Jun 23, 2012

பிரம்மராஜன் கவிதைகள்-நகுலன்

அப்படித்தான் தோன்றுகிறது: பழகிப் பழகி நைந்துபோன விஷயங்கள் சிந்தையில் கவ்விப் பிடிப்பதில்லை. பூட்டிய பூட்டைப் பூட்டப் பட்டிருக்கிறதா என்று யந்திர ரீதியில் இழுத்துப் பார்ப்பது போல் பழக்கங்களின் பிடியிலிருந்து மாறுகையில்தான் சிந்தனை தீவிரமாக இயங்குகிறது. பிரக்ஞை சிலிர்க்கிறது; ஒரு புதிய மரபின் தொடக்கம்; பிறகு மீண்டும் பழைய கதை; பூட்டிய பூட்டைப் பூட்டப் பட்டிருக்கிறதா என்று இழுத்துப் பார்ப்பதுபோல். ஆனால் பழக்கத்தின் பிடிப்பை உதறி ஒரு புது உலகை – அப்படி முழுவதும் புதிதில்லை – படைப்பாளி சிருஷ்டிக்கையில், பழக்கத்தின் வேகத்தில் nagulan-by-viswamithran-1 மரத்துப்போன பிரக்ஞை புதியதையும் , அது நைந்துபோன பாஷையில்லை என்ற அதே காரணத்தின் அதை அசட்டை செய்கிறது!

ஞானக்கூத்தன் சொல்வது மாதிரி பிரம்மராஜன் கவிதை “ஒரு வித்தியாசமான குரல்” என்பது மாத்திரமில்லை; அது ஒரு சாசுவதமான குரல் என்பதிலும் ஐயமில்லை. அதன் தன்மைகளை பின்வருமாறு குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். அது படிம வியாபகமானது; இங்கு படிமம் நுண்மையாகக் கட்டுக் கோப்புடன் இணைகிறது; இறுக்கமான நடை; அவரே சொல்கிற மாதிரி அறிவுலகின் இணைப்பிருந்தாலும் அறிவு உணர்வாக மாறுகிறது. எனவே கவிதை பிறக்கிறது. அவர் Co-authorship என்பதையும் புறக்கணிப்பதற்கில்லை. ஏன் என்றால் ஒரு கவிஞன் உலகம் அவன் அனுபவ உலகம்; இந்த அனுபவ உலகம் வாசகனுடைய அனுபவ உலகுடன் இணைகையில்தான் உண்மையான ரஸனை சூடு பிடிக்கிறது. இது வாசகனுக்கு அவனுக்குரிய மதிப்பைத் தருகிறது.

கவிதையில் வார்த்தைகள் ஒன்றிற்கு மேற்பட்ட “அர்த்தங்கள்” உடையவை. ஐம்புலன்களால் கிரகிக்கப்பட்டு, அனுபவச் சூழல்களால் வளர்ச்சியுற்று, சப்தமும் சித்திரமுமாக உள்வியாபகமுற்று அனுபவம் வார்த்தையின் மூலம் அதீத எல்லைகளை நோக்கி நகர்கிறது. சுருக்கமாகக் கவிதையில் வார்த்தையின் உள்வியாபகம் எல்லையற்ற பரிமாணம் உடையது. பிரம்மராஜன் வார்த்தையில் “அரூபமான வார்த்தைகள் செயல் இழந்து போகும் பொழுது அந்த இடத்தை நிறைவு செய்யப் படிமங்களால் மட்டுமே முடியும்.” மீண்டும், “படிமங்கள் இயக்கம் மிகுந்தவை” எங்கு ”படிமம் இயக்கமற்றதாக இருப்பின் அதைக் கொண்டிருக்கும் கவிதை செயல்வீச்சு அற்றதாகவே இருக்கும்”. ஆங்கிலத்தில் கவிதை எழுதும் ஒரு இந்தியக் கவிஞர் சொன்னதாகக் கேள்வி: சில இந்தியக் கவிஞர்களின் படைப்புகளை நோக்குகையில் அவர்கள் ஐம்புலன்கள் அற்றவர்கள் என்று சந்தேகம் தோன்றுகிறது” என்று. அது எப்படியாவது போகட்டும்.

எதிர் கொள்ளல்” என்று ஒரு கவிதை. பாரதி கவிதையில் இருந்து ஒரு வரி. “வீணையடி நீயெனக்கு; மேவும் விரல் நானுக்கு”. இங்கு ரஸனை என்பது நேர்கோடாக இணைக் குறியீடாகச் செல்கிறது. ஆனால் பிரம்மராஜன் கவிதை இந்த அனுபவத்தை அதன் நானாவிதமான, ஏன், தாறுமாறான தன்மைகளுடன் காட்டுகிறது. ஆமாம், முதல்வரியே விதவிதமான விபரீதமான சப்த அலைகளை எழுப்புகிறது.

“அரங்கத்தில் அடிக்கடி இருள்”. இந்தக் கவிதையில் கலைஞனுக்கும் கலைக்கும், கலைக்கும் அதை எதிர்கொள்பவர்களுக்கும் உள்ள உறவுகளைப் பற்றிப் பேசப்படுகிறது. இந்த அடிப்படையில்; இருள், வானவில், கழுதைகள், அன்னை மடியில் பால் சுரப்பது, வீணை, கங்கை நீர், தகரத்தின் பிய்ந்த குரல்கள், மனதின் சுவர்கள், தளிர், உதயம் என்ற படிம வரிசைகள் இணைகின்றன. மௌனமாகப் படிப்பவர்களுக்கு நிறையவே கிடைக்கும்.

தொடர்கிறேன். தொடரும் பொழுதே இப்படியெல்லாம் தெளிவு படுத்த வேணுமா என்று என்னையே  நான் கேட்டுக் கொள்கிறேன். புதுக் குரலின் பரிணாமத்தில் ஈடுபாடுள்ளவன் bramarajanஎன்பதனாலும், அந்தக் குரல் அதன் இயல்பில் வெளி உலகிலும் தொடர்ந்து ஒலிக்க ஒரு சூழலைச் சிருஷ்டி செய்ய வேண்டியிருப்பதும் ஒரு அவசியம் என்ற நோக்கத்திலும் என்னைத் திருப்திப் படுத்திக் கொள்கிறேன். “அறிந்த நிரந்தரம்” என்ற கவிதை, வாழ்க்கையை மீறியது ஒன்றுமில்லை என்ற ஒரு தத்துவச் சரடு (இந்தத் தத்துவத்தின் மீது உங்களுக்கும் எனக்கும் ஒரு பிடிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது இல்லையே இங்கு விஷயம்) இதில் வரும் படிம வரிசை :-

கருப்புச் சூரியன் X ரேடியம் முட்கள்
நகராத காலம் X ஊரும் நத்தை
காகம் X குழந்தையின் ரோஜாப் பாதங்கள்
சாமச்சேவலின் கூவல் = ஒரு ஸிம்பனி

வாழ்க்கையில் எந்த பிரச்னைக்கும் ஒரு முடிவு உண்டு என்ற மையம். இந்தக் கவிதையில் ஒரு படிம ப்ரயோகத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.

மூன்று வரிகள் :_

அரைத் தூக்கத்தில் விழித்த காகம்
உறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக்
கேட்காமல் மறதியில் கரைகிறது.

இங்குச் சில வாசகர்களேனும் “விழித்த காகம்… ரோஜாப் பாதங்களை கேட்காமல் மறதியில் கரைகிறது” என்ற அடிக்குறி இடப்பட்ட தொடரைக் கண்டு “புரியவில்லை” என்று சொல்லலாம். இதற்கு விஞ்ஞான பூர்வமான விளக்கம் தரலாம்; ஆனால் மீண்டும் அது இல்லையே இங்கே விஷயம்! நவீன கதையில் ஒரு புலனால் உணர்வதை இன்னொரு புலனுக்கு இணைப்பது என்பது ஒரு உத்தியாகக் கையாளபடுகிறது. மாத்திரமில்லை, இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமென்றால் ரௌத்ரம் என்ற அனுபவம் வரும்போது ரத்தச் சிவப்பை நினைவு கூர்கிறோமென்றால், ரோஜாவின் இளஞ் சிவப்பில் இனிமையான மெல்லிய இசையின் நாதத்தைக் கேட்கிறோமென்று சொல்லலாம்.

இளம் இரவில் இறந்தவர்கள்” என்ற இன்னொரு கவிதை இந்த வார்த்தைச் சேர்க்கையே, பிரம்மராஜன் கூறுகிறது மாதிரி, ஒரு கலாபூர்வமான விளைவை உண்டு பண்ணுகிறது. முக்கியமாக “இளம்” என்ற வார்த்தை. நவீன இலக்கியத்தில் வாழ்க்கை சிக்கல் நிரம்பியதாக இருப்பதால் நமது கவிதை படிம மயமாகி விடுகிறது. இந்தக் கவிதையில் படிம ப்ரயோகத்தைப் பற்றிச் சற்று விரிவாகவே எழுதலாமென்று நினைக்கிறேன். பிணவாடை தொங்கும், பூக்கும்-காளான் பூக்கும் என்பதால் இதயச் சுவர்கள் பிறகு குயில்X சில் வண்டு . இதைத் தொடர்ந்து காகை மரங்கள் X மூளைச் சாலைகள் (தொகுதியை ஒரு முறை முழுவதும் படித்தவர்களுக்கு மிஷின்களுக்குப் பின்னாலும் மனிதர்கள் என்ற கவிதை ஞாபகம் வரும்)

லாரி எஞ்ஜின்கள் ஸிம்பனி முற்றுப் பெறும்.  விஞ்ஞானம் வியாபார உலகை நோக்கி நகரும் புகைப்பலம். இதற்கு எதிராக இயற்கையின் உயிர்த்தெழல்- … இறந்த இவைகள் கிசுகிசுக்கும். இதை நவீன விமர்சன பாஷையில் குறிப்பிடுவதென்றால் எழுத்துக்கொண்டு ஜனனம் X மரணம் என்ற எதிர்மறைகளை இசைக்கும் வித்தை. மறுபடியும் காடு கருக, உடல் நாற்றம் வீச, ஒயற்கை உயிர்த்தெழுவது போல் படிமம் மூலம் நூலறுந்த பட்டம் மூங்கையில் படபடப்பது யோனியில் நீந்தும் விந்து என்பதால் அது போல்-இது என்ற ஒத்திசைப்பு- மீண்டும் வார்த்தை மூலம் ஒரு ஒத்திசைப்பு-முரண்பாடு இணைகிறது என்று கடைசியாக உச்சம் – நாளைக்கும் காற்று வரும். கவிதையில் அர்த்தம் எலியட் பாஷையில் சொல்வதென்றால் வாசகனுக்குப் போடும் இறைச்சித் துண்டு! அனுபவத்தின் ஐக்கியத்தைச் சுட்டிக் காட்டுகிறது. இதைப் படிமங்கள் இயங்குவதால் வெவ்வேறு உலகங்களை மாறுபட்ட நிலைகளை ஒற்றுமை அடையச் செய்வது மாறாக நிற்கும் அனுபவ உலகங்களிலிருந்து படிமங்களை இணைப்பதால் பிரம்மராஜன் கூறியமாதிரி படிமம் தனியாகி நிற்காமல் ஒரு சுழற்சி மூலம் கட்டமைப்பில் பாய்கிறது. இன்னும் ஒரு கவிதையை விஸ்தரித்து விட்டு மேலே போகின்றேன். கடைசிக் கவிதை, இதைப் பற்றி நான் அதிகமாக எழுத விரும்பவில்லை. படிமங்களை ஊன்றிப் படிப்பவர்களுக்கு -

பச்சைப் புதரில்
வெறும் விரல் பிடுங்கிய மூங்கில் கிளை ஒன்று

என்றதில் “வெறும் விரல்” என்பது எந்தத் தோல்வியும் அதன் இயல்பை மீறி சாசுவத்தை நோக்கி நகர்கிறது என்று.

இந்தக் கவிதைகளைப் படிப்பவர்கள் படிமங்களைக் கவனமாகப் படிப்பவர்களுக்குப் “புரியாமல் இருக்கிறது” என்ற பிரமை நீங்கி விடும். மேலும் கவிதையில் வார்த்தை “கருத்துத் தொடர்பு” என்ற அடிப்படையில் வித-விதமான நிலைகளைப் பெறுகிறது. இன்னும் ஒன்று – கவிதையில் வரி- சப்த அடிப்படையில் நகர்கிறது என்ற பிரமையில் மயங்காமல் வரிக்குவரி “அர்த்தம்” தொடர்கிறது என்பதையும்  ஞாபகத்தில் வைத்துக் கொண்டு வாசித்தால் “புரியவில்லை” என்ற பிரச்னை தலை காட்டாது! ஆனால் படிமம் மாத்திரமில்லை கவிதை, உயிரின் துடிப்பு உணர்ச்சி வேகத்தில் இங்கு கவிதையாக மிளிர்கிறது. அனுபவத்தின் பல குரல்களை இங்கு கேட்கலாம். அவற்றில் சில வருமாறு:

மனிதன்தான் வாழ்க்கைக்கு, இயற்கைக்கு, ஏன் சாவுக்குக்கூட அர்த்தம் கொடுக்கிறான். (இறப்புக்கு முன் சில படிமங்கள்) கலைஞனுக்கு அனுபவத்தின் வெளிப்பாடு மாத்திரம் போதும். (எதிர் கொள்ளல்) இந்த நிற்கும் பொழுது கூட எல்லாவற்றையும் உள்ளடக்கிக் கொண்டு ஜ்வலிக்கிறது. (இப்பொழுது)

இப்படியாகச் சொல்லிக்கொண்டே போகலாம். முன்னர் கூறிய மாதிரி – இவற்றில் எல்லாம் மனித குலத்தின் மாறாத புராதனமான குரல் மிகப் புதுமையாக வருகிறது. ஒரு சமயம் கூறிய மாதிரி மிகப் புதியதின் பின் மிகப் பழையதின் சாயை காணப்படுகிறது.

சில உதாரணங்கள் :-

ஒரு யுகம் வேண்டும் முகம் தேட அய்யப்ப பணிக்கர்
மீட்சிக்குப் பயனற்றுப் போயினும் தாறு மாறாய்க் கிடக்கும்
வார்த்தைகளை எழுப்ப வேண்டும் உலுக்கி.
”புத்தகங்களை விட்டுச் சென்றவன் தனக்கு”
என்று ஒரு பெண் சொல்லலாம்.
இந்த வரிகள் உன்மனதின் கேள்வியாகும் நேரம்
என்னுருவம் எங்கோ தொலைவில் கல்மரம்.

***

நன்றி: ஆபிதீன் பக்கங்கள்

அறிந்த நிரந்தரம்

ரேடியம் முட்களெனச் சுடர்விடுகிறது விழிப்பு.
இரவெனும் கருப்புச் சூரியன்
வழிக் குகையில் எங்கோ சிக்கித் தவிக்கிறது.
நெட்டித் தள்ளியும் நகராத காலம்
எண்ணற்ற நத்தைகளாய்க் கூரையில் வழிகிறது.
அரைத் தூக்கத்தில் விழித்த காகம்
உறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக்
கேட்காமல் மறதியில் கரைகிறது.
இதோ வந்தது முடிவென்ற
சாமச் சேவலின் கூவல்
ஒலிக்கிறது ஒரு ஸிம்பனியாக.
இரண்டாம் தஞ்சம்
பொய் முகம் உலர்ந்தன ஏரிகள்.
நாதியற்றுப்போன நாரைகள்
கால்நடைகளின் காலசைப்பில்
கண் வைத்துக் காத்திருக்கும்.
எப்பொழுது பறக்கும் வெட்டுக்கிளிகள்?
தன் புதிய அறைச்சுவர்களுடன் கோபித்த
மனிதன் ஒருவன்
ஒட்டடை படிந்த தலையுடன்
வாசல் திறந்து வருகிறான்
கோதும் விரல்களிடம்.
காயும் நிலவிலும் கிராமக் குடிசை
இருள் மூலைகள் வைத்திருக்கும்
மறக்காமல்
மின்மினிக்கு.
வாழும் பிரமைகள்
காலம் அழிந்து
கிடந்த நிலையில்
கடல் வந்து போயிருக்கிறது.
கொடிக்கம்பியும் அலமாரியும்
அம்மணமாய்ப் பார்த்து நிற்க
வாசலில் மட்டும் பாதம் தட்டி உதறிய மணல்.
நினைவின் சுவடாய்  உதட்டில் படிந்த கரிப்பும்
காற்றில் கரைந்துவிட
வந்ததோ எனச் சந்தேகம் கவியும்.
பெண்ணுடல்  பட்டுக் கசங்கிய ஆடைகள்
மறந்த  மனதின்
இருண்ட மூலைகளினின்று
வெளிப்பட்டு
உடல் தேடி  அலைவதால்
எங்கும் துணியின் சரசரப்பு.
அன்று பக்கவாட்டில்  நடந்து  வந்த மஞ்சள் நிலா
தசைகளின் சுடரை
நகல் எடுக்க முயன்று
கோட்டுக் கோலங்களைச் செதுக்கியது.
இறந்த நாள்களின்
குளிர் நீளக் கைகள்
நீண்டு வந்து
மறதியைக் கொண்டு தூர்த்துவிட
கற்பனைக்கும்  சொந்தமில்லை
கோலங்கள்.

அறிந்த நிரந்தரம் -பிரம்மராஜன் முதல் கவிதைத் தொகுதி - பிற கவிதைகள்

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் on July 18, 2012 at 1:34 PM said...

உங்களின் தளம் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...
வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/07/Tamil-Stories.html) சென்று பார்க்கவும். நன்றி !

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்