Feb 27, 2012

பள்ளியில் ஒரு நாய்க்குட்டி – சுந்தர ராமசாமி

(சு.ரா. தனது நோட்டுப் புத்தகத்தில் 22.05.2003 தேதியிட்டு எழுதிவைத்திருந்த கதையின் கரட்டு வடிவம்.)

இருள் விலகுகிற நேரம் ஒரே மாதிரி இருப்பதில்லை. எத்தனையோ வருடங்களாக இந்தப் பள்ளிக்கு அதிகாலை நடக்கப் போய்க்கொண்டிருக்கிறேன். இருந்தும் தரை வெளுக்கும் நேரத்தை என்னால் மனதில் மட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

அன்று காலை சரியான நேரம் என்று கணக்கிட்டவாறு நான் வெளியே வந்தேன்.sura1 இருள் அடர்த்தியாக இருப்பதாகத் தோன்றியது. அங்கும் இங்குமாக மனித ஜீவன்களின் நிழல்களின் அசைவாகத் தெரிந்தன. இன்னும் புழுதி கிளப்பும் வாகனங்களின் பாய்ச்சல் ஆரம்பமாகவில்லை. இப்போது அவை முடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும். நான் மெதுவாக நடக்கத் தொடங்கினேன். இரு சக்கர வண்டிகளில் ட்யூஷன் படிக்கப் போகிற அன்றாடம் பார்க்கக் கிடைக்கிற முகங்கள் நினைவில் வந்தன. பிள்ளையார் கோவில் தாண்டிப் பள்ளியின் கீழ் வாசலுக்குப் போகும் வழியில் நான் அன்றாடம் பார்ப்பவர்கள் எல்லோரையும் பார்த்துவிட முடியும்.

பள்ளிக்கூடத்திற்குள் நடமாட்டம் நிமிஷத்திற்கு நிமிஷம் கூடிக்கொண்டிருந்தது. முகங்கள் தெரியுமளவுக்கு வெளிச்சம் பரவத் தொடங்கிவிட்டது. அரைகுறையாகத் தெரியத்தொடங்கிவிட்டால் முகபாவங்கள்கூடத் துல்லியமாகத் தெரியத் தொடங்குவது வினாடிகளுக்குள் நிகழ்ந்துவிடும் காரியம்போல் இருக்கும்.

நான் இரண்டாவது சுற்று வந்துகொண்டிருக்கும் போதுதான் அந்த நாய்க்குட்டியின் அசைவைக் கவனித்தேன். கண் திறந்ததும் தள்ளாடியபடி நடமாடத் தொடங்கும் பருவம். பிறந்த குழந்தையைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் போய்விடும் தாய்களைப் பற்றி நாளிதழ்களில் வரும் செய்திகள் நினைவுக்குவந்தன. நாய்கள் அப்படிச் செய்யுமா? குட்டி போட்டபின் ஏதேனும் பிரச்னையில் இறந்துபோயிருக்க முடியுமா? அதற்கான சாத்தியம் குறைவு என்றுதான் தோன்றியது. பள்ளிக்கூடக் கட்டடம் நாய்க்குட்டியை மறைக்கும் இடத்திற்கு இதற்குள் நான் வந்திருந்தேன். பின் திரும்பிப் பார்த்தேன் சிமிண்டு ஸ்லாப் போட்டு நிரந்தரமாக மூடிப்போட்டிருந்த கிணற்றுக்குப் பக்கத்தில் செடிபோல் இருந்து வெகு சமீபத்தில் மரம்போல் தோன்றத் தொடங்கியிருந்த வேப்பமரத்தடியில் கால் ஊன்றத் தெரியாமலும் பார்வையால் நிதானிக்கத் தெரியாமலும் தலை தாழ்ந்து கிடக்க நாய்க்குட்டி ஊர்ந்துகொண்டிருந்தது. நடமாடுகிறவர்களின் பாதைக்குள் வராமல் சற்றுத் தள்ளி அது அசைந்துகொண்டிருந்தது. இல்லையென்றால் நடப்பவர்களின் பூட்சுக் காலில் மிதிபட்டுக்கூட அது இறந்துபோய்விடலாம். நடக்கிறவர்களின் மனநிலைகளும் நடை பயில்கிறவர்களின் மனோபாவங்களும் வித்தியாசமானவை என்று எப்போதும் எனக்குத் தோன்றியிருக்கிறது. நடைபயிலுகிறவன் சாதாரண மனிதன் அல்ல என்ற தோற்றம் உருவாகியிருக்கிறது. அவன் விறைப்புடன் இருக்கிறான். அவன் குறிக்கோளைச் சென்றடைவதில் விறைப்புடனும் வேகத்துடனும் இருக்கிறான். அவனுக்கு சுயப் பிரக்ஞை குறைவு. வேகம் கொள்ளும் அவன் உடல் வேகம் கொள்ள ஏதுவாக அவனுடைய மனதை மந்தப்படுத்த வேண்டியிருக்கிறது. பொறிகளின் கூர்மைகளை மட்டுப்படுத்தி உடல் சார்ந்த எல்லாவற்றையும் ஒருசேரத் தேக்கி நடைபயிலும் சாகசத்திற்கு அவன் உரமாக மாற்றுகிறான். இந்த நிலையில் அந்த நாய்க்குட்டிக்கு அதிக ஆபத்திருக்கிறது. அவனுடைய ஒவ்வொரு அடியும் வேகம் கொண்டதாக இருக்கும். எளிய உயிரைக் கொன்றுகொண்டு அதைப் பற்றிய உணர்வே இல்லாமல்போகிறவர்கள் அவர்கள். ஆனால் அவர்களிடமிருந்து நாய்க்குட்டிக்கு ஒரு பாதுகாப்பும் உண்டு. நடப்பவனைப் போல் அவர்கள் தங்கள் சுதந்திரத்திற்கு ஏற்ப நடப்பவர்கள் அல்ல. அவர்களுக்கு மனதில் வரையறுத்துக்கொள்ளப் பாதையுண்டு. அந்தப் பாதையின் அகலத்தைக்கூட அவர்கள் பயன்படுத்திக்கொள்ள விரும்பாமல் தங்கள் காலடிச்சுவடுகள் பட வேண்டிய இடத்தை வரையறுத்து, வரையறுத்த பாதை வழியாக மீண்டும் மீண்டும் நடந்து அந்தப் பாதை உறுதிப்பட்டு இப்போது அப்பாதையை மீறுவது அவர்களுக்குக் குற்ற உணர்ச்சி தரும் காரியமாகவே தோன்றியது. அதனால் அவர்களுடைய பாதைகளில் அபோதத்தினால் நாய்க்குட்டி போகாத வரையிலும் அதற்கு அதிகமான பாதுகாப்புண்டு. இது ஒரு முக்கியமான விஷயம்தான்.

நான் நடந்து முடிந்ததும் நாய்க்குட்டி தண்ணீர்த் தொட்டியின் பக்கம் வந்திருந்தது. அது ஒரு பாதுகாப்பான இடம்தான். தண்ணீர்த் தொட்டியை ஒட்டி இரண்டு வேப்ப மரங்கள் இருந்தன. அவை அகல நிழல் பரப்புபவை. வெள்ளைப் பூக்களையும் மஞ்சள் பழங்களையும் உதிர்ப்பவை. தண்ணீர்த் தொட்டியில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தால், எப்போது ஒரு பூ உதிரும் எப்போது ஒரு பழம் உதிரும் என்று கவனிக்கத் தொடங்கினால் நம் மனதிற்கு மிகுந்த பரபரப்பு ஏற்படும். ஏன் இந்தப் பரபரப்பு ஏற்படுகிறது என்பது வியப்பாக இருக்கும். அப்போது சட்டென்று ஒரு பூ உதிருகிறது. நம் மனக்கணக்கை உடைத்துக்கொண்டு ஒரு பழம் உதிருகிறது. அந்த இடம் பாதுகாப்பானதுதான். ஆனால் நாய்க்குட்டிக்குத் தாய்ப்பால் வேண்டும் அல்லது பாலாவது வேண்டும். இல்லாதவரையிலும் அது பசியில் துடித்து இறந்துபோகும். பசியினால், தாங்க முடியாத பசியினால் சிறுகச் சிறுக அதன் உயிர் விடைபெற்றுக் கொள்ளும் நிகழ்வுக்கு வெளி உலகில் ஏதேனும் மதிப்புண்டா? ஏதும் சலசலப்பை, அதிர்வை, துயரத்தின் ஒரு கணத்தை, செய்ய முடிகிற காரியங்களைக்கூடச் செய்ய முடியாமல் வாழ்ந்துவரும் அவலத்தை அதன் மரணம் ஒரு வினாடியேனும் ஸ்பரிசிக்குமா? அது உயிர்த் துடிப்புக்கொண்டிருக்கிறது. அதன் தாய் அல்லது தகப்பன் அல்லது இருவருமே லட்சணமானவர்களாக இருப்பதாலோ பார்க்க மிக அழகாக இருந்தது. அதன் உருவம், அந்த உருவம் சின்னஞ்சிறு தன்மை வெகுவாகக் கவருகிறது. அதன் தத்தளிப்பும் உலகமறியாத வெகுளித்தன்மையும் மடிந்து தொங்கும் காதுகளும் ஒளிபுகுந்து வெளிப்படும் கண்மணிகளும் நம்மைக் கவருகின்றன.

நான் தண்ணீர்த் தொட்டியில் சிறிது நேரம் உட்கார்ந்துகொண்டிருந்தேன். என் மீதிருக்கும் ஆங்கில, தமிழ் நாளிதழ்களின் பிரிக்கப்படாத இஸ்திரித் தேய்ப்புத் தரும் முறுமுறுப்பு என் நினைவில் படர்கிறது. அவற்றை அன்றாடம் எட்டரை மணிக்குள் படித்து முடித்திருக்க வேண்டும். அதன்பின், என்னைத் துரத்திப் பிடிக்கும் காலம் என்மீது மோதி என்னை வீழ்த்துவதற்கு இடம்தராது நான் பாய்ந்து பாய்ந்து செல்ல வேண்டும். இரவு அல்லது நடுநிசியில் உறக்கம் கண்ணைச் சுழற்ற, இதற்கு மேல் களைப்பைத் தாங்க இயலாது என்ற நிலையில் நான் என்னைக் காலத்திலிருந்து சுருட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. நாய்க் குட்டி அனாதை என்றாலும்கூட அது தட்டுத் தடுமாறுவதும் வெகுளி போல் பார்ப்பதும் எந்தப் பொருளும் இல்லாத அதன் அசைவும் எந்தக் காட்சியையேனும் அது புரிந்துகொள்ளும் என்றால் அந்த விநாடியேனும் அதன் கண்களில் விழும் நிழலைக்கூட அது இன்னும் கண்டடையவில்லை. அது சிறிய உருவம் கொண்டதென்றாலும் மொத்தமாக என் வாழ்க்கையின் போக்கையே குலைத்துவிடக்கூடியது. உண்மையில் அது பயங்கரமான உயிர்தான். எந்த அளவுக்கு அதன் நலனில் நான் பொறுப்பு எடுத்துக்கொள்கிறேனோ அந்த அளவு அது என் சீரான இயக்கத்தைக் குலைக்கக்கூடியது. அது மிக ஆபத்தான ஒரு ஜீவன் என்பதில் சந்தேகமில்லை.

என் மனைவியைப் பற்றி யோசித்தேன். நடைபயிலச் சென்றவர் ஒரு அழகான குட்டியிலும் குட்டியான ஒரு நாயை வலது கையில் ஏந்தி மார்போடு இணைத்துக் கொண்டு அதற்குப் பாதுகாப்பாகவும் பாதுகாப்பின் மீது நாம் கொள்ளும் சிரத்தை அதற்கு வலியாக, மூச்சுத்திணறலாக மாறாமலும் அதை எடுத்துச் செல்கிற போது நாயின் உயிர்ப்பு எடுத்துச் செல்கிறவர்மீது மெல்லிய இன்பத்தின் அலைகளை அவர் உடம்பில் பரவச்செய்துகொண்டிருக்கும். அனாதையான, பேராபத்தில் எந்தக் கணமும் சிக்கிக்கொள்ளக்கூடிய ஒரு ஜீவனை மரணத்தைப் பற்றி எதுவும் அறியாமல் மரணத்தால் ஒரே கணத்தில் நசுக்கப்படும் விபத்தின் விளிம்பில் ஊர்ந்துகொண்டிருப்பது அதற்குத் தெரியாது. இப்போது நாய்க்குட்டியை நான் கவனித்தபோது அதன் மந்தமான பார்வை பின்னகர்ந்து எதையோ தேடும் உணர்வு அதற்குத் தோன்றுவதுபோல் எனக்குப் பட்டது. அது ஒவ்வொரு வினாடியும் வளர்ந்துகொண்டிருக்கும். அது நின்று நிலைப்பதற்கான யோசனைகள் அதன் மூளையிலும் உடம்பிலும் படர்ந்துகொண்டிருக்கும். அதன் வளர்ச்சியை அதிகாலை வானத்திலிருந்து பூமியைப் பார்க்கத்தொடங்கும் சூரிய சக்தியுடன்தான் ஒப்பிட முடியும். இருளை விலக்க அச்சக்தி கொள்ளும் வினாடிக்கு வினாடி உணரவைக்கிற வளர்ச்சி வெயிலை ஊன்றிய பின் நமக்கு உறைப்பதில்லை.

என் மனைவியின் முகம் நினைவுக்குவந்தது. நான் என் நடையை முடித்துக்கொண்டு வீடு திரும்பும்போது அவள் வீட்டு வாசல்படிகளைக் கழுவிவிட்டுக்கொண்டிருப்பாள். இன்று அவள் முன்வாசலைச் சார்ந்த பரபரப்பு முடிந்து இதற்குள் அவள் சமையலறைக்குள் நுழைந்திருக்கக்கூடும். நாய்க்குட்டியை மார்பில் அணைத்துக்கொண்டு வருகிற கணவனைப் பார்த்ததுமே வியப்பும் சந்தோஷமும் கலகலப்பும் துள்ளலும் கொள்ளக்கூடியவர்கள் என்று எண்ணும் சாத்தியம் கொண்ட நண்பர்களின் முகங்களெல்லாம் என் நினைவில் வந்தன. ஒவ்வொருவருக்கும் வியப்பும் துள்ளலும் பரபரப்பும் கத்தலும் ஒவ்வொரு விதம்.

நாய்களைப் பற்றி எத்தனையோ தடவை நானும் என் மனைவியும் பேசிக்கொள்ள நேர்ந்திருக்கிறது. நாயைக் குழந்தைபோல் நேசிக்கிற, குழந்தையைவிட அதிகமாக நேசிக்கிற பெண்களைப் பற்றி அவள் அறியாதவளல்ல. குழந்தைகளுக்கு நாய்க்குட்டி போல் தங்களை மறக்கும் பரவசத்தைத் தரக்கூடிய ஜீவன் எதுவுமில்லை. இப்படிப் பார்க்கும் அது ஒரு விசேஷமான சிருஷ்டி. மனிதனுடன் அவை இணங்கியது மனிதன் பெற்றபேறு. இதெல்லாம் தெரிந்திருந்ததும் அவளுக்குச் சிறிது சங்கடத்தையே, வெளியே சொல்லி யாருடனும் பங்குகொள்ள முடியாத சிக்கலையே உருவாக்கியிருந்தது.

அதனால், நாய்கள் எனக்கும் பிடிக்கும் என்று அவ்வப்போது அவள் சொல்லிக்கொண்டு பிடிப்பதையும் பிடிக்காமல் இருப்பதையும் தனக்குத்தானே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.

நாய் உடம்பில் மேலே வந்து ஏறுவது தனக்குப் பிடிக்கவில்லை என்றும் தன்னால் சகித்துக்கொள்ள முடியாத கஷ்டம் என்றும் சொன்னாள்.

நாய் நம்மிடம் கொண்டிருக்கும் உறவை வெளிப்படுத்தக்கூட நாம்தான் அதற்குக் கற்றுக்கொடுக்கிறோம். இன்னபடிதான் செய்வேன் என்று அது சொல்வதில்லை.

இந்த விஷயம் அவளுக்கும் தெரிந்தது. அவளுடைய சிநேகிதி கறாச்சிப் பசுவின் கற்றுக்குட்டிபோல் ஒரு நாயை வைத்துக்கொண்டிருந்தாள். ஒரு அடுக்குமாடிக் கட்டடத்தில் அந்தக் குடும்பம் குடியிருந்தது. அவளுடைய கணவருக்கும் அவளுக்கும் ஒரே பையன். முன்பின் தெரியாதவர்கள் விசாரித்தால் இரண்டு குழந்தைகள் என்பார்கள். அப்படிச் சொல்வதற்கான தகுதி அவர்களுக்கு இருந்தது. ஸ்கவுட்டை குழந்தை மாதிரிதான் பார்த்துக்கொண்டிருப்பார்கள். டாக்டர் ராமநாதன் வெளியே புறப்பட்டால் அது கார் சாவியை எடுத்துக்கொண்டுபோய்க் கொடுக்கும். செருப்பைத் தூக்கிக்கொண்டுபோய்க் கொடுக்கும். தன்னையும் அழைத்துப் போக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும். லிஃப்ட்டில் கூடவே இறங்கிப்போகும். ஆனால் அவர் டை கட்டிக்கொண்டு புறப்பட்டால் அது அவர் பக்கமே வராது. தொலைவில் படுத்து அவரையே பார்த்துக்கொண்டிருக்கும். அதற்கு அவர்கள் வீட்டில் சைவ உணவுதான்.

இவர்களுடன் கமலாவுக்குப் பழக்கம் ஏற்பட்டபின் நாய்களை மனதிற்குள் நேசிக்கும் குணம் அவளுக்கு வந்தது. எவ்வளவு அற்புதமான ஜீவன் என்று சொன்னாள். ஆனால் அவளால் தீர்த்துக்கொள்ள முடியாத பிரச்சினையும் இருந்தது. நாய்கள் தன்னை முகர்ந்து பார்ப்பது தன்னால் சகித்துக்கொள்ள முடிவதில்லை என்றாள்.

அருவருப்பாய் இருக்கிறதா என்று கேட்டேன். அதன் மூக்கில் இருக்கும் ஈரம் என்றாள். அந்த ஈரம்தான் அவளுக்குப் பிடிக்கவில்லை. ராமநாதனிடம் சொன்னேன். முகராமல் இருக்க நாய்க்குக் கற்றுத்தர முடியாது. அப்படியே கற்றுத்தந்தாலும் அது இறந்துபோய்விடும். தன்னைப் பாதுகாத்துக்கொள்ள அதற்குத் தெரியாமல் போய்விடும். அத்துடன் மூக்கில் துளிர்க்கும் ஈரத்தை வற்றவைக்க முடியாது. கூடவும் கூடாது என்றார்.

அப்பேர்ப்பட்ட கொடுமையையெல்லாம் நான் செய்யச் சொல்லவில்லை என்றாள் அவள்.

நாய்க்குட்டி கால்பந்தாட்ட மைதானத்தில் இறங்கியிருந்தது. மைதானத்தில் இறங்கக் கட்டப்பட்டிருந்த படிகளைப் பார்த்துவிட்டு அது நகர்ந்துவிட்டது. தனக்கு என்ன என்ன தெரியும், என்ன தெரியாது என்பதைப் பற்றிய உணர்வு அதற்கு இருக்கிறதுபோலிருக்கிறது. அது படியைத் தவிர்த்துவிட்டுத் தென்பக்கம் சென்றது. அது ஒரு சிறு சரிவு. மெல்ல வழியும் சரிவு. நாய்க் குட்டிக்கு அது சரிவு என்ற பிரக்ஞையில்லை. அது ஒரு நிமிஷம்கூட ஓய்வெடுத்துக்கொள்ளாது அசைந்துகொண்டே இருந்தது. அதன் குறிக்கோள் என்ன என்பதோ அதன் தேடல் எதற்கு என்பதோ இந்த முடுக்கங்கள் அதன் உடலின் எந்தப் பகுதியிலிருந்து அதிர்வுகளாக வெளிப்படுகின்றன என்பதையும் என்னால் நிதானிக்க முடியாமல் இருந்தது. உண்மையில் பெரும் ஆபத்தில் அது இருக்கிறது. எத்தனை விதமான சோதனைகள் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. முன்கூட்டிப் பாதுகாப்புத் தேடிக்கொள்வதற்காக நாம் விபத்துகளைப் பலவிதத்தில் கற்பனைசெய்து பார்த்தாலும் நாம் கற்பனைசெய்து பார்க்காத ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறோம். தன் இருப்பு நிராயுதபாணியான அபிமன்யுவின் நிலை என்பது அதற்குத் தெரியாது. ஒருவர் என் பக்கத்தில் வந்து நின்றார். என்னுடைய கவனத்தால் கவரப்பட்டவர் அவர். என் பார்வை வழியாக நாய்க்குட்டி நகரும் இடம் அவருக்குத் தெரிந்துவிட்டது. தாயில்லையோ என்று கேட்டார். மிகப் பிரதானமான கேள்விக்கு அவர் நேரடியாக வந்திருந்தார். இவர்கள்மீது வியப்பும் எரிச்சலும் எனக்கு இருந்தன. நான் அதிக அக்கறை தந்து பதில் சொல்ல வேண்டாமென்று யோசித்துக்கொண்டிருந்தபோது நாலாபக்கமும் தலை அதிகம் அசையாமல் சுற்றிப்பார்த்து எங்கும் விரிந்துகிடந்த செம்மண் பரப்பின் வெறுமையை நிதானித்துக்கொண்டு, கழுகு, கருடன் தூக்கிட்டுப் போயிரும் என்றார். உணர்ச்சியின் வாசனைகூட இல்லாமல் இதைச் சொன்னார்.

கீழிறங்கி வந்துகொண்டிருந்த சரிவு மேடுபள்ளமில்லாமல் கால்பந்தாட்ட மைதானத்தில் கரைந்துகொண்டிருந்தது. தெற்கே பார்த்துப் போய்க்கொண்டிருந்த நாய்க்குட்டி தன்னுணர்வு இல்லாமல் வலது புறம் திரும்பி மைதானத்திற்குள் இறங்கிச் சென்றது. இப்போது அதன் தள்ளாட்டம் குறைந்திருந்தது. இவ்வளவு தூரம் நடந்ததிலேயே பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு விட்டதா? அரை மணி நேரத்தில் தன் தத்தளிப்பையும் தள்ளாட்டத்தையும் அதனால் விரட்டியடிக்க முடிந்துவிட்டதா?

பள்ளியின் முன் ஒரு ஜீப் வந்தது. அதிலிருந்து போலீஸ் உயர் அதிகாரிகள் இறங்கினார்கள். நான் என் கடிகாரத்தைப் பார்த்தேன். ஏழு மணிக்கு ஐந்தாறு நிமிஷங்கள் இருந்தன. இரு சக்கர வாகனங்களில் வினாடிகள் இடைவிட்டுப் பெண் போலீஸாரும் ஆண் போலீஸ§ம் பள்ளிக் கட்டடத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தனர். இரண்டு சாரிகளிலும் மரங்கள் நின்றுகொண்டிருந்தன. ஒரு சாரியில் பெண் போலீஸார் தங்கள் வாகனங்களையும் எதிர்ச்சாரியில் ஆண் போலீஸார் தங்கள் வாகனங்களையும் நிறுத்திக்கொண்டிருந்தனர். ஏழு மணிக்குள் காவலாளிகள் தங்கள் வரிசையில் நின்று உத்தரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள். முதல் உத்தரவு வெளிப்படும் நிமிடத்திற்காகச் செவிகள் கூர்மைப்படுத்தப்பட்டுக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது.

நாய்க்குட்டி நேராக அந்த இடத்தைப் பார்க்கப் போயிற்று. இப்போது அதன் நகர்வில் அர்த்தமும் பொருளும் வெளிப்பட்டன. மனித வாடை அதைக் கவருகிறது என்று நினைத்துக்கொண்டேன். பூமியின் கெட்டித்தன்மையைச் சோதிப்பது போன்ற பூட்ஸ் கால்களின் முட்டல்களில் வெளிப்படும் சத்தங்களோ போலீஸ் அதிகாரியின் உரத்த குரல்களில் வெளிப்படும் கூப்பாடுகளோ அது பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.

நடக்கவந்தவர்கள் எல்லோரும் பிரிந்துபோயிருந்தனர். பிந்தி நடக்க வந்தவர்கள் காவலாளிகளின் மேலேபடுகிற காற்று தம்மீது படிய வேண்டாம் என்பதுபோல் விலகி, பள்ளிக்கூடக் கட்டடத்தைச் சுற்றி வந்துகொண்டிருந்தார்கள். மிகப் பெரிய மைதானத்தின் மையத்தில் நீள் சதுரத்தில் போலீஸ் அணிவகுப்பு. அவர்களின் பின்பக்கத்தை நோக்கி விரைந்துகொண்டிருக்கும் நாய்க்குட்டி. தண்ணீர்த் தொட்டியில் அமர்ந்தபடியே நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.

நாய்க்குட்டி மிக மோசமான ஆபத்தை நோக்கி விரைவதுபோல் பட்டது. காவலாளிகள் பற்றி எனக்குக் கொஞ்சமும் நல்லெண்ணமில்லை. அவர்களைக் கடின சித்தம் கொண்டவர்கள் என்றும் சாதகமான சூழல் அமைந்தால் எந்தக் குற்றத்தையும் செய்வார்கள் என்பதும்தான் என் எண்ணமாக இருந்தது. சமூக அக்கறை கொண்ட என் நண்பர்களும் அப்படியேதான் கருதினார்கள். ஆனால் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் -அந்தச் சந்தர்ப்பம் எப்பேர்ப்பட்டதாக இருக்கும் என்பது பற்றி என்னால் யோசிக்க முடியவில்லையென்றாலும் -அவர்கள் கண்ணியமாகவும் கருணையுடனும் நடந்துகொள்வார்கள் என்பது என் மனதில் தோன்றிக்கொண்டி ருந்தது. இந்த எண்ணத்தை நான் என் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவில்லை. நான் சொல்வது உண்மையாக இருக்கக்கூடுமென்று அவர்களுக்குத் தோன்றினாலும் என் கூற்றை மறுத்து என்மீது முத்திரை குத்துவதுபோல் ஏதாவது சொல்வார்கள் என்று நான் பயந்தேன். சுதந்திரத்தின் பரிபூர்ண வெளி என்று நாம் கற்பனை செய்துகொள்கிற இடங்களில்கூட மௌனமான ஒடுக்குமுறைகள் இருக்கின்றன.

காவலாளிகளுக்கும் குட்டிநாய்க்குமான சந்திப்பும் அதைத் தொடர்ந்த உறவும் காவலாளிகளைப் பற்றி நான் கருதும் ஆபூர்வ சந்தர்ப்பம் சார்ந்தே இருக்குமென்று எனக்குத் தோன்றியதால் எந்தப் பதற்றமும் இல்லாமல் இருந்தேன்.

காவலர்களின் கவனமும் கவனமின்மையும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. உத்தரவு பிறப்பிப்பவர்களும் அதை நொடிக்குள் காதில் வாங்கித் தன் உடலில் அமைந்திருந்த ஏதோ ஒரு பொறியைத் தட்டி அணி வகுப்பு அசைவுகளையும் சீரான, ஒன்றில் மற்றொன்று கலந்துவிடுகிற, எல்லாம் ஒன்றாகிவிடுகிற பூட்சின் ஓசையையும் நொடிகளுக்குள் உருவாக்குவதில் அவர்கள் மிகவும் கவனமாக இருந்தார்கள். இரண்டு பூட்சுக் காலின் வரிசைக்குள் நாய்க்குட்டி நிதானமாகச் சென்றுகொண்டிருந்தது. இதை ஒரு கதை என்று கருதுகிறவர்கள் தங்களுடைய தர்க்க அறிவு சார்ந்து அது எப்படிச் சாத்தியம் என்று கேட்பார்கள். படைப்பின் நுட்பங்கள் தமக்கும் கைவசப்பட்டு நிற்கின்றன என்பதில் அவர்களுக்கு உற்சாகம் இருக்கும். ஆனால் இது கதை அல்ல. உண்மையில் நடந்த சம்பவம். பார்க்க நேர்ந்ததை அப்படியே எழுதுகிறேன். நாய்க்குட்டி பூட்சுகளின் வரிசையில் நகர்ந்து முன்பக்கப் போலீஸ் அதிகாரியைப் பார்த்துப் போய்க்கொண்டிருந்தது.

நான் வீட்டுக்குப் புறப்பட்ட பாவனை யாருக்காக மேற்கொள்கிறேன் என்பது தெரியாமல் படியிறங்கி வந்து கால்பந்தாட்ட மைதானத்தின் தெற்குச் சுவரையட்டி 'கோல்' கம்பங்களைத் தாண்டி அடுத்த மைதானத்திற்கு இறங்கும் படிக்கட்டில் மூன்று படிகள் இறங்கி, அகலப் படிகளின் ஓரம் சமச்சீராக இருந்த சிமிண்டுத் திண்ணையில் உட்கார்ந்தேன். அப்போது நாய்க்குட்டி படியோரம் வந்திருந்தது. அந்த நிமிஷம் வரையிலும் எந்தக் காவலரும் கவனித்திருக்கவில்லை. எவர் முகத்திலும் ஆச்சரியமோ புன்னகையோ தோன்றவில்லை. படியை ஒட்டி நாய்க்குட்டி இருந்தது. அதனால் முதல் படியை ஏற முடியாது. இன்னும் சிறு நேரத்தில் அது மிகவும் சோர்ந்துவிடும். அன்று காலை அதன் தாய் அதனுடன் இருந்ததா? பிரசவம் எங்கு நடந்தது, எத்தனைக் குட்டிகள்? இது மட்டும் எப்படித் தனிமைப்பட்டு ஒதுங்க முடியும். தாய் நாய் இனிமேல் வரவே வராதா? அப்படியானால் இதன் கதி என்ன? இப்போது நான் என்ன செய்ய வேண்டும். எல்லாப் பிரச்னைகளும் காலத்தின் நீட்சியில் முடிந்துபோகின்றன. ஒரு சிலவற்றுக்குத் தீர்வு, வேறு சிலவற்றிற்கு முடிவு. எது இந்தக் குட்டியின் மீது கவியப் போகிறது?

நாலைந்து பையன்கள் வெளிச் சுவரைத் தாண்டிப் பள்ளிக்குள் நுழைந்துகொண்டிருந்தார்கள். ஏழாவது வகுப்பு அல்லது எட்டாவது வகுப்புப் படிக்கும் பையன்கள். குளித்துவிட்டுத் தலையை எண்ணெய் போட்டுச் சீவி நெற்றியில் சந்தனப் பொட்டுடன் அம்சமாக வந்துகொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரி வெள்ளை அரைக்கைச் சட்டை. காக்கி அரை நிஜார். முதுகில் தொங்கும் பை.

நான்கு பேரும் நின்று நாயைப் பார்த்தார்கள். அவர்களிடம் மிகுந்த சந்தோஷம் வெளிப்பட்டது. சிரிப்பில் உதடுகள் பல் தெரிய விரிந்திருந்தன. மூன்று பையன்கள் தலையைத் திருப்பிப் பார்த்தபடியே நடந்து சென்றுவிட்டார்கள். ஒரே ஒரு பையன் மட்டும் நின்றுகொண்டிருந்தான். நாய்மீது தோழமை உணர்வு கொண்டவன் மட்டுமல்ல, நாய்களைத் தொட்டு எடுத்துக் குளிப்பாட்டி உணவு தந்தவனாகத்தான் அவன் இருக்க வேண்டும்.

நான் விசாரித்தபோது அவன் தன் பெயரைச் சொன்னான். வீடு கல்படித் தெருவில் என்றான். அதன் தாய் எங்கு என்றோ, உடன்பிறப்புகளிடமிருந்து தனியாக இது இங்கு வந்து மாட்டிக்கொண்டது எப்படியென்றோ அவன் யோசிப்பது மாதிரி தெரியவில்லை.

வீட்டுக்குப் போய் ஒரு பையை எடுத்துக்கிட்டுவாறேன் என்றான். புரியாத பாவனையில் நான் அவன் முகத்தைப் பார்த்தபோது, கொண்டுபோக என்றான். நான், எதுவும் சாப்பிட்டிருக்கும் என்று தோன்றவில்லை என்று சொன்னேன். ஒரு பாட்டிலில் பாலும் கொண்டு வருகிறேன் என்றான். போய்விட்டு வர வேண்டும் என்றேன்.

ஒரு நொடியில் என்று சொல்லிவிட்டுக் குத்துக்கால் போட்டு உட்கார்ந்துகொண்டான். அவனுக்கு நாயை லாவகமாகத் தூக்கத் தெரிந்தது. அவன் கைகளில் இருந்த இதம் நாய்க்குட்டிக்கு ஆறுதலைத் தருவதுபோல் தோன்றியது. நாய்க்குட்டி தன் சிறிய தலையை மேலே பார்க்க ஆகாசத்தையோ, அல்லது மரங்களின் கிளைகளையோ பார்ப்பதுபோல வைத்துக்கொண்டிருந்தது. முகம் அழகாக இருந்தது. கண்மணிகளில் ஒளிதோய்ந்த ஈரத்தின் பிரகாசம் தெரிந்தது. மாணவன் தனது வலது கையால் அதன் நெற்றியிலிருந்து வால் மட்டும் கீழ்நோக்கித் தடவித் தந்துகொண்டிருந்தான். யாருக்கும் தெரியாமல் கொண்டுபோக வேண்டும் என்றான். நாய்க்குட்டியை ஒரு ஓரத்தில் விட்டான்.

என்னைப் பார்த்தான். அவன் மனதில் ஓடும் கேள்வி எனக்குத் தெரிந்தது. நான் பதில் சொல்லவில்லை. என்னிடம் கேட்கத் தயங்கிய கேள்வியுடன் அவன் படியிறங்கி ஓடினான்.

நான் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். அன்று காலை நான் முடிக்க வேண்டியிருந்த வேலைகளைப் பற்றி யோசித்தேன். தலைக்கு மேல் இருந்தன. சற்றுத் தள்ளிப்போட்டு வேலையைத் தொடங்கினால் எல்லாவற்றையும் எப்படி முடிக்கலாம் என்று யோசித்தேன்.

உங்களைத் தேடிட்டுத்தான் வந்தேன்; அம்மா அனுப்பினாங்க என்ற பேச்சுக் கேட்கவும் மரத்தடியைப் பார்த்தேன். தங்கம் நின்றுகொண்டிருந்தாள். சற்றுப் பிந்தி வருவேன் என்று சொல்லு என்றேன்.

உங்களுக்கு ஒரு போன் வந்திட்டிருக்காம். அவசரமாம் என்றாள்.

நான் படிக்கட்டிலிருந்து இறங்கித் தெருவுக்கு வந்தேன். வெயில் என் நெற்றியைத் தாக்கி என் கண்களைக் கூசவைத்தது.

மறுநாள் நான் நடக்கச் சென்றபோது பள்ளியின் வாசலில் சில அடிகள் தள்ளி அந்த நாய்க்குட்டி இறந்து கிடப்பதைப் பார்த்தேன். அன்று அந்தப் பையனைச் சந்திக்க வேண்டாம் என்று தோன்றியது.

*****

நன்றி: காலச்சுவடு இதழ் 105, செப்டம்பர் 2008

 பள்ளியில் ஒரு நாய்க்குட்டி – சிறுகதைத் தொகுப்பு

சுந்தர ராமசாமி, தனது நாட்குறிப்பேட்டில் தன் கைப்பட 14832294_palliyil-oru-copyஎழுதிவைத்திருந்த, முழுமைபெற்ற, பெறாத சிறுகதைகள் மற்றும் நெடுங்கதைகளின் கரட்டு வடிவங்களின் தொகுப்பு இந்நூல்.

50ஆண்டுகளுக்கு மேல் எழுதிவந்த சுந்தர ராமசாமியின் பன்முக எழுத்துப்  பயணத்தின்  முக்கியமான பண்புகள் அனைத்தும் அவரது இறுதி ஆண்டுகளில் எழுதப்பட்ட இந்தக் கதைகளிலும் வலுவாக வெளிப்படுகின்றன.

இந்தக் கதைகளையும் இவை எழுதப்பட்ட காலகட்டத்தில் பிரசுரமான கதைகளையும் பார்க்கும்போது அவர் தனது கடைசி ஐந்து ஆண்டுகளில் மிகவும் தீவிரமாகப் படைப்பாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பது புலனாகிறது. முதுமையையும் நோய்களையும் அவதூறப் பிரச்சாரங்களையும் எதிர்த்து ஒரு படைப்பாளி மேற்கொண்ட போராட்டத்தின் இறுதித் தடயமே இந்தத் தொகுப்பு.

சிறுகதைத் தொகுப்பை வாங்க இங்கே செல்லவும்

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் on February 28, 2012 at 8:23 PM said...

சிறப்பான பதிவு !

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்