறிஸ்தவப்பின்னணியில் வளர்ந்தவர்களாக காண்பித்திருந்தீர்கள். இதற்குக் காரணம் ஏதேனும் உண்டா?

ஹெப்சிபா: கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்திலயும், கிறிஸ்தவக்கல்லூரியில் படித்ததினாலும், அக்கம்பக்கத்தவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்ததினாலும் கிறிஸ்தவர்களோடு மாத்திரமே நெருக்கமான பழக்கம் இருந்ததினாலும் என் நாவல்களில் வரக்கூடிய பெண்பாத்திரங்களும் கிறிஸ்துவப் பின்னணியில் வளர்ந்தவர்களாக அமைந்துவிட்டனர்.

தீராநதி: நீங்கள் படைத்துள்ள பெண்பாத்திரங்கள் உங்கள் குடும்பத்தோடு இணைந்த பாத்திரங்கள் என்று சிலர் கருதுகிறார்களே. நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

ஹெப்சிபா: அது என் குடும்பத்தோடு இணைந்த பாத்திரங்கள் அல்ல. அப்படி சிலர் கருதினால் அது தவறு. ஆனால் நான் எழுதிய நாவல்களில் படைக்கப்பட்ட பெண்கள் அன்றைய காலகட்டத்தில் நான் சந்தித்த சில பெண்கள்தான்.

தீராநதி: நீங்கள் படைத்துள்ள பெண் பாத்திரங்களில் உங்கள் சுயநிலைகளை அதிகமாக வெளிப்படுத்தும் பாத்திரமாக நீங்கள் கருதுவது எது?

ஹெப்சிபா: மாஜனீ. பர்மாவில் ஏழு வயதிலிருந்து 14 வயது வரையிலும் நான் படிக்க நேர்ந்தது. என் தந்தை அங்கே ஆசிரியரா பணியாற்றினார். அதற்குப்பிறகு அங்கே போர் ஏற்பட, இந்தியா திரும்ப நேர்ந்தது. இந்தக் காலகட்டத்துல நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் என் மனசுல இன்னிக்கும் ஓடிகிட்டிருக்கு. இதை மையமா வைச்சே மாஜனீ நாவலைப்படைச்சேன். மாஜனீ நாவலில் வரும் மாஜனீ கேரக்டரின் இயற்பெயர் ”கிரேஸ் அழகுமணி” அவளது பெயரில் உள்ள இறுதிப்பகுதியை பர்மீய ஒலிக்கிசைய மாஜனீ என மாற்றி அழைப்பதைத்தான் நாவலுக்குத் தலைப்பாக வைத்தேன்.

தீராநதி: இந்த நாவல்களைப் படைச்சதுக்கப்புறம் நீங்க எழுதுறதை விட்டிட்டீங்க போல…?

ஹெப்சிபா: ஆமாம். தமிழ்நாவல் எழுதறதை விட்டேன். ஆனால் நான் தமிழ், ஆங்கிலத்துல கட்டுரைகள் எழுதிகிட்டிருந்தேன். எனக்கு எழுதணும்னு உந்துதல் வராம நான் எழுதமாட்டேன். எழுத்து மனசிலேர்ந்து வரணும். அதுக்காக என்னதான் உந்தித்தள்ளினாலும் எழுதமுடியாது. நாவல் எழுதலைன்னு எனக்கு வருத்தம் ஒண்ணும் கிடையாது. ஆனால் குழந்தைகளுக்காக நிறைய எழுதத் துவங்கினேன். பத்து வருஷத்துக்கு முன்னாடி எழுத ஆயத்தமானபோது ஒரு குரலைக் கேட்டேன். stop that you have other work to do அதே வேளை மின்னல் போல, பழைய இலக்கியம் தொட்டு freedom movement வரை ஒரு ரோட்டைக்கண்டேன். 1998-ல் துவங்கி 2002-ல் நான்கு வால்யூம்களாக Count down from Solomon வெளியிட்டிருக்கேன். இதுக்கு அவுங்க(ஜேசுதாசன்) ரொம்ப உதவி செய்தாங்க. எகிப்தில் உள்ள மன்னன் சாலமனின் அரண்மனையில் தேக்குமரத்துண்டுகளாலான பலகைகள் இருந்தது. அன்றைக்கு எகிப்தும் இந்தியாவும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தன. தென்னிந்தியாவிலிருந்துதான் தேக்குமரம் அங்கே கொண்டுசெல்லப்பட்டிருக்க வேண்டும். எனவே தமிழ்நாட்டுடன் அன்றைக்கு எகிப்திற்கு தொடர்பு ஏற்பட்டிருக்கவேண்டும். அதனால்தான் கவுண்ட் டவுன் ஃபிரம் சாலமோன்னு தொகுப்புக்கு பேர் வைச்சேன்.

தீராநதி: தலித் இலக்கியம் பற்றி உங்கள் கருத்தென்ன..?

ஹெப்சிபா: இலக்கியத்தை மேல்வர்க்க இலக்கியம் தலித் இலக்கியம்னு பிரிச்சுப்பேசுறதுல எனக்கு உடன்பாடு இல்லை. அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி ஜாதியை நான் எதிர்க்கிற ஆளாக்கும். ஒரு விசயம் சொல்லுதன் கேட்டுகிடுங்க.. என்னோட மகன் டாக்டர் தம்பி தங்ககுமார் கேரளா பல்கலைக்கழக கல்லூரியில பிசிக்ஸ் படிச்சதுக்கப்புறம் சென்னை ஐ.ஐ.டி.யில மேற்படிப்பு படிக்க செலக்ட் ஆனான். படிச்சு முடிச்சு வந்ததுக்கப்புறம் மார்த்தாண்டம் நேசமணி கிறிஸ்துவக்கல்லூரியில புரபசரா வேலை கிடைச்சது. வேலை கிடைச்சதும் என்கிட்டே சொன்னான், ”அம்மா எனக்கு நம்ம ஜாதியில பொண்ணு வேண்டாம். வேற ஜாதியில எனக்கு அம்மா பொண்ணு பாத்துதரணும்.. டவுரி ஒண்ணும் வாங்கக்கூடாது.. குறைஞ்சது பி.ஏ. வரையாவது படிச்சிருந்தாபோதும்.. நாம் கிறிஸ்துவத்தை கடைப்பிடிக்கிறதுனால கிறிஸ்துவரா இருந்தா நல்லதுனு சொன்னான். நானும் அவரும்(ஜேசுதாசும்) என் மகன்கிட்டே உட்கார்ந்து பேசுனோம். ”வேற ஜாதியில பொண்ணு பார்க்கிறதுல ஒண்ணும் பிரச்சனை இல்லை. ஆனா நாளைக்கு குழந்தைங்க பிறந்து அதுகளுக்கு கல்யாணம் பண்ணுறப்ப ஏதாவது பிரச்சனை வந்தா என்ன பண்ணுறதுன்னு அவன்கிட்டே கேட்டோம். அதுக்கு அவன் சொன்னான், அதைப்பத்தி அப்ப பாத்துக்கலாம்னு. நாங்க சரின்னுட்டோம். அன்னைக்கு எங்க வசதிக்கு பலரும் பல லட்சரூபாய் டவுரி தந்து பொண்ணைத்தர தயாரா இருந்தாங்க. ஆனா எங்களுக்கு எங்க மகனோட விருப்பம்தான் பெருசா தோணிச்சு. எங்க முடிவை சர்ச் பாஸ்டர்கிட்டே எங்க மகனோட எதிர்பார்ப்பைச் சொன்னோம். உடனே பாஸ்டர் சிரிச்சுகிட்டே சொன்னாரு, ”ஒரு குடும்பத்துக்கு பல லட்சரூபா லாபமாச்சு”ன்னு.. மகன் ஆசையைச் சொல்லிட்டான். அவனுக்கு விரும்பினமாதிரி எங்க போய் பொண்ணு தேடுயதுன்னு பலருகிட்டேயும் பேசினோம். அப்போதான் டதியில பாடம் சொல்லித்தந்த டீச்சர் பத்தி ஞாபகம் வந்துது. அவங்க ஷெட்யூல்ட் காஸ்ட். அவங்களோட ஹஸ்பண்ட் பிராமின். திருவனந்தபுரத்தில அவரு வேலை பார்த்தாரு. நான் வேலைக்கு வந்ததுக்கப்புறம் அவங்களோட எந்தத் தொடர்பும் இல்லாம இருந்துச்சி.. ஒரு வழியா அவங்களைக் கண்டுபிடிச்சு என் மகனின் விருப்பத்தைச் சொன்னேன். அவரு ஆந்திராவில் இருக்கிற அவரோட உறவினர் பாஸ்டர் தேவபிரகாசம் பத்தி சொன்னாரு. தேவபிரகாசமும் பிராமின் குடும்பத்தைச்சேர்ந்தவர். அவரும் கிறிஸ்டினா கன்வெர்ட் ஆனவரு. இவரு தனியா போதம் செய்திட்டிருந்தாரு. அவருக்கு இரண்டு பெண்பிள்ளைகளும் இரண்டு பையன்களும். இந்த நிலையில அவருக்கு மனைவி இறந்துபோனாங்க. இவரு போதனை செய்ய ஊரூரா அலைஞ்சிட்டிருப்பாரு. அதனால் அவருக்கு பிள்ளைங்க எதிர்காலம் பத்தி பயம் வந்துது. இந்தச் சமயத்துல எனக்கு டதி ஸ்கூல் டீச்சர் பாஸ்டர் தேவபிரகாசத்தோட மூத்த மகள் விஜய கீர்த்தியை என் மகனுக்கு பேசி முடிச்சாங்க. திருவனந்தபுரத்தில சர்ச்சுல வைச்சு கல்யாணம் நடந்தது. அதனால் எனக்கு ஜாதியில எல்லாம் நம்பிக்கை இல்லை. அதுபோலவே என் பேத்திக்கும் (தம்பி தங்ககுமாரின்மகள்) கலப்புத்திருமணத் தம்பதியரின் மகனைத்தான் பார்த்து திருமணம் செய்து வைத்தோம். எனக்கு தலித்துன்னும் கிடையாது.. பிராமணன்னும் கிடையாது.. நாடார்ன்னும் கிடையாது. அதனால இலக்கியத்தை தலித்துன்னு பிரிச்சுப்பாக்கிறது சரியில்லைங்கிறதுதான் என்னோட கருத்து.

தீராநதி: இப்போது தமிழிலக்கியத்தை எடுத்துகிட்டா தலித் இலக்கியம் முன்னேற்றப்பாதையில் செல்வதாக தெரிகிறது. தலித் எழுத்தாளர்கள் பற்றி உங்கள் கருத்து.

ஹெப்சிபா: அதுதான் மொதல்லேயே சொல்லிட்டேனே, நான் இலக்கியத்தைப் பிரிச்சுப்பாக்கவே இல்லைன்னு. யாரு தலித் எழுத்தாளர்னெல்லாம் எனக்குத்தெரியாது..

தீராநதி: இலக்கியத்தைப்பத்தி உங்கள் மதிப்பீடு என்ன..?

ஹெப்சிபா: இலக்கிய உலகம் கடல் போல. மனிதர்களில் எத்தனை விதமோ, இலக்கியமும் அத்தனைவிதமாகத்தானிருக்கும். கலங்கல் நீர்போன்ற வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இலக்கியம்தான் இன்று பெருவாரியான மக்களைக் கவர்கிறது. அதில் அதிசயம் ஒன்றும் இல்லை. இது இயல்புதான். ஆசிரியர்கள் தங்கள் வாழ்க்கைத் தத்துவ நிலையிலிருந்துதானே தங்கள் படைப்புகளுக்கு உருக்கொடுக்க முடியும். தரக்குறைவான படைப்பாளர்கள் விற்பனையை முன்னிட்டு அல்லது புகழை முன்னிட்டு ராகத்துக்குத் தகுந்த தாளமாக, எந்தத் தத்துவம் மக்களிடையே எடுபடுகிறதோ, அந்தத் தத்துவத்தையே கையாளுகிறார்கள். இதில் புதுமை ஒன்றும் இல்லை. பொதுவுடமை இலக்கியமாவது, புராண இலக்கியமாவது நமது நம்பிக்கையைக் கலைக்கப்போவது இல்லை. சத்தியத்தில் நிலை நிற்பவர்களுக்கு சத்தியம் வழியாகத்தான் இலக்கியத்தை உணர முடியும். தூய்மையையும் சத்தியத்தையும் கம்பர் மனசார வாயாரப் பாடுவதற்காகவே நாம் கம்பரைப் பாராட்டுகிறோம். பொது உடைமை இலக்கியத்தின் ஒரு பெரிய குறை என்னவென்றால், பொய்தான். பணக்காரன் மகாபாவியாக இருக்கலாம், ஒப்புக்கொள்கிறோம். வஞ்சனைக்காரனாக இருக்கலாம். ஏழைமீது காட்டுவது அக்கிரமமாக இருக்கலாம். அதையும் ஒப்புக்கொள்வோம். ஆனால் ஏழையானவன் நல்லவன் என்று எடுத்துக்காட்டுகிறார்களே, அதைத்தான் ஒப்புக்கொள்ளமுடியாது. ஏழையின் கையில் அதிகாரத்தைக் கொடுத்துப்பார்த்தாலல்லவா தெரியும். அவன் கொண்டு பிறந்த குணம் எப்படிப்பட்டது என்பது..? அதற்காக அக்கிரமத்தை அக்கிரமமல்ல என்று சொல்லவேண்டாம். ஆனால் ஏழை மீது இரக்கம் பாராட்டும்போது, அந்த இரக்கம் உண்மையானதுதானா? அல்லது சொந்தக்காரியம் சிந்தாபாத் என்ற முறையில் அமைந்திருக்கிறதா என்பதுதான் விஷயம். பொய்யின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு, காட்டுற இரக்கத்திற்கு என்ன பெயர் கொடுப்பது.? குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கிறதா? எதுவாக இருந்தாலும் அது கலை என்று நாம் ஒப்புக்கொள்ள முடியாது. மெய்யான கலை, உண்மையின் அடிப்படையிலேயே உருப்பெறுவது. உண்மை என்பது எல்லா மனுஷருக்குமே உரிமையுள்ள ஒன்று. ஆனால் அதற்கு வேண்டுமென்றே கண்ணடைத்துக்கொண்டால் என்ன செய்ய முடியும்? அத்தகையை நிலையைக் கலை என்று எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்..? மனித இருதயம் கலையால் மாற்றம் அடையுமோ என்பது சந்தேகத்துக்குரியது. மண்ணை உடைத்து மரமடித்து விதைபோடுகிறமாதிரி, கலையால் மனித சிந்தனைக்கு ஓரளவு பக்குவம் கொடுக்கமுடியும். மனமாற்றம் என்று நாம் சொல்லும்போது அது சிந்தனையளவில் நின்று விட முடியாதல்லவா? ஓல்ட் மேன் அன்ட் தி சீ என்ற நூல் நம்மை வெகுவாக சிந்திக்க வைக்கிறது. கடலோடு போராடின மீனவனை ஒரு வீரனாகவே காட்டுகிறது. ஆனால் அதே மீனவன் ஆசிரியரிடம் பொருளுதவிக்காகப் போனபோது ஆசிரியர் மறந்துவிட்டதாக அறிகிறோம். கலை என்பதே இந்த அளவுதான். கற்பனையோடு பெரும்பாலும் நின்று விடுகிறது. கற்பனை என்பது மனிதனுக்கு இறைவன் கொடுத்த ஒரு அருமையான வரம்தான். செவியில்லாமல் வீணையைக் கேட்டு இன்புற முடியுமா? கண்ணில்லாமல் நிலவைப் பார்த்து ரசிக்க முடியுமா? செவியையும் கண்ணையும் கொடுத்த இறைவனே கற்பனையையும் நமக்குக் கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்த வரங்களை நாம் தவறாகப் பயன்படுத்தி வருகிறோம். கண்ணையும் செவியையும் கர்த்தர் கொடுத்திருக்கிறார் என்பதற்காக இருட்டு விடிய டி.வி.(டெலிவிஷன்)க்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு கண்களைக் கெடுத்துக்கொண்டிருக்கிறோம். கலை கலை என்று பலரும் ஜ“வனைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பல எழுத்தாளர்களுக்கும் வாழ்க்கையை விட கலைதான் பெரிதாகத் தெரிகிறது. அதனால் வாழ்க்கையே தொலைந்து விடுகிறது. கலையும் நெறிதவறிப் போய்விடுகிறது. கலை என்ற நிலையில் இலக்கியத்திற்கு ஒரு கணிசமான வரையறை உண்டு. நல்ல இலக்கியங்களை வாசித்துப் பழகினவர்களுக்கு அது இந்த வாழ்க்கையில் ஒரு இன்பம் தருகிறது என்பது உண்மை. அத்தகைய இன்பத்தில் தவறில்லை என்பதும் உண்மை. இனிய பதார்த்தங்களை நாம் சாப்பிடுவதில் தவறில்லை எனில் நல்ல நூல்களை வாசிக்கிறதிலும் தவறிருக்க முடியாது. ஜேன் ஆஸ்டினின் கதைகளைப் படிக்கும்போது ஒரு அடிப்படை நிம்மதியை நாம் அனுபவிக்கவே அனுபவிக்கிறோம். நேர்மாறாக வர்ஜ“னியா ஊல்ஃபின் கதைகளை வாசிக்கும்போது, ”ஐயோ என்ன பரிதாபம்! இப்படியா வாழ்க்கையைக் கண்டிருக்கிறாள்?” என்ற மனக்கஷ்டம் மேலோங்கி நிற்கிறது. கற்பனை இலக்கியத்தில் செயல் என்றாலோ பெரும்பாலும் கற்பனை உலகத்தோடு நின்று விடுகிறது. அப்படி நிற்கவும்தான் வேண்டும். இல்லாவிட்டால் மனிதன் பைத்திய நிலையில் அல்லவா ஆகிவிடுகிறான். கற்பனையில் டார்சான் (டார்ஜான்) என்னவெல்லாமோ செய்கிறான். அதை நிஜ வாழ்க்கையில் செயல்படுத்திவிட்டால் மரத்திலிருந்து விழுந்து முதுகை ஒடித்துக் கொள்ளலாம். அல்லாவிட்டால் புலியின் வாயில் சென்று விழலாம். சத்தியம் என்பது, கற்பனையில் கிரியை செய்யும்போது அந்தக் கற்பனைக்கு, சிருஷ்டியின் நிழல் என்ற அளவுக்கு அழகு வருகிறது. என்னதான் இலக்கியம் என்றாலும் இறைவனின் ஆசியின்றி ஒன்றுமே இல்லை. இன்றைய இலக்கிய ஆசிரியர்களின் விஷயம் பயத்தைத் தருகிறது. பிறவிச்செவிடன் பாட்டுப்பாடப்போனால் பாட்டின் கதி என்னவாகுமோ அந்தக் கதிதான் அவன் எழுதுகிற இலக்கியத்துக்கும். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் எதற்கும் குறைபட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். சத்தியம் சத்தியம் என்பதையும் இலக்கியம் வெறும் இலக்கியம் என்பதையும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

தீராநதி: அதென்ன உங்களுக்கு கம்பனிடம் அத்தனை ஈடுபாடு..? கவுன்ட் டவுன் ஃபிரம் சாலமோனில் மூன்றாவது தொகுதி முழுக்க கம்பரசத்தை அழகாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பன்முகச் சிந்தனைகளை உருவாக்கியிருந்தீர்கள். இதற்குக் காரணம்..?

ஹெப்சிபா: தமிழ்ல கம்பனில் இல்லாதது எதுவும் இல்லை. தமிழ் இலக்கியம்னா அது கம்பன் தான். என்னைப்பொறுத்தவரை சமுதாயம் ஆகட்டும், நட்பாகட்டும், போர் ஆகட்டும், கம்பராமாயணத்துல ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கைதான். நாடு கடத்தப்பட்ட ராமன் பின்னால தருமம் இரங்கிப்போகிறது. ராமனின் பட்டாபிஷேகத்துக்கு என்று அமைத்த முல்லைப்பந்தல் கலைவது, ராமனிடம் அபயம் தேடுமாறு புத்தி சொல்லும் சகோதரனிடம் அழும் கும்பகர்ணன், தன்னுடைய நாயகியிடமிருந்து தன்னைப்பிரிக்கும் கடலை உற்றுநோக்குவது மருதத்தின் வர்ணனை, ராஜகுமாரி திருமணத்தன்று ராஜசபையில் வருகிற அழகு என ஆயிரம் இடங்களில் கம்பன் வாழ்க்கையின் ஆழங்களைத்துழாவி, அதன் சிகரங்களை எட்டிப்பிடித்து அதன் அழகுகளை கையிலடக்கி விடுகிறான். இதனால் தான் கம்பனை சாகாவரம் பெற்ற கவியாக உலகிலுள்ள மகா கவிகளில் ஒருவனாக ஏன் ஷேக்ஸ்பியரோடேயே தோளோடு தோளாக நிற்கக்கூடியவனாக நாம் கருதுகிறோம். ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியர் எப்படி நம்மை திகைக்க வைக்கிறானோ அதுபோலவே கம்பனும். கம்பராமாயணத்தில் ஒரு சொல் கூட வீணான சொல் கிடையாது. அதிகப்பிரசங்கம் என்பார்களே, அது கம்பராமாயணத்தில் கிடையாது. கம்பன் பல்வேறு கவனங்களில் நம்மை ஈர்க்கும்போது காவியத்தை வேண்டுமென்றே நீள வைக்கிறான். அது சபையின்தேவை. கம்பராமாயணத்தின் சில அழகுகள் சிலருக்கென்றே அமைக்கப்பட்டன. கேட்போரை ஈர்க்கவேண்டும். அழகு மந்திரத்தால் கட்டுப்படுத்தவேண்டும். இதெல்லாம் இல்லாமல் அன்று கம்பன் கவியாக இருந்திருக்க முடியாது. கம்பனின் மகா காவியப்பரப்பில் நாம் உற்று நோக்குகிற அனுபவம், ஷேக்ஸ்பியரின் நாடக சாகரத்தில் பார்க்கிற அனுபவத்தைப் போலிருக்கும்.

ஷேக்ஸ்பியராகட்டும் கம்பனாகட்டும் இயல்பிலேயே மகா கவிகளாக அமைந்தவர்கள். இருவருக்கும் திடீர் திடீர் என்று வாழ்க்கையின் மிகப்பெரிய இரகசியங்களைப்-பற்றிய தரிசனங்கள் கிடைத்துக் கொண்டிருந்தது. உள்ளுணர்வு அவர்களை உந்தித்தள்ளிய வேகத்தில் தங்களை அறியாமலேயே கலை எண்ணத்தைக் கடந்த மகாகவிகளாகிவிட்டார்கள்.

”புவியினுக்கணியாய், ஆன்ற பொருள் தந்து, புலத்திற்றாகி

அவி அகத்துறாஇகள் தாங்கி, ஐந்திணி நெறி அளாவி,

சவிஉறத்தெளிந்து, தண்ணென்(று) ஒழுக்கமும் தழுவி, சான்றோர்

கவியெனக்கிடந்த கோதாவரியினை வீரர்கண்டார்!” என்ற கோதாவரியினைப்பற்றிய இந்த அற்புத வரியிலிருந்து கம்பன் கவிதையை எப்படிப்பார்க்கிறான் என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

மகா காவியத்தை விட விரிந்து பரந்து கிடக்கக்கூடியது எது? பெரு வெள்ளத்தின் பிரவாகத்துக்கு வேறு எந்த ரீதியாக எழுதிய கவிதையை ஒப்பிட முடியும்? மட்டுமல்லாமல் கம்பனுக்கு மூல நூலான இராமாயணம் இருக்கவே இருக்கிறது. கம்பனைப்பற்றிய கவிக்கு எதைப்பின்பற்றத்தேவை என்பது நன்கு தெரிந்திருக்கும். தன் காவிய முன் மாதிரி தன் முன்னால் இருக்க, ரசிகர் சபைக்கு தினம் தினம், படலம் படலமாகப்பாட வேண்டிய தேவையும் இருந்திருக்கிறது. கம்பனைப்போல் செவிக்கு இனிமையாகப்பாட வல்லவர் யார்? இந்த இனிமை சில வேளைகளில் வார்த்தைப்பந்தலாக அமைந்து விடுகிறது. பொருளை உணராமலேயே இசையை ரசிக்கிற நிலைமை வந்து விடுகிறது. விரிந்து, பரந்து கிடக்கிற காவியம் வேண்டுமல்லவா? இழுக்கிற இழுப்புக்கெல்லாம் காவியம் வளைந்து கொடுக்கிறது. சபையில் சுகம் காண வந்தவனை, கனவு காணவந்தவனை திருப்தி செய்வதற்கென்றும் காவியத்தை அமைக்க வேண்டிய நிலை பலவிதப்பட்ட ரசிகர்களை திருப்தி செய்கிற வேலைக்கு கம்பன் இறங்கியிருக்க வேண்டும். ஷேக்ஸ்பியர் செய்ததும் இதைத்தான்.

கம்பன் வால்மீகியிடமிருந்து கடன் வாங்கினானா? ஷேக்ஸ்பியர் எத்தனையோ பேரிடமிருந்து காப்பி அடித்திருக்கிறான். ஷேக்ஸ்பியர் வெற்றி பெற்ற மாதிரியே கம்பனும் வெற்றி பெற்றான். மக்கள் அவன் யாரிடமிருந்து காப்பியடித்தான் என்பதை மறந்துவிட்டு கம்பனிலேயே பெருமிதம் கொண்டார்கள். ஆங்கிலேயர் ஹாலின்ஷெட் க்ரானிக்கிள் போன்ற மூல நூல்களை மறந்துவிட்டு ஷேக்ஸ்பியர் எடுத்துக்காட்டிய வாழ்க்கை நாடகத்தில் பெருமிதம் கொண்டார்கள் அல்லவா, அதுபோல் இங்கே நான் அழுத்திக்கூற விரும்புகிற விஷயம், ஷேக்ஸ்பியரின் குற்றங்குறைகளைப்போலவே கம்பனின் குற்றங்குறைகளையும் பெரும்பாலும் சபையின் விருப்பு வெறுப்புகளோடும், காலத்தின் தேவைகளோடும் பண்பாட்டின் அமைப்போடும் பொருந்தக்காணலாம்,

கம்பன் பாலுறவை வெறியோடு, மிருக இச்சையோடு ஒரு கூச்சமும் இல்லாமல் விவரிக்கத்துணிவது என்னவோ உண்மைதான். ஆனால் சீதாராமர் காதலில் அந்த விஷயத்தில் மவுனம் சாதிக்கிறான் என்றே சொல்ல வேண்டும். அனுமனை இராமன் சீதையிடம் அனுப்பும்போது ஏதெதோ உளறுகிறானே அதை மட்டும் நாம் நீக்கிவிட்டுப் பார்த்தால் அவற்றில் கம்பனின் இயல்பான பண்புகள் காணப்படவில்லை என்பது ஞாபகமிருக்கவேண்டும். கம்பனிடம் தான் சபைக்கு முன் கலைஞனாக வேண்டும் என்ற உத்தரவாத உணர்வு தெரிகிறது. இந்த உணர்வால் கலைக்கு அல்லது உத்திக்கு அதிகப்படியான முக்கியத்துவம் வந்து அதனால் கம்பனை வேண்டாத வழிகள் பலவற்றுக்கு இழுத்துச் செல்கிறது. அன்றைய நிலையில் இந்த வழிகள் தவிர்க்கக்கூடாதவையாக இருந்திருக்கலாம். கம்பனிடமிருந்து சபை எதிர்பார்த்த கலையும் பக்தியும். சபையில் அவன் துணிந்தெழுதின காமரசம் கொண்ட பல கட்டங்களை ரசிக்கக்கூடிய பல கவியுள்ளம் படைத்தவர்கள் இருந்திருக்க வேண்டும். தன் தேவன் தேவியரை அவன் எடுத்துக்காட்டிய விதத்தில் பக்தியுணர்வில் கரைந்து போகத்தயாராக பக்தர்களும் இருந்திருக்கவேண்டும். எழுத்துப்பிரவாகம் அவனுள் இருந்தது. அவன் நல்லகாலம் அதில்லாமல் ராமாயணம் அரங்கேற்றப்பட்ட வட்டத்தின் தேவைகளை அவன் திருப்தி செய்வதில் வெற்றி கண்டிருக்கமுடியாது. அந்த வட்டம் ஏற்கெனவே அறிந்திருந்த ராமாயணத்தை ஒட்டித்தன் காவியத்தை அமைப்பது கூட கம்பனின் வெற்றிக்கு அவசியமாக இருந்தது. அது போல காமப்பித்தர்களுக்கும் பக்தர்களுக்கும் கலைப்பித்தர்களுக்கும் கூடத்திருப்தி தேடிக்கொடுப்பது கம்பனின் இலக்கிய வெற்றிக்கு மிகமிக அவசியமானதாக இருந்தது. சபை விரும்பியதை கம்பன் செய்தான். கம்பனில் சொல்லாததும் எதுவும் இல்லை. அதனால்தான் Count down from Solomon. ஒரு தொகுதி முழுவதுமே கம்பராமாயண இலக்கிய ரசத்தை சொட்டச்சொட்ட சொல்லியிருக்கேன்.

தீராநதி: உங்களுக்கு விருது ஏதாவது கிடைத்திருக்கிறதா?

ஹெப்சிபா: தமிழ்லேர்ந்து ஆங்கிலத்துல எழுதினதுனால எனக்கு 1965-ல் ஒரு விருது கொடுத்தாங்க. நான் விருதை எதிர்பார்த்து ஒண்ணும் எழுதவில்லை.

தீராநதி: நீங்க எழுதினது பணத்துக்காகவா? உங்கள் ஆத்ம திருப்திக்காகவா?

ஹெப்சிபா: பணத்துக்காக எழுதவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. வீட்டுலயும் எனக்கு நல்ல வசதி. அதுக்குமேல பேராசிரியர் வேலை இருந்ததுனால் எனக்கு பணத்துக்கு பிரச்சனை ஒண்ணும் இல்லை. மொதல் நாவல் எழுதினேன். ஒரு கட்டத்துல நாவல் எழுதவேண்டாம்னு சொல்லி இலக்கியம் பக்கம் போனேன். கடைசியா தமிழ் இலக்கியம் பத்தி நான் எழுதிய கவுண்ட் டவுன் ஃபிரம் சாலமோன் நான்கு தொகுதிகளை நினைக்கிறப்ப எனக்கு பயம்தான் வருது. எழுதுறது எனக்கு கடவுள் தந்த வரம்னு நினைக்கேன். 9 வயசுல எனக்கு தேவதை பேனா தந்ததுமாதிரி வந்த கனவை அடிக்கடி நினைச்சுப்பார்ப்பேன். அதனால என்னோட பேனாவால கிடைக்கிற ஒரு காசுகூட என்னோட குடும்பத்துக்கு செலவிடக்கூடாதுங்கிறதுல நான் வைராக்கியமா இருக்கேன். என் எழுத்திலேர்ந்து கிடைக்கிற வருமானத்தை சர்ச்சுகளுக்கும், உதவி மையங்களுக்கும் செலவிடுறேன். புலிப்புனம் பகுதியில நானும் அவங்களும் (ஜேசுதாசன்) சேர்ந்து ஒரு ஆங்கிலப்பள்ளியைத் துவங்கினோம். அதுக்கு பேருகூட ஆங்கிலப்பேராசிரியரின் ஆங்கிலப்பள்ளின்னு வைச்சோம். அவர் காலத்துக்கப்புறம் தங்கக்கண் நினைவு ஆங்கிலப்பள்ளின்னு பேர் மாத்திட்டோம். இங்கே நாங்க குறைஞ்ச செலவில இந்தப் பகுதியில உள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலக்கல்வி வழங்கிட்டு இருக்கோம். என்னோட மருமகள்தான் இப்ப இந்தப் பள்ளியை நடத்திகிட்டு வர்றாங்க. இந்தப் பள்ளிக்கூடத்தை நடத்த போதிய வருமானம் இல்லாததனால் என்னோட எழுத்திலேர்ந்து கிடைக்கிற வருமானம்தான் பள்ளிக்கூடத்தை நடத்துறதுக்கு உதவியா இருக்கு.

தீராநதி: நீங்கள் எழுதிய கிராண்ட்மா டைரிக்கு திருவாங்கூர் இளவரசி முன்னுரை அளித்திருந்தார்களே..

ஹெப்சிபா: நான் கேரள பல்கலைக்கழக கல்லூரியில் வேலை பார்த்தபோது திருவாங்கூர் இளவரசி கவுரி லெஷ்மிபாய் எனது மாணவி. நான் ஆங்கிலத்தில் கவிதை வெளியிடுகிறேன் என்றதும் மனப்பூர்வமாக முன்வந்து முன்னுரை வழங்கினார்.

தீராநதி: நாவல் எப்படி இருக்கணும்னு சொல்ல வர்றீங்க..?

ஹெப்சிபா: எழுதுறது பெரிய விஷயம் இல்லை. ஆனால் எழுதறவங்களுக்கு ஒரு மேதைத்தன்மை இருக்கணும்கிறதுதான் என்னோட அபிப்பிராயம். இப்ப முட்டையை எடுத்துகிட்டோம்னா வெள்ளைக்கருதான் அதிகமா இருக்கு. ஆனால் மஞ்சள் கருதான் முக்கியம். முட்டையில இருக்கிற மஞ்சள்கரு போலத்தான் மேதைத்தன்மை. நாவலில் உண்மைத்தன்மை இருக்கணும். சமுதாயத்தைப்பத்திச் சொல்லியிருக்கணும். நாவலில் யதார்த்தம் வெளிப்படணும்.

தீராநதி: இப்ப உள்ள எழுத்தாளர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்..?

ஹெப்சிபா: அப்பவும் சரி, இப்பவும் சரி, எனக்கு அதிகமாக நாவல்கள் படிக்கிற வாய்ப்பு குறைவு. இந்தக் காலத்துல யாரு எழுதுறாங்கன்னு ஒண்ணுமே எனக்குத் தெரியாது.

தீராநதி: மேல்நாடு இலக்கியத்திலும் தமிழிலும் உங்களுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ஆங்கில எழுத்தாளர்களில் உங்களைக் கவர்ந்தவர்..?

ஹெப்சிபா: ஜேன் ஆஸ்டின். அவரோட எம்மா நாவல் ரொம்பப் பிடிக்கும். அது போல டால்ஸ்டாயின் எழுத்துக்களை ரொம்பப் பிடிக்கும்.

தீராநதி: தமிழில் வெளியான சிறந்த நாவல் என்று எதைச் சொல்வீர்கள்?

ஹெப்சிபா: முன்னாடி கல்கி நிறைய எழுதியிருந்தார். ஆனால் அதில் யதார்த்தமில்லை. தமிழ்ல நிறைய நாவல்கள் இருக்குது. நான் போதுமான அளவுக்கு தமிழ்நாவல் வாசிக்கவில்லை. அதனால் எது நல்ல நாவல்னு என்னால் சொல்ல முடியலை. கல்லூரியில் படிச்சிட்டிருந்த, வேலை பார்த்த காலத்துல உள்ள நாவல்களைத்தான் சிலவருசத்துக்கு முன்னாடி வரை படிச்சது. இப்ப ஒண்ணுமே படிக்க முடியவில்லை. அதனால் நாவல்களைப் படிக்காம சிறந்த நாவல் எதுன்னு என்னால சொல்ல முடியாது.

தீராநதி: உங்களுக்குனு ஆசைகள் ஏதாவது?

ஹெப்சிபா: இலக்கியத்தில் ஈடுபாடு உள்ள எங்கள் வீட்டில் எங்கள் பிள்ளைகளுக்கு இலக்கிய ஈடுபாடு இல்லாமல் போனது வருத்தம்தான். ”கம்பனைக் குறித்து ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என நினைத்திருந்தேன். இப்போது எனக்குள்ள உடல் நிலையில் என்னால் இது முடியாது. யாராவது மொழிபெயர்க்க வந்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன்!

(நிறைய கேள்விகள் கேட்டும் ஹெப்சிபாவிடமிருந்து உரிய பதில்களைப்பெற சிரமப்படவேண்டி வந்தது. நிறைய கேள்விகளுக்கு மவுனமே பதில். பேராசிரியர் ஏனோஸ் உதவியால் ஓரளவுக்கு அவரிடமிருந்து பதில்களைப் பெற முடிந்தது.)

நன்றி: தீராநதி 2008

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

Rathnavel Natarajan on January 7, 2012 at 7:02 AM said...

அருமையான நேர்காணல்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்